Tuesday 2 May 2017

தேவரின் மக்கள் செல்வாக்கு

       காங்கிரசின் தேர்தல் சவடால்களும் தேவர் பெருமகனாரின் பிரமாண்ட வெற்றியும்.

தேவர் அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்கு இராஜாஜியும் காமராசரும் எவ்வளவோ முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

1952ல் தேவர் அவர்கள்  முதுகுளத்தூர் MLA பதவியை வைத்துக் கொண்டு, தான் வெற்றி பெற்ற அருப்புக்கோட்டை  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தலில் போட்டியே இடாமல் கொல்லைப்புற வழியில் முதல் அமைச்சராக ஆன  மூதறிஞர் இராஜாஜி அவர்கள் அறைகூவல் விடுக்கிறார். காங்கிரஸ் சார்பில் இராஜாத்தி குஞ்சித பாதம் போட்டியிடுகிறார். பார்வர்ட் பிளாக் சார்பில் எம்.டி.இராமசாமி செட்டியார் போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. தேவருடைய வேட்பாளரை தோற்கடித்தே தீருவது என காங்கிரசார் கங்கணம் கட்டி வேலை செய்தனர். இராஜாஜியோ இன்னும் ஒரு படி மேலே சென்று , " நான் வேண்டுமென்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். நான் வேண்டாம்  என்றால்  யாருக்காவது ஓட்டு போடுங்கள் " என பிரச்சாரம் செய்கிறார். பொதுத் தேர்தலில்  அன்றைய முதல்வர் குமாரசாமி இராஜாவையே தோற்கடித்த தேவருக்கு இராஜாஜி எம்மாத்திரம்.  அத்தனை அதிகார துஷ்பிரயோகங்களையும்  மீறி பார்வர்ட் பிளாக் பிரமாண்டமான வெற்றியை ஈட்டுகிறது. சவால் விட்டு பிரச்சாரம் செய்த காங்கிரசை மண்ணைக் கவ்வச் செய்தார் தேவர் பெருமகனார். இத்தனைக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை அடித்து நொறுக்குகிறார்.

இதே போல் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் . இம்முறை MP பதவியை வைத்துக் கொண்டு MLA பதவியை   ராஜினாமா செய்கிறார். பார்வர்ட் பிளாக் சார்பில் சசிவர்ணத் தேவர் நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் சார்பில் பாஸ்கரன் சேர்வை. தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. இம்முறையும் தேர்தல் களம் யுத்த களமாகி விட்டது. இம்முறை காமராசர் முதல்வர் . காங்கிரசினுடைய பலத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயம். அமைச்சர்கள் பட்டாளம் களம் இறங்கியது. பக்தவச்சலம், சி.சுப்ரமணியம், கக்கன் இன்னும் பலர் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். கூடுதலாக பள்ளர்கள் ஓட்டைப் பிரிக்க இமானுவேல் சேகரன் வேறு. தேர்தல் களம் என்பது மாறி தேவரின் செல்வாக்கா? அல்லது ஆளும் காங்கிரசின் , காமராசரின்  செல்வாக்கா ? என்ற மோதலாகவே இந்த இடைத் தேர்தல்  மாறிப் போனது.

பார்வர்ட் பிளாக் கட்சியைத் தோற்கடிக்க அரசியல் சித்து விளையாட்டுகளும் பித்தலாட்டங்களும்  அரங்கேறின. ஆம் நண்பர்களே! பார்வர்ட் பிளாக் எப்பொழுதும் சிங்கம் சின்னத்திலே போட்டியிடும் . சின்னத்தை மாற்றி விட்டால் தோற்கடித்து விடலாம் என்று ஆள்வோர் நினைத்தனர்.  சசிவர்ணத்தேவருக்கு சின்னத்தை மாற்றி யானை சின்னத்தையும் சந்திரபால் என்பவருக்கு சிங்கம் சின்னத்தையும் ஒதுக்கினர். இவர் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்.  எத்தனையோ அடாவடித்தனங்களையும் அக்கிரமங்களையும் காங்கிரசார் செய்தனர். தேவரின் தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகள். போலீசு அச்சுறுத்தல்கள். தேர்தல் எப்படியோ நடைபெற்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பார்வர்ட்  பிளாக் அமோக வெற்றி பெற்றது. ஆம் சசிவர்ணத் தேவர் வென்றார். பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை  விட கூடுதல் வாக்குகள் கிடைத்தன. தேவர் திருமகனாரை எதிர்த்தவர்கள்  என்ன ஆவார்கள் என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் உணர்த்தியது.

பசும்பொன் பெருமகனாரின் இந்தச் செல்வாக்கை இறுதி வரை யாராலும் அசைக்க முடியவில்லை நண்பர்களே! தேவருக்கு அப்படி ஒரு மகத்தான மக்கள் செல்வாக்கு இருந்தது. காங்கிரசின் சவால்களும் சவடால்களும் தேவரின் மக்கள் செல்வாக்கின் முன் தவிடு பொடியாக்கப்பட்டது என்பதே வரலாறு.

இத்துடன் 1957 இடைத்தேர்தலில் சிங்கம்  சின்னம் மாற்றப்பட்டதற்கான  ஆதாரமாக வாக்காளர் படிவத்தை இணைத்துள்ளேன்.

ஆதாரம் உதவி:

பேரா.க.செல்வராஜ்
நக்கீரன்

No comments:

Post a Comment