Saturday 11 March 2023

அரசாங்கத்தின் அட்டுழியம் - தேவர் சட்டசபை பேச்சு

   
திறமை, சக்தி, சர்வீஸ் இதைப் பார்த்து உத்தியோகம் கொடுக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. உத்தியோக உயர்வுக்கு குணம், திறமை, சர்வீஸ் வைகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்காமல் தங்களுடைய சொந்தம், ஜாதி, இதர வருவாய் இருந்தால் அவர்களுக்கு உயர்வு கொடுக்கப்படும். தற்போதிருக்கும் அரசாங்கத்திலே இவ்வித காரியங்கள் நடைபெறுவதற்கு யாதொரு விதமான தங்கு தடையுமேயில்லை. இவைகளைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - இவ்வளவு அக்கிரமங்களைப் பற்றி எழுத வேண்டுமானால், காகிதம் போதாது. இவ்வதிகார துர்வினியோகத்தைப் பற்றியும், அட்டூழியங்களைப் பற்றியும் எழுதுவது என்றால் என் கைகளுக்கும் வலிமை போதாது. உத்தியோகம் கொடுக்கப்படும் லட்சணமும், உயர்பதவி கொடுக்கப்படும் அவலட்சணங்களும் இச்சர்க்காரில் இவ்விதம் இருக்க, இந்நாட்டில் வியாபாரம் போகும் நிலைமையைப் பார்த்தால் சகிக்கமுடியாததாக இருக்கிறது, சத்தியத்தின் பேராலும், நேர்மையின் பேராலும், அகிம்சையின் பெயராலும் நடத்தப்படும் இந்த அரசாங்கத்திலே, வியாபாரங்கள், பாஸ்போர்ட் வாங்கும் நிலவரங்கள் மிக பாரபட்சமாகவும், அதன் காரணமாக நிலைமைகள் மிகச் சிக்கலாகவும் போய்விட்டன. இவ்வித காரியங்களால் தன் கட்சிக்காரர்களைக் காப்பாற்ற, கொழுக்க வைக்க முயற்சிக்கிறது இந்த சர்க்கார். அதனால் ஆளும் கட்சியே தரத்தில் சிதைவுபடுகிறது. அதன் நிமித்தமாக மக்கள் வதையுறுகிறார்கள். அதன் காரணமாக தேசமே சிதைந்துவிட்டது. இதுதான் இன்றைக்கு நாட்டிலுள்ள நிலைமை. இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நன்றாக யோசிக்க வேண்டும் சர்க்கார். அடியேன் சொன்னதைக் குறித்து ஆயாசப்படுவதைக் காட்டிலும், நான் சொன்னதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறது என்று இவ்வரசாங்கம் உணருமானால், அதுவே நான் சொன்னதின் விளைவாக அவ்வட்டகாசங்களுக்கு ஒரு பரிகாரம் பலன் ஏற்படுவதற்கான நம்பிக்கை என்று தெரிவிப்பதுடன் நான் குறிப்பிட்ட விஷயங்கள் தவறு என்று எடுத்துக் காட்டப்பட்டால், அற்காகத் தலைவணங்கத் தயாராயிருக்கிறேன். #பசும்பொன்_தேவர்.

5.8.1955ல் சென்னை மாகாண (ஒற்றுபட்ட மாநிலம்) சட்டசபையில் பசும்பொன் தேவர் பேசியது.