Tuesday 2 May 2017

ஏழைகளின் தலைவர் பசும்பொன் தேவர்

தேவரைப் பற்றி படிக்கும் பொழுது ஒரு செய்தி வியப்பாக இருந்தது. எந்த பணக்கார தேவர்களும், பிற சமூகத்தைச் சார்ந்த பணக்காரர்களும்  தேவரின் பின்னால் அரசியல் ரீதியாக அணி திரளவில்லை. அது இராமநாதபுரம் சேதுபதியாகட்டும் இல்லை சிவகங்கை- புதுக்கோட்டை சமஸ்தானங்களாகட்டும் அல்லது தென் தமிழ் நாட்டில் இருந்த எந்த தேவர் ஜமீனும் தேவரின் சோசலிச அரசியலை ஏற்று அவரின் பின்னால் வரவில்லை. அவரின் பின்னால் அணிதிரண்டவர்கள் எல்லாம் ஏழை, எளிய மக்கள் தாம். குறிப்பாக பள்ளர்களும், நாடார்களும்,தேவர்களும் தான். எந்த வகுப்பிலும் பணக்காரர்கள் தேவரின் பின்னால் அணி திரளவில்லை. என்ன காரணம். அவர் அரசியல் எழை எளிய மக்களுக்கான விடுதலை அரசியல். ஒரு சோசலிச இந்தியாவைப் படைப்பதே எமது இலட்சியம்  என்று முழங்கியவர். அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே என்று பறைசாற்றியவர் பசும்பொன் தேவர். நீங்கள் 1952 ல் பார்வர்ட் பிளாக்கின் தேர்தல் அறிக்கையையும், அவர்களின் கொள்கை அறிக்கையையும் படித்துப் பாருங்கள். அவர் கட்சியின் முழுப் பெயர் பார்வர்ட் பிளாக் (மார்க்சிஸ்ட்) என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அந்தத் தேர்தல் அறிக்கையில் எழுதுகிறார்," பார்வர்ட் பிளாக் கட்சிக்குப் பொதுத்தேதலில் அத்தனை பிரமை இல்லை. ஏனெனில் தேர்தலால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விடுவதென்பது அசாத்தியம். ஆனால், அதே சமயம் இந்தத் தேர்தலால் வயது வந்தோர் வாக்குரிமைக்கு  வசதிருப்பதால் தவறான ஆட்சியில் அவதிப்படும் மக்களுக்கு, அந்தக் கஷ்டங்களிலிருந்து விடுபட, ஒரு நெறியான நேர்மையான ஆட்சி அமைக்க, இந்தத் தேர்தல் ஒரு சரியான வசதி என்பதை பார்வர்ட் பிளாக் அசட்டை செய்து விடவில்லை. அதிக அக்கறையோடு வரவேற்கிறது"..

"இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் நிர்ணயம் இந்திய மக்களையும் அவர்களது முன்னேற்ற இயக்கங்களையும் நசுக்கிப் பூர்சுவாக்களுக்கு அடிமைப்படுத்தும் சாசனமே தவிர வேறில்லை".

"மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளை, மக்கள் விரும்பாத போது அப்பிரதிநிதித்துவ உரிமைகளைப் பறித்து வெளியேற்ற மக்களுக்கு ஜனநாயக விதிப்படி உரிமை வழங்கப்படும்". இப்படி ஒரு உறுதிமொழியைஇந்த நாட்டில் எந்தக் கட்சியாவது வழங்கியதுண்டா?

"நேரு சர்க்காரின் வெளிநாட்டுக் கொள்கை பலவீனமாயும், சுயமதிப்பற்றதாயும் இருக்கிறது. நடுநிலையின் பேரால் ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது அபிமானத்தோடு அவர்களின் துயரங்களைக் கலைந்து காப்பதிலேயே கவனமாயிருக்கிறது.
உலகம் இன்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டு நிற்கிறது. ஓன்று, அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு முதலிய கூட்டு வல்லரசு முகாம்.
மற்றொன்று சோவியத் ரஷ்யா. மக்களாட்சி நிலவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், புதிய சீனா, உலகின் பல பாகங்களிலுமுள்ள முன்னேற்ற இயக்கங்கள் இவைகளை கொண்ட முகாம்.
இந்த நிலையில் மூன்றாவது முகாமைப் பற்றி எவர் சிந்திக்கவும் பேசவும் செய்கிறார்களோ அவர்கள் உலகின் முன்னேற்ற இயக்கங்களுக்கு கேடு செய்ய கொல்லைப்புற வழியாக ஆங்கிலோ,அமெரிக்க முகாமுக்கு உதவி செய்கிறவர்கள் என்பது நிச்சயமான சங்கதி.
ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்திய முகாமுக்கு சரியான எதிர்ப்பு சக்தி நெறியும், நேர்மையும் கலந்த ஒரு உன்னதமான அமைப்பு பார்வர்ட் பிளாக்கின் திட்டம்.
இதற்கும், குறிப்பாக மனித சுதந்திரத்திற்கும் ஆங்கிலோ, அமெரிக்க சக்தி பெரிய விரோதி என்பது தீர்மானம் . எனவே நமக்கும் அவர்களுக்கும் இணைப்பு என்பது நினைக்கவொன்றாத சம்பவம்.
உலகின் சாமான்ய மக்களால் புகழப்படும் ரஷ்யா, புதிய சீனா முகாமின் பக்கமே நமது அனுதாபம் சார்ந்து நிற்கும்

இப்படிப்பட்ட புரட்சிகர நிலைப்பாடுகளினால் தான் எந்த பணக்காரரும், மிட்டா மிராசும், ஜமீன்தார்களும்  தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரவில்லை. இவர்கள் அனைவரும் காமராசரின் காங்கிரஸ் கட்சியில் தஞ்சம் அடைந்தனர்.

No comments:

Post a Comment