Wednesday 3 May 2017

சாகாக் கவி’ மகாகவி பாரதி'


'‘சாகாக் கவி’ மகாகவி பாரதி'  என்ற தலைப்பில் நேதாஜி இதழில் பசும்பொன் தேவர் எழுதிய கட்டுரை. (நேதாஜி இதழ் வார இதழாக 1949 முதல் 1951 வரை வந்தது, கவுரவ ஆசிரியர்: பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்)

இருபத்தெட்டு வருடங்கள் லேசாகக் கழிந்து விட்டன, சாகாக் கவை பாரதியின் பிராணனைப் பறித்துக் கொண்டு போய்! ஆனால் இவ்வளவு சல்லிசாகக் கழியவில்லை அவர் வாணாட்களில் ஒன்றுகூட!
     அநுபவிக்க முடியாத அடக்குமுறையையும், ஆதரவில்லாத தனி நிலையையும், உணர்ச்சியால் சமாளித்தே தான் அவர் சாகாக் கவிகளை உயிர்ச் சொற்களால் செய்து, தமிழ் பரம்பரைக்குத் தரித்து, அழகுபடுத்திவிட்டு மறைந்தார்! ஆயினும், அவர், அன்று ஒதுக்கப்பட்டார்; இன்று துதிக்கப்படுகிறார்! இன்று பாரதி நாள்(செப்டம்பர் 11).
       தமிழ்ச் சமுதாயம் தன்மானத்தோடு இன்றைய அரசியல் பாதையில் முன்னேறுவதற்கு, அன்று சுவடு வகுத்துக் கொடுத்தவர் பாண்டிய நாட்டு பாரதி என்ற அளவில் நாம் உணருகிறோம் – கொண்டாடுகிறோம்! ஆனால், 1921 – செப்டம்பர் 11-ல் செத்துப்போன பாரதியின் சடலத்தோடு, சுடுகாடுவரை சென்றுவரக்கூட நமது சமுதாயத்தில் மூன்றேமூன்று பேர் தான் தேறினர்! அவ்வளவு வரை, அவசியமற்றவராக – அரசியலாரின் அதிருப்தியைப் பெற்றவராக – நம்மால் நினைக்கப்பட்ட – நீக்கப்பட்ட – பாரதியார்தான், இன்று மண்டபதாரியாகி, மகாக்கவி என்ற மரியாதையோடு பாராட்டப்படுகிறார்; ஆயினும் தமிழ் நாட்டுச் சரிதையில், பாரதியைக் கைவிட்ட சம்பவம், கேவலமான தரத்தோடுதான் தைக்கப்பட்டிருக்கிறது! பாரதியாரின் நினைவு நாளிலே, அவருடைய சேவையைப் பற்றி நினைத்துப் பூரிக்கும்போது, அவருக்கு நாம் செய்த பாதகத்தையும் நினைத்து வருந்தாமல் தீரவில்லை.
        பாரதியார் செய்த சேவை, இன்று நமக்கு எவ்வளவு வரை உதவி செய்கிறது என்பதை நினைக்கையில், அவர் செய்த சேவை அதிகம்; அதை உபயோகித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு நமது திறமையும், தேர்ச்சியும் குறைவு; என்ற முடிவுதான் கிடைக்கிறது. ஏன்?
        பாரதியார் செய்த சேவையில் திரண்டுள்ள சாதனைகளில் பாதியைக்கூட பயன்படுத்திக்கொள்ளும் கொள்ளும் நிலமைக்கு நாம் இன்னும் போகாமலே நிற்கிறோம்! ஆதனால்தான் நாம் நினைவுநாளைக் கொண்டாடுவதோடு மட்டும் நின்று கொண்டு விட்டோம் – அவருடைய லட்சிய சாத்தியத்தை தேடியடையும் முயற்சியை விட்டுவிட்டு!
        பாரதியார் வெறும் வீரக்கவி மட்டுமல்ல; மக்களைப் பாட்டினால் கிளர்ந்தெழச் செய்துவிட்டு, அவர்களின் உணர்ச்சியை உபயோகித்துக் கொள்ளும் வழியையும் திறந்து காட்டிய திறமையான ஒரு சேனாவீரருங்கூட அவர்! மக்களை வீர உணர்ச்சியால் குமுறி எழச் செய்து விட்டு, பிறகு அதை நடத்துவதற்கு வழி சொல்லாமல் விட்ட கவி, பாரதியின் கவிதைக் குவியலில் இருக்கவே இருக்காது! தமது தேசாவேசத்திற்கு அரசாங்கமும் தடை செய்தது – சொந்த மக்களும் பயந்து பதுங்கினர் – பொங்கிய உணர்ச்சியை செயலால் வடிக்க வசதியற்று கவிகளால் வார்த்தார்! கொஞ்சு வசதி இருந்திருந்தாலும் அவர் அன்றே முதல்தரமான சேனாதிபதியாக மாறி, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, 1947 – ஆகஸ்ட் 15-ஐ 1920 – இலேயே கொண்டு வந்திருப்பார்! அவ்வளவு ஆக்க சக்தி அவருக்கு இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள, அவர் செத்து தீர வேண்டியிருந்தது!
        அவர் அசல் சமதர்மி! பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு, அவர்கள் எல்லோரையும் பலவந்தமாய் ஏழைகளாக்கி தெருவில் விட வேண்டுமென்ற கீழ்நோக்குள்ள சமதர்மி அல்ல; மிகச் சிலப் பணக்காரர்களைப் போல், மிகப் பல ஏழைத் தொழிலாளி – பாட்டாளிகளையும் உயர்த்த வேண்டுமென்ற உன்னத நோக்கக் கொண்ட சமதர்மி!
       இதை காரியாம்சையில் நடத்திக் காட்டும் ஒரு இன்ப அரசை அமைக்க வேண்டுமென்பது பாரதியின் ஆசைமட்டுமல்ல – முயற்சியும் – இப்படி ஒரு அரசை அமைக்கும் விதத்திற்கு, பாரதி, தமது சிரஞ்சீவி கவிதைகளில் விவேகமான வழியை வகுத்து வைத்திருக்கிறார்! அதை, எல்லோரும் ஓர் குலம் – எல்லோரும் ஓர் இனம் – எல்லோரும் இந்நாட்டு மன்னர் – என்று கைவீசிப் பேசுகிற கட்டம் வரைதான் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, பாரதி முயன்ற சமதர்ம அரசை அமைக்கும் கடமையை நாம் இன்னும் தொடவில்லை. எனவேதான் எல்லோரும் தனித்தனி குலம் – எல்லோரும் பல பல இனம் – எல்லோரும் இந்நாட்டு(முதலாளித்துவ) அடிமைகள் – என்ற அநாகரிக இயலில் நாம் சுழன்று சுருங்குகிறோம்! பாரதியாரின் சமதர்ம சித்தாந்தத்திற்கு, எல்லோரும் ஓர் குலம் என்ற வரியே சரியான உரைகல்!
      பாரதியாருக்கு மனிமண்டபம் கட்டிக் கொண்டாடுகிற நாம், அவருடைய அபிலாசையை நிறைவு செய்ய உத்தரவாதமளிக்காமலும், முயற்சி செய்யாமலும் விடுவது அவரைப் பட்டினி போட்டுக் கொன்றதைவிடக் கொடுமை!
       எல்லோரும் இந்நாட்டு முதலாளித்துவத்தின் அடிமைகளாக இருக்கிற சுதந்திர இந்தியாவை  பாரதியார் நினைக்ககூட இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாய், குல பேதம் ,இன பேதம் இல்லாத ஏக சமுதாயமாய் இயங்குகிற இந்தியாவை உண்டாக்குகிறவரை பாரதி நாள் கொண்டாட்டமெல்லாம் வெறும் சாரமற்ற சம்பிராயதமே!
       கவியின் லட்சிய வெற்றிக்கு உறுதி தர மனமற்று கவிதைகளின் விஷயசுரப்பிற்காக மட்டும் பாராட்டுவது - கொண்டாடுவது என்பதெல்லாம் கவிஞருக்கு செய்யும் கைமாறாகாது.
        இன்றைய நமது சர்க்காரின் இயல்புகளைக் கவனிக்கையில் எல்லோரும் ஏக அந்தஸ்தாக வாழும் ஒரு சந்தர்ப்பம் இந்தியாவிற்கு இந்த சர்க்காரால் வாய்க்குமா என்பதிலேயே சந்தேகம் தோன்றுகிறது! மேலும் பாரதியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவரின் கோரிக்கை வெளிநாட்டு இரவல் அமைதிக்கு உலை வைக்கும் செயல் என்ற அளவிலேயே நமது சர்க்காருக்குப் பட்டு பாரதியை வேறூவிதமாய் நடத்தியிருக்கும் என்ற எண்ணத்தையும் எழுப்புகிறது.
       எனவே பாரதி விழாவில் கலந்து கொள்ளும் நமது சர்க்காஅர் அதிகாரிகள் ஏழை, கோழையற்ற இன்ப இந்தியாவை வெகு விரைவில் உண்டாக்கி, உங்கள் அபிலாஷைக் கொதிப்பை ஆற வைக்கிறோம்" என்ற பிரதிக்ஞையைச் செய்து கொள்வார்களென்று நம்புகிறோம்! இப்படிச் செய்வதுதான் பாரதி விழாவை சிறப்பிப்பத்ற்கு அரசாங்கத்தார் கலந்து கொள்வதில் அர்த்தமிருக்க முடியும்.
---பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்---

No comments:

Post a Comment