Tuesday 23 January 2018

பாகவதருக்காக மனம் மாறிய தேவர்

1957-ம் ஆண்டு கேரளாவின் நொச்சியூரில் சுவாமி சித்தானந்தர் ஆசிரமத்தில் ஒரு ஆன்மீக விழா நடந்தது. அங்கே விநாயகர் மற்றும் தெய்வங்களுக்குக் கோவில் இருந்தது. பித்துக்குளி முருகதாஸ், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றோர் கலந்துகொண்டனர். விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவாற்ற தேவரும் அழைக்கப்பட்டார்.

முதல்நாள் தேவர் காரில் திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு பயணம் சென்றார். மறுநாள் இரவு ஒன்பது மணிக்கு அவர் 'பராசக்தி' பற்றி மூன்று மணிநேரம் சொற்பொழிவாற்றினார். பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு அவரது பேச்சைக் கேட்டனர். அப்போது நாத்திக வாதங்களை சுக்குநூறாக உடைத்தார். அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் மதுரைக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார்.

மறுநாள் தேவர் புறப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் அவரைச் சந்திப்பதற்காக பாகவதர் அங்கே வந்தார். பாகவதருக்கு அப்போது கண் பார்வை இல்லை. அவர் தேவரை பார்க்க விரும்பினார். தேவரிடம் வந்து அவரை தொட்டுப் பார்த்தார்.

''தேவரய்யா தங்களை காணவேண்டும் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் அது முடியவில்லை. எனக்குப் பார்வை இல்லாவிட்டாலும் தங்கைளைத் தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே என் பாக்கியம்தான். ஐயா, நான் முருகன் மீது ஒரு பாட்டுப் பாடுகிறேன். தாங்கள் அவசியம் எனது பாட்டைக் கேட்க வேண்டும்'' என்றார்.

''தேவரோ, நான் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பயண அவசரத்தில் தங்களது பாட்டை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன். வருத்தப்பட வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துக் கொள்வோம்'' என்றார்.

பாகவதர் மிகவும் வருத்தப்பட்டார். ''பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு, நான் மறுத்த காலம் உண்டு. இப்போது நானே தங்களிடம் பாடுகிறேன் என்று வலியக் கேட்டுத் தாங்கள் மறுக்கிறீர்கள். இதுவும் என் காலக் கிரகம்தான்'' என்றார்.

தேவரின் மனம் மாறியது. ''ஊருக்குத் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை. நீங்கள் பாடுங்கள்'' என்றார்.

உடனே முருகா என பாடத் தொடங்கினார். தேவரும் பாகவதரின் பாட்டைக் கேட்டு ரசித்தார். பாகவதரும் பத்துப் பாடல்களைப் பாடினார். ரயில் நேரம் எல்லாம் தவறிவிட்டது. தேவரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

பாகவதரோ ''முருகன் மீது பாடினேன். அதுவும் நடமாடும் முருகன் முன்னாலேயே பாடினேன். என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது'' என்றார்.
-"பசும்பொன் சரித்திரம்" நூலிலிருந்து...

(எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி தெரியாத இளைஞர்களுக்கு, அவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முந்தைய காலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் பாடத் தெரிந்தால்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். சிறந்த பாடகராக இருந்த பாகவதர் அக்கால சூப்பர் ஸ்டாராக இருந்தார். )

No comments:

Post a Comment