Tuesday, 9 January 2018

போராளி பசும்பொன் தேவர்


முத்துராமலிங்கத்தேவர் அளவு கடந்த தெய்வபக்தி உள்ளவர். மற்றவர்களுக்கும் அந்த பக்தி வேண்டும் என்று சொன்னார். தங்களுக்குத் தெய்வ பக்தி இருக்கிறதோ, இல்லையோ மற்றவர்களுக்கு அந்தப் பக்தி இருக்க வேண்டும் என்று சொல்கிற சிலரைப்போல் அல்ல அவர். தனக்கும் தெய்வபக்தி இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் தெய்வ பக்தி இருக்க வேண்டும் என்று நினைத்தவர் அவர். என்றும் அவர் ஏழை மக்களின் மனதில் இடம் பெற்றவர். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய ஆட்சியை ஆதரிப்பார் என்று என்னால் சொல்ல முடியாது.

ஆங்கிலேயர் ஆண்ட நேரத்திலும் அவர்களின் ஆட்சியை எதிர்த்தார்.  அவருடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும் ராஜாஜி ஆண்ட போது அவரது ஆட்சியையும் எதிர்த்தார். இப்படி அதிகாரத்தில் இருந்தவர்களை எல்லாம் எதிர்த்தே பழக்கப்பட்டவர் தேவர். இன்றைய தினம் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்? என்று என்னால் ஊகிக்க முடிகிறது.

ஒரே கட்சியைச் சேர்ந்த ராஜாஜி முதன்மந்திரி, தேவர் சட்டசபை உறுப்பினர்,  அப்படி இருந்தும் தேவர் மீது ராஜாஜி வழக்குப் போட்டார். அவர் அப்படிச் செய்வதை நாங்கள் எதிர்த்தோம்.ஒரு ஜாதிக்காக என்று இல்லாவிட்டாலும், அந்த ஜாதியினர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையை (கைரேகைச் சட்டம்) எதிர்த்துவந்தார். எங்கே அடக்குமுறை ஏவப்பட்டாலும் அங்கே அதனை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் முத்துராமலிங்கத்தேவர். அவருடன் இணைந்து நாங்களும் அடக்குமுறையை எதிர்த்தோம்.

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இருக்க முடியாது. நிரந்தரமான எதிரிகளும் இருக்க முடியாது. இது ஓரளவுக்கு உண்மை.  ராஜாஜி - காமராஜ் போல் அரசியலில் விரோதிகளாக இருந்ததை பார்க்க முடியாது. ஆனால் இன்று அவர்கள் ஒன்று கூடிவிட்டார்கள்.
முதுகுளத்தூர் சம்பவத்தின் போது காமராஜைக் காக்க வேண்டிய பொறுப்பு அப்போது நிதிமந்திரியாக இருந்த சி.சுப்ரமணியத்திற்கு இருந்தது. காமராஜ் செய்த செயலுக்கெல்லாம் சி.சுப்ரமணியம் பழி ஏற்க வேண்டியதிருந்தது. அதனால் எனக்கும் சி.சுப்பிரமணியத்திற்கும் இடையே வாக்கு வாதங்கள் எல்லாம் நடந்தன.

ஆனால் இன்று சி.சுப்பிரமணியம்  காமராஜை எதிர்த்து விமர்சனம் செய்துவிட்டு, இங்கே வந்து நம்முடன் உட்கார்ந்திருக்கிறார். எல்லாக் கட்சிகளுக்குமே இன்று ஒரு சோதனை வந்திருக்கிறது. என்னவென்றால் முத்துராமலிங்கத்தேவர் எந்த ஏழைகளுக்காக பாடுபட்டாரோ, அந்த மக்களின் கஷ்டத்தைப் போக்கப் பாடுபடுவதே அவருக்கு செய்யும் சிறப்பு ஆகும்.- எம்.கல்யாணசுந்தரம்

21-11-1970 ல் கலைவாணர் அரங்கில் பேசியது.

No comments:

Post a Comment