Tuesday 23 January 2018

தேவர் சிலைக்காக எம்ஜிஆர் கடிதம்

"பசும்பொன் தேவர் திருமகனார் மீது அதிகம் அன்பு கொண்டவர் எம்.ஜி.ஆர்"

எம்.ஜி.ஆர் அவர்கள் சசிவர்ணதேவருக்கு தேவர் சிலை அமைக்க எழுதிய கடிதம் பின்வருமாறு
***********************************

திரு. டி.எல். சசிவர்ணத்தேவர் அவர்களுக்கு

பேரன்புடையீர்! வணக்கம்
காலஞ்சென்ற தென்பாண்டித் திலகம் தியாகசீலர் பசும்பொன் ஐயா அவர்கட்கு உருவசிலை ஒன்று அமைப்பதற்குகான உயரிய முயற்சியிவ் தாங்கள் ஈடுபட்டிருக்கும் செய்தியை ஏடுகளில் படித்துப் பேருவகையுற்றேன்.
வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காவும் அரும்பணியாற்றி தியாகத்திற்கும், நல் அறத்திற்கும், சிறந்த ஒழுக்கத்திற்கும், சீரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய அப்பெரியாருக்கு நன்றியுள்ள மக்கள் செய்ய வேண்டிய பணிகளில் முதற்பணியாகும் சிலை அமைப்பது. அதீதகைய சிறந்த பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பது காலச் சிறப்புடையதாகும.

அந்த தியாக சீலரை இயற்க்கை அணைத்துக்கொண்ட அந்நாளில் நானும் நேரில் கண்டு அப்பெரியாருக்கு என்னுடைய இறுதி வணக்கத்தைச் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்ததை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நாளாக எண்ணி எண்ணி உணர்ச்சி கொள்கிறேன்.

இலட்சோப லட்சம் இதயங்களில் ஆட்சி செலுத்தும் அப்பெரியாருக்கு என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் செலுத்திக் கொள்ளும் முறையில் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற முயற்சிக்கு என்னால் இயன்ற பங்கையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
அமைக்கவிருக்கும் உருவச் சிலைக்கு ஆகும் செலவு முழுவதையும் எனது சொந்தப் பொறுப்பில் நானே ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறேன்.

அந்தத் தியாக சீலருக்கு என் உள்ளத்தில் அடங்கிக் கிடக்கும் சிறந்த அன்பைச் செலுத்துவதற்கு எனக்கு வேறு வாய்ப்புகள் இல்லை யாதலால் என்னுடைய இந்த வேண்டுகோளைத் தாங்களும் குழுவில் உள்ள மற்ற நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். ஏற்றுக் கொள்வீர்களென நம்புகிறேன்.

தாங்கள் கருணை கூர்ந்து பசும்பொன் ஐயாவினுடைய சிறந்த முழு உருவப்படம் ஒன்றினையும் எவ்வளவு பெரிய அளவில் சீலை அமைக்கலாம் என்பது போன்ற தங்களின் சீரிய கருத்தினையும் உடனே எனக்குத் தெரிவித்தால் மிக விரைவில் சிலை வடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய விவரம் கிடைத்தவுடன் சிறந்த சிற்பிகளுடன் தொடர்பு கொண்டு காலந்தாழ்த்தாமல் சிலை செய்ய ஏற்பாடு செய்ய விரும்புவதால் விரைவில் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இது சம்பந்தமாகத் தங்களிடம் நேரில் கலந்து பேச விரும்புகிறேன். எப்பொழுது எங்கே சாத்தியமாகும் என்பதையும் தெரிவித்து வேண்டுகிறேன்.

அன்பன்,
எம்.ஜி.ராமச்சந்திரன்
***************************************

"பசும்பொன் தேவர் புகழ் உயர்த்திட பல நல்ல காரியங்கள் செய்தார் எம்.ஜி.ஆர்"

*தேவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டு தேவருக்கு அரசு மரியாதை அளித்தார்.
*தேவர் உருவப்படத்தை சட்டமன்றத்திலே வைத்து தேவருக்குப் புகழ் மகுடம் சூட்டினார்.

*அரசு அலுவலகங்கள் கட்டடங்களில் தேசியத் தலைவர்களோடு தேவர் படமும் இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து தேவரின் தேசிய அந்தஸ்தை உயர்த்தினார்.

*பள்ளி பாடப் புத்தகத்திலே தேவர் வரலாற்றைச் சேர்த்து வருங்கால சந்ததியினரும் தேவர் சரித்திரத்தை தெரிந்து கொள்ள வகை செய்து தேவரின் தியாகத்திற்கு மதிப்பளித்தார்.

*இவை எல்லாவற்றிற்கும் மேலாக மண்ணும் விண்ணும் உள்ள வரையில் தேவர் புகழ் அழியாத அளவில் தேவர் பெயராலே மாவட்டம் அமைத்தார் ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று பெயர் வைத்து தேவர் என்பதனை விட்டுவிட்டார்.

*அவருக்கு பின்னாலே ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா எம்.ஜி.ஆர் வைத்த பெயரை முழுமைப்படுத்தி "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மாவட்டம்" எனப் பெயர் சூட்டி தேவரை தெய்வமாக மதிக்கும் மக்களின் மனம் மகிழ செய்தார்.

No comments:

Post a Comment