Monday 29 January 2018

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது!

பசுமலையில் படிக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள திருப்பரங்குன்றத்திற்குப் போவார் முத்துராமலிங்கம். முருகப் பெருமானை வழிபடுவார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சித்தர்களுடன் மணிக்கணக்கில் உரையாடுவார். அவர்களிடம் சில சித்து வேலைகளைக் கற்றுக் கொள்வார்.

அப்படி ஒரு முறை, அவர் திருப்பரங்குன்றத்துக்குப் போய் திரும்பும்போது தான் அந்த சம்பவம் நடந்தது. வழியில் பெருங்கூட்டம். கூட்டத்துக்கு நடுவே ஒரு பாதிரியார் மதப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

'இயேசு கிருஸ்துவே உண்மையான ஆண்டவர். அவர் பாவிகளை விருப்பத்தோடு அழைக்கிறார். பாவங்களை மன்னிக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மோட்ச ராஜ்ஜியத்தை அளிக்கிறார்.'

முத்துராமலிங்கமும் கூட்டத்தோடு நின்று வேடிக்கை பார்த்தார். மிக ஆவேசமாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் அந்த மத போதகர்.

'இங்கே பாருங்கள்! இது என்ன?'

'கல்!'கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

'இதுவும் கல்தான். கோவிலில் நீங்கள் வழிபடும் சிலையும் கல்தான். அப்படி இருக்க, ஒரு கல்லைப் போய் நீங்கள் கடவுள் என வழிபடலாமா?'

இப்படி சொல்லிவிட்டு பாதிரியார் கூட்டத்தை எகத்தாளத்தோடு சுற்றிப் பார்த்தார்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு முத்துராமலிங்கத்துக்குப் பொறுக்கவில்லை.

'ஐயா! எனக்கு ஒரு சந்தேகம்!'

'கேள் தம்பி!'

'உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா?'

'இருக்கிறார்கள்.'

'மனைவி?'

'இருக்கிறார்.'

'சகோதரிகள்?'


'உண்டு.'

'அப்படியானால், அவர்கள் எல்லோருமே பெண்கள் தானே! இவர்கள் எல்லோரையும் நீங்கள் ஒன்றுபோல்தான் பார்க்கிறீர்களா? ஒன்றுபோல்தான் நடத்துகிறீர்களா? அப்படிப் பார்க்கவோ, நடத்தவோ முடியாது. இல்லையா? அதுபோலத்தான் நாங்களும். ஒரு கல்லைச் சிலைவடிவில் தெய்வமாகக் காண்கிறோம். மற்றொன்றை வீடு கட்டப் பயன்படும் சாதாரணக் கல்லாகக் காண்கிறோம். மற்றொன்றை சாலை போடப் பயன்படும் சாதாரணக் கல்லாகப் பார்க்கிறோம்.'

பாதிரியார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது.

தலைகுனிந்திருந்த பாதிரியாரைப் பார்த்து முத்துராமலிங்கம் சொன்னார்;  'ஐயா! உங்களையோ, உங்கள் மதத்தையோ, கடவுளையோ இழிவுபடுத்த வேண்டும்மென்பது என் நோக்கம் அல்ல. அதே போல நீங்கள் பிற மத நம்பிக்கையை இகழ்வதும் தவறு. நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படிப் பேசினேன். நான் பேசியது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன், ' என்றார் சிறுவன் முத்துராமலிங்கம்.

*******************************
"தேவர் ஒரு வரலாறு" எனும் நூலிலிருந்து.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் மாணவ பருவத்தில் நடந்த நிகழ்வு. சிறுவயதில் நடந்த நிகழ்வை கூறுவதால் முத்துராமலிங்கம் என தேவரின் பெயரை நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தேவரின் சட்டப்படியான பெயர்.
"உ.முத்துராமலிங்கத்தேவர்" என்பதே ஆகும்.

No comments:

Post a Comment