முதுகுளத்தூர் கலவரம் சாதியா? அரசியலா? பகுதி 5:
1947 ஆகஸ்டு 15 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜவஹர்லால் நேரு பிரதமராக இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது.1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.நாடெங்கும் கம்யூனிஸ்டு தலைவர்கள்,தொண்டர்கள் காக்கா, குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு கடும் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு புகழிடமாக ஃபார்வர்டுபிளாக் இருந்தது.பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர்.தலைமறைவு தலைவர்கள் வாழும் இடமறிந்து இருந்த தொண்டர்கள் போலீஸூக்கு காட்டிக் கொடுக்க மறுத்த தொண்டர்கள் கேள்வி கேட்பாரற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட தலைவர்கள் மீது சதி வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளை போட்டது காங்கிரஸ் அரசு. இந்திய நாட்டில் காங்கிரஸ் என்ற எதேச்சாதிகார மனப்பான்மையோடு நேரு அரசு நடந்துக் கொண்டது.காட்டுமிராண்டி தர்பாரை கட்டவிழ்த்து விட்ட நேரு அரசு பிறகு கம்யூனிஸ்ட் தலைவர்களோடு சமாதானம் செய்து கொண்டது.இந்தியாவில் ரஷ்ய பாணி சோசலிச திட்டங்களை நடைமுறைப்படுத்த போவதாக பேசினார் நேரு.மாற்றுக் கட்சியினரை அடக்குமுறை மூலம் முடக்கி வைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு வந்தார். 1951-ல் கம்யூனிஸ்டு தடை நீக்கப்பட்டது.1951-1952-ல் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தான் வெற்றி பெற முடிந்தது.அதிலும் பல்வேறு அதிகார அத்துமீறல்கள்,ஊழல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன என்பதை அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டு கட்சியை அடக்குமுறை மூலம் கட்டுபடுத்தி கொண்ட நேரு ஃபார்வர்டுபிளாக் தலைவர்களை வேறு முறையில் அணுகினார். நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை, அவர் உயிருடன் இருக்கிறார் என்று பசும்பொன் தேவர் அறிவித்தது நாட்டில் பல அதிர்வலையை ஏற்படுத்தியது.நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் 'சலோ டெல்லி ' முழக்கத்தோடு இந்திய மண்ணை விடுவிக்க போராடிய போது "நேதாஜி இந்தியா வந்தால் நானே வாளேந்தி போராடுவேன்" என்று அறிவித்தார் நேரு.இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின்பு ஆங்கில, அமெரிக்க நேச நாடுகளை எதிர்த்து போரிட்டவர்கள் எல்லாம் யுத்தக் குற்றவாளிகளாக சொல்லப்பட்டனர். அந்த வகையில் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தியதை நாடு ஏற்கவில்லை.பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இந்த விசாரணை நடைபெற்றது. புலாபாய் தேசாய் இந்திய தேசிய இராணுவத்திற்கு பரிந்து பேசி வழக்காடினார். நாட்டின் எழுச்சியை உணர்ந்த நேருவின் கருப்புக் கோட்டுப் போட்டுக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவாக நின்றார். சந்தர்ப்பவாதியாக காட்சியளித்தார். நேதாஜி விமான விபத்து குறித்து தேவரும், சரத் சந்திர போஸூம் சொன்னதை நாடு கேட்டது.இதை முடிவுக்கு கொண்டுவர ஃபார்வர்டுபிளாக்கை பயன்படுத்த முயன்றார் நேரு.ஃபார்வர்டுபிளாக் தலைவர் கேப்டன் மோகன்சிங் பொதுச்செயலாளர் ஷூலபத்ரயாலஜி,ஜி.என். தில்லான், எல். என். மொய்த்ரா, ஷா நவாஸ்கான் போன்றோரை கொண்டு 'அடுத்துக் கெடுக்கும்' வேலையில் ஈடுபட்டார் நேரு.காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற ஃபார்வர்டுபிளாக்கை மீண்டும் காங்கிரஸில் இணைப்பது, ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் 4 பேருக்கு மத்திய கேபினட் மந்திரி தரப்படும்,மாநில நிலைமைகளுக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்படும். மத்திய உள்துறை, வெளிநாட்டு உறவு அமைச்சர் பதவிகள் தவிர பசும்பொன் தேவர் விரும்புகிற எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளலாம் என்று பேரம் பேசினார். நேருவின் தூதராக வந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஷூலபத்ரயாலஜி தேவரிடம் நேரில் வந்து பேசினார். தேவர் மத்தியக்குழுவை கூட்ட சொன்னார்.நாக்பூரில் ஃபார்வர்டுபிளாக் மத்தியக்குழு கூடியது. நேருவின் ஆசை முன் வைக்கப்பட்டது. விவாதம் நடைபெற்றது.இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஃபார்வர்டுபிளாக் என்ன காரணத்திற்காக நேதாஜியால் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் அப்படியே உள்ளது. இயக்கத்தை ஆரம்பித்த நேதாஜி உயிருடன் உள்ளார். அவரது கருத்தறியாமல் எந்த முடிவும் செய்ய முடியாது. நேரு கம்யூனிஸ்ட் கட்சியை அடக்குமுறை செய்து அச்சுறுத்தியது போல ஃபார்வர்டுபிளாக்கிற்கு பதவி ஆசை காட்டி பார்க்கிறார்.காங்கிரஸ் தவிர வேறு கட்சி இருக்கக் கூடாது என்னும் சர்வாதிகார நோக்கம் தெளிவாகிறது. எனவே ஃபார்வர்டுபிளாக் காங்கிரஸ் இணைப்பு நிராகரிக்கப் படுகிறது என்று முடிவு செய்தனர்.மத்தியக்குழு கூட்டம் முடிந்து தேவர் சென்னை வந்து சேர்ந்தார். கேப்டன் மோகன்சிங், ஷூலபத்ரயாலஜி உள்ளிட்ட ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் மத்தியக்குழுவின் முடிவுக்கு புறம்பாக நேருவை சந்தித்து காங்கிரஸோடு ஃபார்வர்டுபிளாக் இணைந்ததாக அறிவித்தனர்.இந்த அறிவிப்பு வெளியானவுடன் மீண்டும் ஃபார்வர்டுபிளாக் மத்தியக் குழு நாக்பூரில் கூடியது.3 நாட்கள் நடைபெற்ற மத்தியக்குழு புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்தது.கட்சியின் அகில இந்தியத் தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த ஹேமந்தகுமார் பாசு,பொதுச்செயலாளராக மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஹல்துல்கர் தேர்வு செய்யப்பட்டனர்.அதுவரை மத்தியக்குழு உறுப்பினராக இருந்த தேவர் அகில இந்திய துணைத் தலைவர் ஆனார். ஃபார்வர்டுபிளாக்-காங்கிரஸ் இணைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது. நேருவின் ஆசை நிராசையானது.ஃபார்வர்டுபிளாக் கட்சியை கபளீகரம் செய்ய முணைந்து தோற்ற நேரு நேதாஜி மர்மம் பற்றிய பிரச்சனையை முடித்து வைக்கும் நோக்கோடு ஷா நவாஸ்கான் தலைமையில் நேரு விசாரணை கமிஷனை நியமித்தார்.அதில் நேதாஜியின் மற்றொரு அண்ணன் சுரேஷ் சந்திர போஸையும்,எல்.என். மொய்த்ராவையும் உறுப்பினராக்கினார்.1956-ல் நேருவின் ஆசைப்படி நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று அறிக்கை வெளியிட்டது.நேதாஜியின் அண்ணன் சுரேஷ் போஸ் தன் அறிக்கையை தனியாக சமர்ப்பித்தார்.'நேதாஜி விசாரணை கமிஷனின் புரட்டு' என்று நேருவின் முரண்பாடுகளை பட்டியலிட்டு வெளியிட்டார் தேவர். இந்த விசாரணை கமிஷனில் சென்று வினா எழுப்பி வெளிநடப்பு செய்தார். இதனால் நேருவின் வெறுப்புத் தீ வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சியை கைப்பற்றி விடும் நம்பிக்கை இல்லாதது ஃபார்வர்டுபிளாக். இராணுவ ரீதியான ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொண்ட இயக்கம். இருப்பினும் இன்றைய மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும்,மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கை வெளிப்படுத்தவும் தேர்தலை பயன்படுத்தி வந்தது ஃபார்வர்டுபிளாக். அதன்படி தேவர் இரட்டைத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்று காட்டினார்.மக்கள் மன்றத்தில் மக்களது பிரச்சனைகளை வெளிப்படுத்தி பேசினார். பிரச்சனைகளை சொல்வதோடு மட்டுமில்லாமல் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வும்,அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை குறிப்பிட்டும் காட்டுவார்.தேவரது சொற்பொழிவில் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறையும் இருக்கும் என்று ஆட்சியியல் அறிஞர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளனர்.மூதறிஞர் ராஜாஜி, ஒரு கட்சியை ஆரம்பித்து திட்டமிட்டு வளர்த்து 10 ஆண்டுகள் கழித்து பெறக்கூடிய பலனை தேவரை வைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினாலே பெற்று விடலாம் என்று குறிப்பிட்டதில் இருந்து தேவரின் ஆளுமையை நன்கறிந்து கொள்ளலாம்.இத்தகைய மகத்தான மக்கள் சக்தி பெற்ற தேவர் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்யும் மக்கள் விரோத போக்குகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி பேசி வந்தார்.கள்ளநோட்டு,கள்ள மார்க்கெட்,கலப்பட மாபியாக்களின் முகமூடிகளை மக்கள் மத்தியில் கிழித்தெறிந்தார்.பசும்பொன் தேவருக்கு ஒருபுறம் பொதுமக்கள் செல்வாக்கு வளர்ந்தோங்கி வந்த அதேநேரம் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் அபரிதமாக கோபமும் நாளும் வளர்ந்தது.
-ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ். நவமணி அவர்கள் (தேவர் மலர் ஜனவரி மாத இதழ்).
No comments:
Post a Comment