Sunday 21 January 2018

மதுரையில் சிவகங்கை சமஸ்தான கோவில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. மதுரை நகரில் அமைந்திருந்தாலும் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில் இது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். [1]. இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்க் காரணம்

இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

மதுரையை ஆண்ட மீனாட்சியை சிவபெருமான் மணந்து கொண்டார். பின் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிட்டை செய்து, பூஜித்த பின்பே மதுரையின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்

அதிசய சிவலிங்கம்: 

எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு.

மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.




வருடத்திற்கு 54 அபிஷேகம்!: 

இக்கோயிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.


மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

No comments:

Post a Comment