Tuesday 11 July 2017

கின்னஸ் சாதனை நாடக குழு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரையில் நிகழ்த்திய மாநாட்டின் தொடக்கத்தில், என் தாத்தா மொக்கையன் தேவரைப் புகழ்ந்து பாடிய பின் மேடை ஏறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாவது, மொக்கையன் பாடிய இந்தப் பாடலுக்கு நிகராக எனது தோலை செருப்பாகத் தைத்துப் போட வேண்டும் என பெருமிதத்துடன் தேவர் கூறியதைக் கேட்டு கண்ணீர் மல்க நின்றவர் என் தாத்தா.

அது மட்டுமா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற என் தாத்தா அருந்ததியார் சமூகத்தில் முதன் முறையாக தமிழக சட்டசபைக்குள் சென்றும், அங்கு இருக்கும் அனைத்துத் தலைவர்களின் படத்தையும் பார்த்துவிட்டு, அதில் தேவர் படம் இல்லையே எனக் கண்டதும் கொதித்து கூட்ட சபையிலேயே பாடினார், “தேவர் எங்கே என் தேவர் எங்கே” என்று.

இப்பாடலைக் கேட்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் சட்டசபைக் கூட்டம் முடிந்ததும் தேவரின் புகைப்படத்தை சட்டசபையில் மாட்ட உத்தரவிட்டார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு இன்னும் பல செய்திகள் இருந்தாலும், என் தாத்தா எந்த நேரம் எனக்கு சித்திரசேனன் என்ற பெயரிட்டாரோ அன்று முதலே கலைத்தாயின் வாரிசாகவே வளர்ந்திருக்கிறேன்.

வீதி நாடகத்தில் எனது அனுபவம்:

திசைகள் கலைக்குழு கருமாத்தூர் ரோஸ் முகிலன், அருட்சகோதரி கிளேயர், விக்ரம் தர்மா (மறைவு), தியேட்டர் லேப் சென்னை ஜெயராவ், வெளிரங்கராஜன், மரப்பாச்சி நாடகக்குழு- மங்கை, கட்டியக்காரி நாடகக் குழு -ஸ்ரீஜித், கூத்துப்பட்டறை(சென்னை) – சந்திரா ஆகியோரிடமிருந்து வீதிநாடகம், நடிப்பு, சிலம்பம், மூச்சுப்பயிற்சி, யோகா, நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பல்வேறு கலைகளைக் கற்றுக் கொண்டேன். இதில் பாடலுக்கு மட்டும் எனக்கு நானே குரு. வீதி நாடகத்திற்கும், திரைப்படத்திற்கும் பெரிய வித்தியாசத்தை நான் நாடக நடிகனாக இருந்த போது உணர்ந்தேன்.

வீதி நாடகத்தில் வசனம் பேசி நடிக்கும் போது வசனம் மறந்தால் ரீடேக் இல்லை. ஆனால் படத்திற்கு உண்டு.
திரையில் நடிகர்களைப் பார்ப்பவர்களுக்கு அது வெறும் பிம்பம் மட்டுமே. ஆனால் ரத்தமும் சதையுமாக பார்வையாளர்களிடமிருந்து நாங்கள் அழுது நடித்தால் அழுவார்கள், சிரித்தால் சிரிப்பார்கள். இந்த நேரிடை உணர்வு திரைப்படத்தில் இல்லை.
நாடகத்தில் வரும் சில காட்சிகளை நாங்கள் மக்களுக்குள் ஒருவராக இருந்து வந்து நடிப்போம் எனும் போது அது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
வீதி நாடகத்தில் 1999-ஆம் வருடம் சூன் மாதம் மதுரையில் எங்கள் திசைகள் கலைக்குழுவினர் தொடர்ச்சியாக 57 ½ மணி நேரம் வீதி நாடகத்தை தூங்காமல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தோம். எனக்கும் அந்த கின்னஸ் சான்றிதழ் வந்தது. இந்த 57 ½ மணி நேரம் தூங்காமல் நடிக்க நாங்கள் பட்டபாடு சொல்லி மாளாது. தூக்கம் இரவு 1 முதல் 4 மணிக்கு வரும் அப்போது குண்டூசியை உடலில் குத்திக் கொள்வோம், அரிக்கும் செந்தட்டி என்ற காயை உடலில் தேய்த்து தூக்கத்தை துரத்துவோம். இறந்தால் நடித்தபடியே இறந்துவிட வேண்டுமென்ற வைராக்கியத்திற்கு கிடைத்த பரிசே இந்த கின்னஸ் சான்றிதழ். இந்த கின்னஸ் சாதனை நிகழ்வை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எங்களுக்கு பொன்னாடை போர்த்தி முடித்து வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம்.
எனவே வீதி நாடகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாதல் சர்க்கார் அவர்களின் கலை வாரிசாக நான் மட்டுமல்லாது என்னைப் போல ஆயிரக்கணக்கான வீதி நாடக நடிகர்கள் இன்று தமிழகத்தில் உள்ள வீதி, தெருக்கள் தோறும் இந்த நாடகக் கலையை நிகழ்த்தி மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்கள். ஆகவே கலைஞர்கள் அழியலாம், இந்தக் கலைக்கு என்றும் அழிவில்லை என்பதை அனைவரும் அறிந்ததோடு மட்டுமல்லாது கவலை கொள்ளும் நெஞ்சத்திற்கு கலை காயம் ஆற்றும் களிம்பாக இருந்து வருகிறது. ஆதலால் கவலையை கலை வசம் விடுங்கள், என்றும் கலகலப்பாய் இருங்கள்.

No comments:

Post a Comment