Tuesday 6 March 2018

கிழக்கே உதித்த செஞ்சீனம்! "-

"கிழக்கே உதித்த செஞ்சீனம்! "- என்ற தலைப்பில் பசும்பொன் தேவர் அவர்கள்  நேதாஜி இதழில் எழுதிய கட்டுரை இது.  

  "பட்டப் பகல் வெட்ட வெளிச்சத்தில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதைப் போல்,ஆங்கிலேயர்களின் சரித்திரத்தையும்,அவர்களின் தில்லுமுல்லுகளையும் அஷர அஷரமாகக் கற்றுத் தேர்ந்த நம் நாட்டுத் தலைவர்கள் கொஞ்சங்கூட கூச்ச்மின்றி காமன்வெல்த் கூட்டுக்குள் போய் மாட்டி கொள்கிறார்களே என்று, அறிஞர்களும், உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசத் தெரியாத உத்தம தேச பக்தர்களும் திகைத்து நிற்கும் இத்தருணத்தில்,காரிருள் மின்னல் போல், கிழக்கே நெடுந்தொலைவில் சுதந்திரச் சூரியன் உதயமாகி தன் செந்நிறக் கதிர் பரப்பத் தொடங்கி விட்டான் என்பதறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்! ஆம்! ஷாங்காய் நகரம் மக்கள் தோழன் மாசேதுங் ஆட்சிக்குட்பட்டு விட்டது என்றால், சுதந்திர ஜோதிஉதயமாகி விட்டது என்று தானே பொருள்!. நாட்டு மக்கள் நலிவைக் கண்டு இரங்காது, அமெரிக்காகாரன் சொல்லிய படியெல்லாம் மரணக் கூத்தாடிய சியாங்கே ஷேக்கின் இருளாட்சி அஸ்தமித்து விட்டது என்றால், பாட்டாளித் தோழர்களுக்கு ஒரு நற்காலம் வந்து விட்டது என்று தானே அர்த்தம்! அதெப்படி! இன்னும் சீனா முழுமையும் மாசேதுங் ஆட்சியின் கீழ் வரவில்லையே - அதற்குள்ளாக ஆனந்தப் பண் பாடுவது அறிவுடைமையாகுமா - என்று சில சந்தேகப் பிராணிகள் 'இச்சுக் கொட்டலாம். அந்த நண்பர்களுக்கு சொல்கிறோம்; தோழர்களே! சியாங்கே ஷேக் இனி முழு மனிதனல்ல; இரு கால், இரு கை, இரு கண் இழந்த ஒரு மாமிச பிண்டமாகி விட்டார். மனிதத் தன்மையை இழந்து விட்ட பிண்டம் அல்லது ஜந்து, இனி வலி தாள மாட்டாமல் குளறிக் குலைத்துக் கொண்டிருக்குமே அன்றி, வேறெதையும் செய்வதற்கு அதற்கு சக்தி கிடையாது.

ஆகவே அதப் பற்றி  இனி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை! நிற்க, இந்த சீன அரசியல் மாற்றத்திலிருந்து, இன்றைக்கு இந்தியாவை அரசாளும் தலைவர்கள் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டால், அவர்களும் வாழலாம்; நாடும் வாழும். இல்லையேல் சீனப் படலம் இங்கும் நடக்கத்தான் செய்யும். அது இயற்கை. யாரும் தடுப்பதற்கியலாது. காமன் வெல்த்தில் இருக்கிறோம், அச்சமில்லை என்ற அகம்பாவம் ஒருவேளை ஏற்படலாம்!காமன்வெல்த்தில் தலைமை ஸ்தானமான இங்கிலாந்தின் அப்பனான அமெரிக்ககாரனின் உதவியே சியாங்கே ஷேக்கை காப்பாற்ற முடியவில்லை என்றால்,காமன்வெல்த் உதவி இவர்களுக்கு என்ன செய்து விட முடியும். மற்றும் அமெரிக்கக்காரனாவது வஞ்சகமின்றி கொடுக்க முடிந்த வரை ஆயுதங்களை சியாங்கே ஷேக்கிற்கு கொடுத்து உதவினான். அது தானும் செய்ய மாட்டானே இந்த ஆங்கிலேயன்! தன் நிறத்தார்,தன் வர்க்கத்தார் எனப்படும் பிரெஞ்சு,ஜெர்மன் மக்களைக் கடந்த இரு யுத்தங்களிலும் பலியிட்டு தன்மட்டில் தப்பித்துக் கொண்ட நயவஞ்சகன் அல்லவா அவன். இக்கட்டான சமயத்தில் அவன் இந்தியர்களுக்கு எங்ஙனம் உதவுவான்? வேண்டாம்; விருந்து உபச்சாரங்களினாலும், மோகனப் புன்னகையினாலும் கருத்தை இழந்து வழி தவறி விட வேண்டாம்! லண்டண் பிரயாணங்களும், வாஷிங்டன் பயணங்களும் இப்போது வேண்டியதில்லை. சிலவும் அதிகம். காலமும் வீணாகி விடுகிறது. கஷ்ட காலத்தில் தம்மையும் தமது கட்சியையும் ஆதரித்த பாட்டாளித் தோழனுக்கு ஒரு சிறு உப்புக்கல்லுக்காவது தமது இரண்டு வருட ஆட்சி உபயோகப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதில், பண்டித நேரு அவர்கள் தமது நேரத்தை செலவிடட்டும்! அதனால் எவ்வளவோ நன்மை உண்டு.

அதை விட்டு விட்டு, சீனாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றும் , அடுத்த படியாக இந்தியாவையே அவர்கள் ஆக்கிரமித்து விடலாம் என்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் ஆங்கிலோ அமெரிக்கர்களின் சொல் கேட்டு , வாஷிங்டன் சென்று திட்டமிட பண்டித நேரு  அவர்கள் துடி துடிக்க வேண்டாம்! ஏழைத் தொழிலாளி என்னதான் பாடுபட்டாலும் இந்த பாழும் இந்தியாவில் வயிறாரக் கஞ்சி குடிக்க  வழியில்லை. வறுமை! வறுமை!! வறுமை!!! அதன் கொடுமையை சகிக்க முடியவில்லை.  இப்போது வகுக்க வேண்டிய திட்டமெல்லாம் இந்த வறுமையைப் போக்குவதற்குவழி எது என்பதுதான். லண்டன், வாஷிங்டன் யோசனைகளைக் கேட்டால் அந்தத் திட்டத்தை நிச்சயமாகத் தீட்ட முடியாது!  ---  பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்

No comments:

Post a Comment