Wednesday 14 March 2018

தேவர் பாராளுமன்றம் உரையின் சாரம்சம்

தேவரின் பாராளுமன்றம் உரையின் சாரம்சம்

அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை . -#பசும்பொன்தேவர்

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது

ஐ.நா.வின் சமாதானம், அமைதி எல்லாம் பேச்சோடு சரி - அதன் செயல்களெல்லாம் அமைதியை சிதைப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது

லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா?

பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா?

இந்தியா பாக்கிஸ்தான் எல்லைப் பிரச்சனை, இன்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை - நித்தியப் பிரச்சனையாகி வருகிறது

உண்மையில் நமது பாதை அகிம்சைதான் என்றால் இத்தனை கோடி ரூபாய்களை விழுங்கும் ராணுவ பட்ஜெட் ஏன்? அவ்வளவு பெரிய தொகையை தேசிய நலத்திட்டம் போன்ற பல உருப்படியான காரியங்களுக்குச் செலவிடலாகாதா?

ராஜதந்திரம் என்றால் அதற்கொரு சாமுத்திரிகம், நாகரிகம் கண்ணியம் உண்டு. இம்மூன்றும் இல்லாத ராஜதந்திரத்துக்கு, ராஜதந்திரம் என்ற பெயரை வேண்டுமானால் சூட்டலாம். ஆனால் அது ராஜதந்திரமாகாது.

நினைக்கவே இனிக்கும் அற்புதம் பெற்ற தத்துவத்தை நாம் வாயில் வைத்திருக்கத் தவறவில்லை. ஆனால், அதைச் செயலுக்கு இறக்கிவிட நாம் விரும்பவே இல்லை; ஜனநாயகத்தின் தரத்தை நாம் ஒரு அளவுக்கேனும் கையாளாது போனாலும் பாதகமில்லை - போகட்டும் - ஆனால் மனித குலத்திற்கு வேண்டிய மனிதத் தரத்தையாவது மடக்கிச் சாய்க்காமல் விட்டுவிட்டால், அதுவே ஒரு பெரும் சேவையும், தியாகமும், புண்ணியமுமாகும்.

ஜனநாயகத் தத்துவத்தைப் பேச்சால் குளிப்பாட்டுகிற நாட்டில் மனிதத் தரத்திற்கே வாய்ப்பில்லை

ஜனநாயகத்தையாவது உங்கள் நோக்கம் போல் எப்படியும் உபயோகித்துக் கொள்ளுங்கள் - மனிதத் தரத்தையாவது கசக்கிக் கன்னவைக்காமல் விடுங்கள்

கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் - இயல்பு. ஆனால் தேசத்தைப் பற்றிய விஷயங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு.

கொள்கை பலம் எல்லோருக்குமே உண்டு. கருத்துக் கொள்ளும் உரிமையுமுண்டு. இதை மறந்தோ, மறுத்தோவிட்டு ஒரு உறுப்பினர், இந்து மத்தின் நேர்மை குறித்துப் பேசினால் நீங்கள் அவரை வகுப்புவாதி என்று இலேசாகச் சொல்லி ஒதுக்கிவிடுகிறீர்கள், மற்றொரு உறுப்பினர் முன்வந்து பொருளாதாரத் தத்துவம் பற்றிக் கூறினால், அவரை உங்கள் வாயால் கம்யூனிஸ்ட்டாக்கி விடுகிறீர்கள், வேறொருவர் வேறேதேனும் சொல்லத் துணிந்து முயன்றால், அவரை ஏதேனும் ஒரு கமிட்டிக்குப் பொறுப்புக் கொடுத்து, குல்லாய் மாட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு மோசமான போக்கைக் கொண்டிருந்தால் சக்தி மிக்க எதிர்க்கட்சி எப்படி உருவாகும்?  ஒருக்காலும் முடியாது!

நமது ராணுவம் பாகிஸ்தானுக்குச் சரியான பதில் சொல்லும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதில் உள்ள சக்தி, விஷயத்தில் இல்லை

அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி வருகிறார்கள்.

தேசப் பிரச்சனை, அரசியல் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழலாக மாற்றப்பட்ட மோசமான காலமாவிட்டது. 

நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள், இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ திரட்டலாம் - சேமிக்கலாம் - எவ்வளவு செல்வத்தோடும் சுகிக்கலாம் - என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சமநிலை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் என்பதோடு, நமது நாட்டுக்குச் சொந்தமான மொத்த மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

பொறுப்பின்றியும், சரியான காலநிலை தவறியும் பேசி வைக்கும் இடதுசாரியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக வலதுசாரிகள் மனத்திற்குத் தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் வயப்படுத்திவிடாதீர்கள்

No comments:

Post a Comment