Saturday, 10 March 2018

மாற்று இடத்தில் நடந்த பூஜை!

6 வருடங்கள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு மாற்று இடத்தில் நடந்த  பூஜை!

மீனாட்சியின் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற  தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், " என் சகோதரர்களான அரிஜனங்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் இன மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்" என தமிழ்நாடு அரசில் இயக்குநராகப் பணியாற்றியவரும் தேசிய தலைவர்கள் குறித்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவருமான அ. பிச்சை குறிப்பிடுகிறார். இவர் முன்னாள் சபாநாயகர் செல்லபாண்டியனின் மூத்தமருமகன்.

அப்போது, மதுரையில் நிட்டிங் கம்பெனி போராட்டத்தால் தேவரை கைது செய்து சிறையில் அடைத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அரசு மீது தேவருக்கு கோபம் இருந்தது. என்றாலும் தனக்கும் ராஜாஜிக்கும் இடையேயான அரசியல் விரோதத்தை ஆலயப் பிரவேசத்தில் காட்டாமல் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்திட தேவர் விரும்பினார் என்கிறார்கள்.
ஆலய பிரவேச முயற்சிக்கு அந்தணர்களிடையே கடும் எதிர்ப்பு இருந்தது. ஆலய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் 'அத்யயன பட்டர் ' என்ற பிரிவினரும் இந்தத் திடீர் முயற்சியைக் கடுமையான சொற்களால் (மட்டும்) எதிர்த்தனர். ஆலயப் பிரவேசத்துக்குப் பின் சுவாமிநாத பட்டர் தவிர மற்ற அர்ச்சகர்களும், கோயிலில் வேதம் ஓதும் அத்யயன பட்டர் பிரிவினரும் கோயிற்பணிகளில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல் வெளியேறினர். கோயில் நிர்வாகத்தின் மீது பல வழக்குகளைத் தொடுத்தனர். கோயிலில் பிராமணரல்லாத மற்றப் பணியாளர்கள் வழக்கம் போலத் தம் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் முதல் கோயிலின் பிராமணப் பணியாளர்களும் சனாதனிகளும் 'மங்கள நிவாசம் ' பங்களாவிலே தொடர்ந்து கூடினர். அதையே மீனாட்சி அம்மன் கோயிலாகக் கருதி பூசை வழிபாடுகளை அங்கேயே நடத்தி வந்தனர். சில நாள்களுக்குள், ஆறுபாதி நடேச ஐயர் வீட்டின் முன் இருந்த காலி மனையில் (இப்போது தமிழ்ச் சங்கம் சாலையில் செந்தமிழ்க் கல்லூரியை அடுத்துக் கீழ்புறமாக உள்ள இடம்) ஒரு 'புதிய மீனாட்சியம்மன் கோயிலை 'ச் சிறியதாகக் கட்டினர். அங்கேயே வழிபாடுகளும் பூசைகளும் நடத்தினர்.

1945 வரை இந்தக் கோயில் நீடித்திருந்தது. அதன்பின் பூசைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது. கோயிலின் மீது வழக்குத் தொடுத்திருந்த அர்ச்சகர்களும், வேதம் ஓதும் பட்டர்களும் தங்கள் முயற்சியில் தோற்று மீண்டும் கோயிற் பணிக்குத் திரும்பினார்கள்.

http://andhimazhai.com/news/view/maduraikkaaraynga-21.html

No comments:

Post a Comment