"மாசேதுங்கின் மக்களாட்சி"
(பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி)
சீன மக்களின் வெற்றி , ஆங்கிலோ அமெரிக்கர்களுக்கு பெருந்திகிலைக் கொடுத்திருக்கிறது. விடாக்கண்டன் சியாங்கே ஷேக்கைத் திக்குமுக்காடச் செய்த மாசேதுங் என்ன சாமானியப்பட்டவரா? ஆங்கிலோ - அமெரிக்கர்களின் அண்டப் புழுகுப் பிரச்சாரத்தை அணு அணுவாகத் தகர்தெறிந்து வருகிறார். சின்னஞ் சிறு குற்றத்தைக் கூட அவரிடமோ, அவரது ஆட்சியிலோ காண்பது அரிதாக இருக்கிறது!
மாசேதுங் ஒரு சிறு குற்றங்கூட தமதாட்சியில் நடைபெறாதபடி ஜாக்கிரதியாகக் கண்காணித்து வருகிறார். ஷாங்காய் போரில் வெற்றி பெற்ற இராணுவ வீரர்கள் நடந்து கொண்ட ஒழுக்க முறையை ராய்ட்டர் செய்தி ஸ்தாபனமே, புகழ்ந்து பாராட்டுகின்றதென்றால், மாசேதுங் ஆட்சி எவ்வளவு மாசற்றதாக இருக்க வேண்டும். இன்னொரு விசயத்திலும் மாசேதுங் ஆங்கிலோ - அமெரிக்கர்களின் விஷ நாக்கை கட்டிப் போட்டு விட்டார்.
சாதரணமாக, கம்யூஸ்டுகள் எல்லாம் மத விரோதிகள் எனத் தூற்றப்படுவதுண்டு. இதற்கும் இடம் கொடுக்காமல் செய்து விட்டார் நமது மாசேதுங். அதாவது, மத உரிமைகளில் அரசாங்கம் வீணாகத் தலையிடாது என மாசேதுங் சர்க்கார் மக்களுக்கு உறுதியளித்திருப்பதாகத் தெரிகிறது. இனி என்ன செய்வது? பர்மாவின் எல்லையைப் பார்த்துப் பார்த்து மனமேங்கி மாள்வதைவிட வேறு வழியேது?
பசும்பொன் தேவர்
No comments:
Post a Comment