Friday 2 February 2018

கோரிப்பாளையம்

பசும்பொன் தேவர் அவர்களுக்கு மதுரை கோரிப்பாளையத்தில் வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 அன்று தலைவர் தேவர் அவர்கள் மறைந்த போது தேவருடைய தொண்டர்கள் மனதில் கருக்கொண்ட எண்ணம் இது! 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர்  அவர்கள்,"தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வைக்க வேண்டும்" என்று நாடெங்கும் அலைந்து திரிந்து வசூல் செய்தார். சிற்பி ஜெகநாதனிடம் சிறுக சிறுக போய் சேர்ந்தது.சிலை மாடல் உருவானது.மதுரையில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை,முதலமைச்சர் அண்ணா திறந்து வைக்கிறார் என்று முன்பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.1969-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் மொத்த வட்டங்கள் 45-ல் திமுக கூட்டணியில் 9 இடங்களில் ரயில் இஞ்சின் சின்னத்தில் ஃபார்வர்டுபிளாக் போட்டியிட்டது.எஸ்.முத்துமாயத் தேவர்,எல்.சோணையா சேர்வை ஆகியோர் தேர்தலில் வென்றனர். மா.பரமத்தேவர் 2 ஓட்டுகளில் தோற்றார்.5 ஓட்டு,7 ஓட்டு என்ற வித்தியாசத்திலேயே ஃபார்வர்டுபிளாக் தோற்றது.நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது.எஸ்.முத்து சேர்மன் ஆனார்.அதை ஃபார்வர்டுபிளாக் ஆதரித்தது.துணைச் சேர்மன் தேர்தலில் ஃபார்வர்டுபிளாக் திமுகவை ஆதரிக்கவில்லை.காங்கிரஸ் வேட்பாளர் திரு.ஆனந்தம் வெற்றி பெற்றார்.திமுக நகரசபை கவிழ்ந்து விடாமல் இருக்க ஃபார்வர்டுபிளாக் தயவு தேவை என்ற நிலை இருந்தது. எனவே எஸ்.முத்துமாயத்தேவர் நகரமைப்புக் குழு தலைவராக்கப்பட்டார்.அப்போது தேவரின் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தான் கோரிப்பாளையம் ஆறு சாலை சந்திப்பு. அந்த இடம் தான் 28.09.1957-ல் காமராஜ் நாடார் ஆட்சியில் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்ட இடம்.அண்ணாதுரையின் மறைவால் சிலை திறப்பு விழா தள்ளிப்போயிற்று.மூன்று மாவட்டங்களில் பசும்பொன் தேவர் பெயர் கொண்ட கல்லூரிகள் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டன.1971 பொதுத்தேர்தலில் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் இராமநாதபுரம் பாராளுமன்றத்திற்கும்,உசிலம்பட்டி சட்டப்பேரவைக்கும் போட்டியிட்டார். 1971 பொதுத்தேர்தலில் தான் ஃபார்வர்டுபிளாக் வேட்பாளர்கள் எல்லோரும் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டனர்.1967-ல் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் சுதந்திரா கட்சியின் நட்சத்திர சின்னத்திலேயே போட்டியிட்டனர்.1971-ல் அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் ஹேமந்தகுமார் பாசு கொல்லப்பட்டதால் பி.கே.மூக்கையாத்தேவர் அகில இந்திய தலைவரானார்.1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார்.திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கூடலூர் இராஜாங்கம் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் வந்தது.அந்த சமயத்திலே கருணாநிதிக்கும்,தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கும் நல்லூறவு இல்லை. கருணாநிதி மீது தலைவர் அதிருப்தியில் இருந்தார்.தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பொன்விழா க.இராஜாராம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.மேடையில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்,அமைச்சர் செ.மாதவன் மூலமாக சமாதானம் பேசப்பட்டது.ஏனெனில் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் ஆதரவு தேவை.திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுகவை ஃபார்வர்டுபிளாக் ஆதரிப்பது என்றும் தேர்தலில் திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் தேவர் சிலை திறப்பு விழா செலவுக்கு ரூபாய் 40,000 தரவேண்டும் என்றும் பேசப்பட்டது.திமுக தரப்பில் ஒப்புதல் தரப்பட்டது.எதிர்பார்த்தது போலவே திமுக தோற்றது.ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் ஏ.ஆர்.பெருமாள்,சின்னப்பக் கவுண்டர்,சக்திமோகன்,சௌடி சுந்தரபாரதி,தவமணி,கே.கந்தசாமி, ரத்தினசாமி தேவர், முத்தையா ஆகியோர் ஒப்பந்தபடி பணம் கேட்ட போது,"தேவருக்கு செய்ததும் போதும்,தேவமாருக்கு செய்ததும்" போதும்" என்று கருணாநிதி பதில் சொல்லியுள்ளார்.கோபமடைந்த ஃபார்வர்டுபிளாக் தலைவர்களை சமாதானம் செய்த அன்பில் மற்றும் செ.மாதவன் சிலை திறப்பு விழா மலர் போடுங்கள்,அதற்கு அரசு தரப்பு விளம்பரம் தருகிறோம் அதை வைத்து விழா செலவை சரிக்கட்டுங்கள் என்றனர்.அதன்படி சிலை தயாரிப்பு விழா மலர் தயாரிக்கப்பட்டது.அதன்மூலம் அரசு விளம்பரம் கிடைக்கப் பெற்று ரூ 36,000 மட்டும் கிட்டியது.தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் எம்பியாக இருந்ததால் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அவர்களிடம் பசும்பொன் தேவர் சிலை திறக்க வரும்படி கேட்டார்.அவரும் சம்மதித்தார்.5-1-1974 மாலை 3 மணிக்கு சிலை திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது.நகராட்சியாக இருந்த மதுரை மாநகராட்சி ஆனது.எஸ்.முத்து முதல் மேயர் ஆனார்.இந்த காலகட்டத்தில் கருணாநிதிக்கும்,முத்துவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி குறிப்பிட்ட இடத்தில் பீடம் கட்ட கட்டிட பணி துவங்கியது. பாதி அஸ்திவாரம் தோண்டியதும் அந்த இடத்தில் பாலம் வந்து விட்டது. எனவே தோண்டிய இடத்தை மூடிவிட்டு அந்த இடத்திலிருந்து சுமார் 40 அடி தள்ளி தெற்கில் வானம் தோண்டி கட்டிட பணி தொடங்கப்பட்டது.பீடத்தின் உயரம் தளத்திலிருந்து 18 அடி என கணக்கிடப்பட்டது.சரியான அடை மழை.கட்டிட பணி தடைப்பட்டது.இரவோடு இரவாக மழையோடு மழையாக தென்னங்கீற்றால் முகட்டுக் கொட்டகை போடப்பட்டது.பணி தொடர்ந்தது.எஸ்.முத்துமாயத் தேவர் எம்.சி,நகரத் தலைவர் மா.பரமத்தேவர்,நகரச் செயலாளர் எஸ்.அய்யாவு பண்டாரம்,எஸ்.காஜாமைதீன் இவர்களோடு நானும் மற்றும் கட்டிட பணியாளர்கள் பீடம் கட்டவும் அரசு மருத்துவமனை(பனகல் ரோடு) சாலையில் ரோட்டை மறித்து 20×30 விழா மேடையை கருங்கல் சிமெண்ட் உபயோகித்து கட்டுவதற்கும் ஜம்புரோபுரத்தை சேர்ந்த திரு.ராமு சேர்வையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.அய்யணன் அம்பலம்,மாவட்ட ஆட்சியர் சீதாராமதாஸ் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.பக்கத்தில் இருக்கும் முருகவிலாஸ் ரைஸ் மில் தற்காலிக அலுவலகமாக மாறிவிட்டது. சென்னையிலிருந்து சிலை வந்துவிட்டது. வைக்கோல் கட்டுகளை மெத்தை போல போட்டு சிலை இறக்கி வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலையை லாரியில் சுமந்து வந்தவரின் பெயர் கந்தசாமி. பீடம் எழுந்து நின்றது. பீடத்தின் நான்கு மூலையிலும் திண்டுபோல நீட்டி கட்டப்பட்டது. அதில் நான்கு சிங்கங்கள் வைக்க வேண்டும்,முன்னும் பின்னும் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறப்பு விழா கல்வெட்டுகளும்,கிழக்கிலும் மேற்கிலும் தேவரின் பொன்மொழிகளும் வைக்க வேண்டும் என்ற திட்டம் முழுமை பெறவில்லை. கற்கள் வாங்க பணம் இல்லை. வந்த ஒரு கல்லில்,கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டது, தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நாள் 5.1.1974 தலைமை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வர் திறப்பாளர் வி.வி.கிரி அவர்கள் இந்திய ஜனாதிபதி சிலை அமைப்புக்குழுத்தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் எம்.பி.அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் என்று இருந்தது.இதைப்பார்த்த சில ஃபார்வர்டுபிளாக் தலைவர்களுக்கு பயங்கர கோபம்.தங்களுடைய பெயர் அதில் இல்லையே என்று.சிலையை பீடத்தில் ஏற்ற கிரேன் தேவைப்பட்டது.டிவிஎஸ் P.W.D கிரேன்கள் வந்தன்.கிரேனின் உச்சியில் இருந்த ராடு ஒன்று வளைந்து விட்டது.மீண்டும் கிரேன் தேடும் படலம் ஆரம்பமானது.பின்பு கிரேன் வந்து சேர சிலை பீடத்தின் மீது அமர்த்தப்பட்டது.கூடாக இருந்த சிலையின் தலையில் ஒரு அடி அகல வட்டமாக துளை இருந்தது. சுமார் 4 இஞ்ச் விட்டமுள்ள இரு கம்பிகள் இரண்டு தோள்களிலிருந்து பாதம் இருக்கும் அடிக்கல்லோடு பொருத்தப்பட்டது.உள்கூடு காங்கிரீட் கலவையால் இடுப்பு வரை நிரப்பப்பட்டது.அதன்பின் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் மற்றும் சின்னப்பக்கவுண்டர் அவர்கள் வர,அதன் சில கற்கள்,ருத்ராட்ச மாலை,வேறு சில பொருட்கள் இடப்பட்டன.மட்டி கலவை பூசப்பட்டது.தின்னர் பூசப்பட்டது.மறுநாள் தங்க கலர் பெயிண்ட் ஸ்பிரே செய்யப்பட்டது. இன்று வரை இந்த வேலையை தைக்கால் தெருவில் உள்ள கார் பெயிண்ட் ஸ்பிரே செய்யும் செல்லம் சேர்வையும் அவரது புதல்வரும் செய்து வருகின்றனர். சிலை திறப்பு விழா மலர் வந்தது. ஜனாதிபதி,முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்துரையுடன் "நெஞ்சமே அஞ்சாதே அந்த நாள் வரும்" என்ற பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் கட்டுரையை தொடர்ந்து ஏ.ஆர். பெருமாள் அவர்களின் கட்டுரை. கட்டுரையில் கருணாநிதியை உயர்த்தி கூறப்பட்டிருந்தது. இதே கருத்தை ஏ.ஆர். பெருமாள் அவர்கள் மேடையில் பேசினார் என்றால் அது சரியாக இருக்காதே என்ற எண்ணம் ஏற்பட்டது. மார்கழியில் மற்றொரு சித்திரை திருவிழா என்று சொல்லும்படியாக பிரம்மாண்டமான கூட்டம்.சிலையின் பீடத்தை சுற்றிலும் பச்சைப்பட்டு விரித்தாற் போன்று முளைப்பாரிகள் வைக்கப்பட்டிருந்தது.விழா துவங்கியது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். 1957-ல் இந்த இடத்தில் கைது செய்யப்பட்ட தலைவர் தேவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.மாசு மருவற்ற தலைவர், சாதியவாதியாக சித்தரிக்கப்பட்டார்.ஏனெனில் அன்று மாநில அரசும்,மத்திய அரசும் தேவரின் விரோதிகள் கையில் இருந்தது.ஆனால் இன்று மாநில முதலமைச்சர் தலைமையில் இந்தியாவின் ஜனாதிபதி தேவர் சிலையை திறக்க இருக்கிறார்.இன்றைக்கு மாநில  அரசும்,மத்திய அரசும் தேவருக்கு வேண்டியவர்கள் கையில் உள்ளது. அன்று நடந்ததும் அரசியல்,இன்று நடப்பதும் அரசியல் என்று குறிப்பிட்டுவிட்டு பின்பு தேவர்,வி.வி.கிரி இருவரின் தொடர்புகளை விவரித்து விட்டு அமர்ந்தார்.முதல்வர் கருணாநிதி வழக்கம் போல பேசிவிட்டு அமர்ந்தார்.வி.வி.கிரி 1937-ம் ஆண்டு தேர்தல் சூழல்களை எடுத்து விளக்கி விட்டு,பசும்பொன் தேவர் எனக்கு ஒரு வகையில் குரு.ஏனென்றால் எனக்கு அவர் தான் திருக்குறள் கற்றுக் கொடுத்தார்.இந்த பெருமைகளை தெரியாத,வரலாறு தெரியாத ஒரு சில சிறுவர்கள் தேவர் சிலையை திறக்க நான் வரக்கூடாது என்று எனக்கு கடிதம் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.சிற்பி ஜெகநாதன்,கே.இராமு சேர்வை கௌரவிக்கப்பட்டனர்.நன்றியுரை ஏ.ஆர்.பெருமாள் என்று கருணாநிதி சொன்னார். ஏ.ஆர். பெருமாள் எழுந்து மைக் முன்பு வருவதற்குள் தேசிய கீதம் இசைத்தட்டு போடப்பட்டு விட்டது. மேடையில் அனைவரும் அவசரமாய் எழுந்து நிற்க,விழா நன்றியுரை இல்லாமலேயே முடிந்தது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் கோப பார்வை செலுத்தினார்.மேடைக்கு கீழே மைக் செட் ஆப்பரேட்டர் பெருமாள்,மருதுபாண்டியன்,  ஒலிபெருக்கி உரிமையாளர் அழகிரிசாமி,தலைவர் மா.பரமத்தேவர்,நான் ஆகியோர் மட்டுமே இருந்தோம்.பி.கே.மூக்கையாத்தேவரின் அக்கினிப் பார்வை எங்களையே மையம் கொண்டது.அவர் வழக்கமாக தங்கும் டி.பி.பக்கம் போகவே இல்லை.நேதாஜி ஜெயந்தி விழாவிற்கு பின்பு சகஜமானோம்.ஒரு சிலை செய்யப்பட்டால் அரசு அனுமதி அளித்த இடத்தில் சிலை அமைத்த பின்பு உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும். கால் பங்கு தொகை பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும். இப்போது சிலை மதிப்பை அப்படியே பராமரிப்பு செலவாக கட்ட வேண்டும். கால் பங்கு தொகை மதுரை மாநகராட்சிக்கு முழுமையாக செலுத்தப்படவில்லை. சிலையை சுற்றி சாலைத்திட்டு அமைக்கப்படவில்லை. விளக்குகள் போடப்படவில்லை.ஜெயந்தி விழா சமயத்தில் வண்ண விளக்குகள் கோபுரம் அமைக்க தற்காலிக மின் இணைப்பு பெறப்படும். 1980-ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது.பீ.பீ.குளம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்த பணியான் எஸ்.மாயாண்டி தலைமையில்  மாநகராட்சி முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம்.அப்போது போராட்ட குழுவை சந்தித்த அதிகாரிகள் பராமரிப்பு  தொகை பாக்கி பற்றி விவரித்தனர்.அதன்பின்பு சிலையை சுற்றி சாலைத்திட்டும்,2 போகஸ் லைட்டும் போடப்பட்டது.அதுவும் பெயர் பலகைக்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது.எம்ஜிஆர் ஆட்சியில் 1980-வது ஆண்டில் தான் ஏணி மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன-ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ். நவமணி அவர்கள்(மேடைமணி ஜனவரி மாத இதழ்).

No comments:

Post a Comment