Tuesday 12 September 2017

நெல்லையப்பர் கோவில்

தமிழனே உலகின் மிகச் சிறந்த திறமை மிகுந்த படைப்பாளி என்பதற்கு தமிழக கோவில்களே சாட்சி
"""""""""""#நெல்லையப்பர்_கோவில்""""""""""

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

தாமிர அம்பலம்
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

நான் எடுத்த புகைப்படங்கள்

No comments:

Post a Comment