Sunday 4 June 2017

சமரச சுத்த சன்மார்க்கம்

பசும்பொன் தேவர் திருமகன்

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, வடலூரில், சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி பேசுவார்
தேவர். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே, வள்ளலாரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர்
வருவர்.

தைப்பூசத்தன்று, வடலூரில் தேவர் பேசத் துவங்குவதற்கு முன், முன்னாள் முதல்வராக
இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்..."வடலூர்
ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில், ராமலிங்க அடிகளார் பாடிய,
இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது.
அதை மடத்திற்குத் தந்தால், நூல் வடிவாக, எல்லாரும் படிக்கும் வண்ணம் அச்சில்
ஏற்றி வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், அடிகளாரின் உறவினரிடம் பலமுறை கேட்டும்
கொடுக்க மறுக்கின்றனர். தாங்கள் தான் இதற்கொரு வழி செய்ய வேண்டும்!' என்றார்.
"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம்; நீங்கள் கவலைப்பட
வேண்டாம்!' என்று ஓ.பி. ஆரிடம் கூறிவிட்டுப் பேச்சைத் துவங்கினார் தேவர். ராமலிங்க
அடிகளாரின் அருட்பாவைப் பற்றி ஒருமணி நேரம் பேசிவிட்டு, இறுதியாக, தேவர்
உறுதிபட கூறியதாவது..."ராமலிங்க அடிகளால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல்
உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை, ராமலிங்க
அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துகொண்டு, மடத்துக்குக் கொடுக்க மறுப்பதாகவும்,
ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னார்!"அடிகளாரின் உறவினருக்கு,
இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன்... அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து,
மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள் அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக
வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த
ஒன்பது பாடல்களும், இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க
வேண்டாம்! இதுவரை உலகத்துக்குத் தெரியாமல் நீங்கள் வைத்திருந்த அந்த
ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன், கேளுங்கள்...' என்று, அந்த
ஒன்பது பாடல்களையும், மடைதிறந்த வெள்ளம் போல, "மட,மட...'வெனத் தன் வெண்கல
குரலில் பாடி முடித்தார். ராமலிங்க அடிகளாரின் வெளிவராத அந்த அருட்பாவை, தேவர்
திருமகன் பாடியதைக் கேட்ட கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது; மேடையில் இருந்த பிரமுகர்கள்
அதிசயித்தனர். அப்போது ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர், கையில் அந்த ஏட்டுச்
சுவடியோடு மேடை ஏறி, தேவரைக் கும்பிட்டு, காலில் விழுந்து வணங்கினார்.
பிறகு, தேவரைப் பார்த்து, "ஐயா... நீங்கள் தேவர் அல்லர்; நீங்கள் தான் ராமலிங்க அடிகளார்!
என்னை மன்னித்து விடுங்கள்... தாங்கள் பாடிய அந்த ஒன்பது பாடல்கள் தான் இந்த ஏட்டுச்
சுவடியில் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று சுவடியைத் தேவரிடம்
தந்தார்.அந்தச் சுவடியைப் பெற்று, "எல்லாம் ஈசன் செயல்...' என்று தேவர்
சொல்லி முடிப்பதற்குள், எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்து,
அவரது கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றி, "ராமலிங்க சுவாமிகளே நீங்கள் தான்!'
என்று உரக்கச் சப்தமிட்டு கூறினார் ஒ.பி.ஆர்., அதைக்கேட்ட கூடியிருந்த கூட்டம் பெருத்த
கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது.

No comments:

Post a Comment