Thursday 1 June 2017

பசும்பொன் சுற்றுலாத் தலமாக்கப்படும்-முதல்வர் எம்ஜிஆர் அறிவிப்பு

1994 ஏப்ரல் 29ல் சட்டப்பேரவை விவாதம்.

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர்: மாண்புமிகு எஸ்.ஆண்டித்தேவர் அவர்கள்

திரு.எஸ்.ஆண்டித்தேவர்:மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு புரச்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரில் தேவர் மாவட்டம் என்று பெயர் வைக்க வரும்போது தேவருடைய நினைவாலயத்திற்கு வந்து எம்ஜிஆர் மரியாதை செலுத்திவிட்டு, தேவர் நினைவாலயத்தை சுற்றுலாத் தலமாக ஆக்குவேன் என்று அறிவித்தார்கள். அது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கே தெரியும், தொடர்ந்து நாங்களும் கோரிக்கை வைத்து வருகிறோம். அதற்கான நிலம் தேவருடைய நிலமே 200ஏக்கருக்கு மேலே இருக்கிறது.  அதைச் சுற்றுலாத் தலமாக ஆக்குவதற்கு மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களும், நமது மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களும் அதைச் செய்வார்களா என்பதோடு அவர் கடைசியாக வாழ்ந்த திருநகர் வீட்டை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு அரசு ஆவணம் செய்யுமா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு.மு.தென்னவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற உணர்விலே இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எத்தகைய எண்ணம் கொண்டு, தான் ஆட்சியிலே,  அதிகாரத்திலே இருந்போது செயல்பட்டார்களோ அதே உணர்விலே,  அந்த லட்சியம் பட்டுப்போகாத வகையிலே, பசும்பொன் தேவரைப் பாராட்ட வேண்டும்; பல்வேறு வகைகளிலே பெருமைப்படுத்த வேண்டும் என்கிற உணர்விலே மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அறிவார்கள். தேவர் அவர்களுடைய ஜெயந்தி விழா மாவட்ட அளவிலே தான் நடத்தப்பட்டது. அது இந்த ஆண்டு மாநில அளவிலேயே நடத்தப்படும் என்று முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் அறிவித்தார்கள். அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு பசும்பொன் கிராமத்திற்குத் தானே வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்பதும் உறுப்பினர் அவர்களுக்கு தெரியும். (மேசையைத் தட்டும் ஒலி) அங்கே உள்ள இடம் சுற்றுலாத் தலமாக ஆக்கப்படுமா, தேவர் நிலைவாலயத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளுமா என்றெல்லாம் இங்கே மாண்புமிகு உறுப்பினர் கேட்டார்கள். அந்த நினைவாலயத்தை எடுத்துச் செயல்படுத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அங்கே இருக்கின்ற பிரச்சனை,  நம்முடைய உறுப்பினர் அவர்களுக்கே தெரியும். அதைப் பேசி தீர்த்து, அதைக்கொடுப்பதற்குத் தயாராக இருந்தால்,  அரசு அதைச் செய்வதற்கும் தயாராக இருக்கிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.எஸ். ஆண்டித்தேவர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,  அதுபற்றி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசிகின்றபோது, அங்கே ஒரு பிரச்சினை இருந்தது. மாண்புமிகு பேரவைத் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். இப்போது அதைத் தீர்ப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். தேவர் நினைவாலயத்தில் உள்ளவர்களை நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு வெளியேற்றிவிட்டு எந்தெந்த விதிமுறைகள் வேண்டுமோ அதைச் செய்து தரத் தயாராக இருக்கிறேன். அதைச் சுற்றுலாத் தலமாக ஆக்குவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத்தலைவர்: மாண்புமிகு செய்தி-விளம்பரத்துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு.மு.தென்னவன்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் தீர்ப்பதற்குத் தயாராக இருந்தால் அந்தத் தீரரைப் பெருமைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

No comments:

Post a Comment