எருமைகுளம் கிராமமும் கிரிக்கெட் விளையாட்டும்.
1970 - 80களிலேயே எங்கள் கிராமம் கிரிக்கெட் விளையாட்டுக்கு புகழ்பெற்றது. சாதாரண வயல்வெளி கிரிக்கெட் எங்கள் ஊரில் கிடையாது. எங்கள் கிராமத்தின் சார்பாகவே தனி கிரிக்கெட் மைதானம் பராமரிக்கப்பட்டது. மைதானம் கிராமத்திலிருந்து 1கி.மீ தொலைவில் அமைந்திருந்தது.
கிரிக்கெட் என்றால் சாதாரண ரப்பர் பந்தோ டென்னிஸ் பந்தோ கிடையாது. 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒரிஜினல் கிரிக்கெட் பந்துகளான காரட் பந்துகள் தான் பயன்படுத்துவார்கள். தென்மாவட்டம் எங்கும் சென்று வெற்றிபெறக்கூடிய அணியாக 1980களில் மிகப்பெரிய கிரிக்கெட் அணி எருமைகுளம் கிராமத்தில் இருந்தது.
விளையாட்டு உபகரணங்களான ஹெல்மெட், கால் பேடு, கைகுலோஸ், பிட்சில் பயன்படுத்தக்கூடிய மேட் ( தரை விரிப்பு) பாதுகாப்பு கார்டு என அனைத்தும் கிராம பொதுகட்டிடமான மடத்தில் குவிந்து கிடக்கும். 80களில் பிறந்த எங்களுக்கு உபகரணங்களை மைதானத்திற்கு தூக்கி செல்ல கடும் போட்டி இருக்கும்.
அன்றைய காலத்தில் கிராமத்தில் வேலைக்கு சென்றால் சம்பளம் 10ரூபாய் இருக்கும் காலத்திலேயே 11,000ரூபாய் முதல் பரிசு என போட்டி வைப்பார்கள். அந்த தொகை இன்றைய மதிப்பில் பல லட்சங்களை தாண்டும். அப்பகுதிகளில் எருமைகுளம் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் அணிகள் கலந்துகொள்வதே பெருமைகொள்ள வேண்டிய விசயமாக இருக்கும். ஏனென்றால் மாவட்ட அளவில் பதிவு பெற்ற அணிகள் தான் எருமைகுளம் டோனமெண்டில் விளையாட முடியும்.
மதுரையை சேர்ந்த ஸ்பிரிக் கிரிக்கெட் அணி, மெசஸ்டிக் கிரிக்கெட் அணி, டிவிஎஸ் கிரிக்கெட் அணி, எம்ஆர்எப் அணி என புகழ்பெற்ற அணிகள் வந்து எருமைகுளம் கிராமத்தில் விளையாடுவார்கள். மைதானத்திற்கு வாகனங்கள் வரும் வசதி எருமைகுளம் கிராம மைதானத்தில் இருந்தது. விளையாட வரும் அணிகள் கார் மற்றும் வேன்களில் வந்து விளையாடி செல்வார்கள்.
போட்டிக்கு குறைந்தபட்சம் 20 ஓவர் என 40 ஓவர்கள் வீசப்படும் போட்டிகளாக நடைபெறும். ஒருநாளைக்கு அதிகப்பட்சமே இரண்டு போட்டிகள் தான் நடைபெறும். எருமைகுளம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி என்றாலே 10நாட்களுக்கு மேல் சில வாரங்கள் வரை நடக்கும். எங்கள் கிராமத்தில் உலகத்தரத்திலான கிரிக்கெட் விமர்சகர் காளிமுத்து மாமா இருந்தார். அவரின் மேற்பார்வையில் தான் 90களிள் போட்டிகள் நடைபெறும். எருமைகுளம் கிராம மைதானத்தில் விளையாடிய வீரர்கள் தமிழ்நாடு அணிகளிலும் விளையாட தகுதி பெற்ற நிகழ்வுகள் அன்றைய காலத்தில் நடந்துள்ளது.
எருமைகுளம் கிராமத்தில் 70வயது 80 வயது படிக்காத பெரியவர்களுக்கு கூட கிரிக்கெட் பற்றி தெரியும். தற்போது 50 வயதில் உள்ள பலரும் அந்தக்கால விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள் தான்.
ஆனால் 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு ஊரில் பெரும்பான்மை மக்கள் மதுரைக்கு புலம்பெயர்ந்து விட்டார்கள். பழமை வாய்ந்த மைதானம் கருவேல மரங்களால் மூடிப்போனது.
பின்பு பல ஆண்டுகள் ஊரில் கிரிக்கெட் போட்டியே இல்லாமல் போனது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு 2K கிட்ஸ்கள் கொண்ட அணி சமீபத்தில் உருவானது. அதுவும் ரப்பர் பந்து டென்னீஸ் பந்துகளில் தான் விளையாடுகிறார்கள்.
சமீப காலமாக கோடை விடுமுறையில் போட்டிகளை நடந்துகிறார்கள்.
தற்போதைய கிரிக்கெட் மைதானம் கிராமத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. மிக அழகான நேர்த்தியாக மைதானம் அமைந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு மே 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்பரிசு ரூபாய் 30,001
இரண்டாம் பரிசு 25,001
மூண்றாம் பரிசு 20,001
நான்காம் பரிசு 15001
ஐந்தாம் பரிசு 10001
என பரிசுகளோடு நடைபெறும். உங்கள் ஊர் அணிகள் எருமைகுளம் கிராம போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாட அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment