Saturday 31 August 2024

குமரி விவேகானந்தர் மண்டபத்தில் பாஸ்கர சேதுபதி சிலை - மூக்கையாத்தேவர் சட்டசபையில் பேச்சு

குமரி விவேகானந்தர் மண்டபத்தில் பாஸ்கர சேதுபதி சிலை
மன்றத் தலைவர் அவர்களே, நமது மதிப்பிற்குரிய யோகியும், ஞானியும் ஆகிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வ மத மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவின் பெருமையையும் இந்து மதத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் ஒரு சிறப்பை மனித குலத்திற்கு எடுத்துக் காட்டினார்கள். இந்தியாவின் சார்பாக அவ்வளவு பெருமை ஏற்பட அவர்களுக்கு உறுதுணையாக இருந்து எத்தனையோ உதவியையும் கொடுத்து வெளிநாடு அனுப்பிய, இலை மறைத்த காய்போல இருந்த தமிழக விவேகனந்தராக இருந்தவர்கள் பாஸ்கர சேதுபதி இராமநாதபுரத்து ராஜா அவர்கள். அவர்களைப் பற்றிச் சாதாரணமாக நாம் பெருமை பாராட்டிக் கொள்வதைக் காட்டிலும் சுவாமி விவேகானந்தர் அவர்களுடைய வாசகத்தாலேயே அறிவது சிறப்பானது. முதன் முறையாக வெற்றி பெற்று சுவாமி அவர்கள் பாம்பனுக்கு வந்திறங்கியபோது அவருக்கு வரவேற்பளித்த இராமநாதபுரம் ராஜா அவர்கள் தங்களுடைய பாதம் தரையில் படக்கூடாது. என் தலையில் படவேண்டுமென்று சொல்லிய நேரத்தில் அந்த வரவேற்புக்குப் பதில் அளித்துப் பேசும்போது சுவாமி அவர்கள், "எனக்களித்த இந்த வரவேற்புக்கு எனது நன்றியைத் ஏற்பீராக. இராமநாதபுரம் ராஜா என் மீது கொண்டுள்ள அன்புக்கு எவ்வாறு நன்றி தெரிவிக்கவல்லேன். நான் ஏதேனும் நற்பணி செய்திருந் தால் அதற்குக் காரணம் இவரே. இந்தியா இவருக்கே கடமைப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நடைபெறும் சர்வ சமய மகாநாட்டுக்குச் செல்லும் எண்ணத்தை என்னுள் தூண்டியவர் இவரே. என் அருகே நின்று மிகுந்த உற்சாகத்துடன் நான் இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார். இவர் போல் இன்னும் ஐந்தாறு ராஜாக்கள் நமது அருமை நாடு முன்னேற வேண்டுமென்று ஆன்மிகத் துறையின் வளர்ச்சிக்காக முன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்" என்று கூறியுள்ளார். அதேபோல இராமேஸ்வரத்தில் அளித்த வரவேற் புக்குப் பதில் அளித்துப் பேசுகையில், "நமது மதத்தின் பொருட்டு மேற்கு நாடுகளில் ஆற்றப் பெற்ற சிறு பணியாதேனும் ஒன்றுண்டாகில், நம் நாட்டு மக்களை எழுப்பித் தங்கள் நாட்டிலே புதைந்து கிடக்கும் மாணிக்கத்தின் பெருமையை உணருமாறு தூண்டியிருப்பே னாகில், நமது நாட்டிலே பெருக்கெடுத்து ஓடிவரும் அரிய சுனை நீரை அருந்துமாறு தாகத்தால் தவித்து, அறியாமையில் மூழ்கிப் பிறநாட்டு வேண்டியிருப்பனாகில், தாகத்தால் தவித்து, அறியாமையில் மூழ்கிப் பிறநாட்டு சாக்கடை நீரினை அருந்தாது தடுத்திருப்பனாகில் இந்திய நாட்டின் முதுகெலும்பு மதம் ஒன்றே என்று அறியுமாறு வலியுறுத்தியிருப்பனாகில், இந்திய மக்கள் மீது எவ்வளவு குபேர செல்வத்தைச் சொரிந்த போதிலும், எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தபோதிலும் எவ்வளவு அரசியல் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் இந்திய நாட்டின் முதுகெலும்பாகிய மதம் வீழ்ச்சியுறுமேல் இந்தியா அழிவுறும் என்பதை வற்புறுத்த எடுத்தோதியிருப்பதில், அதற்காக இந்தியாவும், பிற நாடுகளும் எவருக்காவது பெரிய கடமைப்பட்டுள்ளது என்றால் அது இராமநாதபுரம் ராஜாவாகிய அவர்களுக்கே. ஏனெனில் இந்த எண்ணத்தை என் உள்ளத்தில் முதன்முதலில் விதைத்தவர் தாங்களே. இத்திருப்பணியில் ஈடுபடுமாறு இடைவிடாது தூண்டியவரும் தாங்களே . வருங்கால நிகழ்ச்சிகளை உள்ளுணர்வால் அறிந்த தாங்கள் என் கைபற்றி எனக்குதவி, ஓய்ந்தலன்றி உற்சாக மூட்டினீர்கள். எனவே, எனது வெற்றி கண்டு பெருமகிழ்ச்சியுற்றோரும் தாங்களே முதல்வராயிருக் கிறீர்கள். இந்தியா திரும்பும் நான் முதன் முதலாகத் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் காலடி வைக்கவேண்டு மென்று விரும்பினீர்கள்” என்று சேதுபதி மன்னர் குறித்த பாராட்டுதலை விவேகானந்தர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமையை, தமிழகத்தினுடைய வரலாற்றினைப் பாதுகாக்கக் கூடிய நேரமாக இது அமைந்திருக்கிறது. இது பொது மக்களின் பிரச்னையாக இருந்தாலும் இந்தியாவினுடைய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கக்கூடியதாக அமைந்து இருக்கிறது. அவர்கள், காசி, இராமேஸ்வரம் என்ற இரண்டு இடங்களைச் சொன்னாலே இந்தியாதான் என்று புரிந்துகொள்ளக் கூடிய நிலைமையை ஒரு வரலாற்றைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள். எனவே, பாதுகாத்துக் கொள்ளத் தமிழ்நாடு அந்த விழா ஆரம்பித்து அடுத்த மாதம் பூராவும் நடக்கிறது. எனவே, இடையிலே எப்பொழுது வேண்டு மானாலும் சேதுபதி அவர்களுடைய சிலையை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். அரசே செய்யலாம், அல்லது அந்தக் கமிட்டியினரே செய்யலாம், மக்களும் அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். சரித்திரத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம்முடைய முதல்வர் அவர்களைச் சார்ந்திருக்கிறது. எனவே, இதை வலியுறுத்திக் கூற வேண்டிய நிலை இருக்கிறது. இது உடனடியாக கவனிக்கவேண்டிய பிரச்னை. கிளர்ச்சி நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாத நிலைமையை உண்டாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இதிலே நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். - PK.மூக்கையாத்தேவர் P.K.மூக்கையாத்தேவர் சட்டமன்ற உரை. 1970 ஆகஸ்ட் 25 அன்று குமரியில் திறக்க இருந்த விவேகானந்தர் மணிமண்டபத்தில் பாஸ்கர சேதுபதியின் சிலையை அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் மூக்கையாத்தேவர் பேசியது.
நூல்: ஐயா Jeevabharathy K ஜீவபாரதி அவர்கள் எழுதிய "சட்டமன்றத்தில் மூக்கையாத்தேவர் ". முகநூல் பதிவு : Sadaiyandi Puregold Sms