Thursday 31 August 2017

ஐவர் ஜீவசமாதி தரிசனம்

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)ஆலயம் கட்டியவர்கள்.

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்கள்  மூவர் ஜீவசமாதி 

1-மௌன சுவாமி

2-காசி சுவாமி 

3-ஆறுமுக சுவாமி


வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி

4-ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி


திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்

5-ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி .


திருச்செந்தூர் ஆலயத்தை கட்டியவர்கள் இந்த ஐந்து சித்தர்கள் தான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். 


இந்த ஐந்து சித்தர்களின் ஜீவசமாதிகளையும் ஒரே நாளில் யாரும் வணங்கியவர்கள் உண்டா என தெரியவில்லை. ஆனால் #நான்_வணங்கியுள்ளேன். அது எனது பாக்கியமாக கருதுகிறேன். 

தரிசனம் செய்ய செல்லும் வழி

1-காசி சுவாமி, 2-மௌன சுவாமி ,
3-ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.

4-ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

5- ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புரம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். 4வது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். 5 ஜீவசாமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.  நான் பலரிடம் விசாரித்து சென்றேன். பூட்டி கிடந்தது.  வசலில் அமர்ந்து வணங்கி வந்தேன்.  மனதிற்கு பெரும் தெளிவை அமைதியும் தந்தது.  இயற்கை சூழ்ந்த இடம். முடிந்தால் போய் வாருங்கள் நண்பர்களே.

Wednesday 30 August 2017

ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி

திருச்செந்தூர் முருகன் ஆலய ராஜகோபுரம் கட்டிய ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமிகள்.

""""""""""""""""""""""""#ராஜகோபுரம்""""""""""""""""""""""""
137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

இவர் தனது இறுதிகாலத்தில் தான் செய்ய வேண்டிய தெய்வ தொண்டு நிறைவுபெற்றுவிட்டது. அதனால் ஜீவசமாதி ஆவதாக கூறி இடத்தை தேர்வு செய்தார் . தான் ஜீவசமாதியில் இறங்கி யோக நிலையில் அமர்ந்த உடன் மேலே உள்ள கல்லை மூடுமாறு கூறிவிட்டு அமர்ந்தார். ஆனால் உயிருடன் இருக்கும் போது மூட மனமில்லாமல் தலை சாயும் வரை காந்திருந்து பின்பு மூடினர். இவரின் ஞான ஜீவசமாதி ஆழ்வார்தோப்பு தாமிரபரணி கரையோரத்தில் உள்ள காந்தீஸ்வரம் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.

ஜீவசமாதியில் நான் எடுத்த புகைப்படம் முதல் கமாண்டில் உள்ளது.
அருஞ்சுனை காத்த அய்யனார்

அருஞ்சுனை காத்த அய்யனார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இவ்வூரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700  ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில்  தடாகம்(நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி  என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி  விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம்  கொண்டார்.

கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ‘‘உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ  வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம்  சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரிப்பாய்’’ என்று சாபம் இட்டார். ‘‘அனைத்தும் அறிந்த மாமுனியே, அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா,’’  என்று மங்கையவள் வினவ, ‘‘பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கம் போவாய்’’ என்று  உரைத்தார் அவர்.

இந்நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம் தினமும் ஒரு கனி தான் காய்க்கும். அக்கனியை தான் மன்னன் உண்டு வந்தான்.  மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள்  ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர். வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்து  விட்டது. இதை காவலாட்களும், காண்கவில்லை, கன்னி கனகமணியும் கவனிக்கவில்லை. குடத்து நீருடன் குமரி அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில்  இருபத்தோரு தேவாதி தேவாதைகள் எதிரில் வந்தன. அவைகள் தாகத்தோடு இருக்கிறோம்.

பெண்ணே தண்ணீர் கொடு என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. யாருக்கேனும் நீ தண்ணீர்  கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். இந்த ரகசியத்தை எடுத்துக்கூறினால் நீ மரித்து போவாய் என்றது. அதை எண்ணி தண்ணீர் கொடுக்க மறுத்தாள்  கனகமணி. அப்போது தாகத்தால் நாங்கள் மரணித்து போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சின. மனதை கல்லாக்கிய மங்கை கனகமணி தண்ணீர்  கொடுக்க மறுத்து சினத்துடன் வழியை விட்டு விலகி செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை என்றுரைக்க, தேவாதைகள்  வழிவிட்டன. அவள் வீடு போய் சேர்ந்தாள்.

கானகத்தில் பசியோடு கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். காவலாட்கள் இன்னும் கனி விழவில்லை என்றனர் கனிவோடு, கடுஞ்சினம் கொண்ட மன்னன்  நேரம் தவறிவிட்டது. விழாமல் இருக்காது கனி. காரணம் இது இறைவன் கொடுத்த அருட்பணி.  மாலை பொழுதாக போகிறது மறுபடியும் விழாது இனி. கனியை  உண்டது உங்களில் யார் என்று வினவ, மறைத்து வைக்கவே மனமிருக்காது. மறந்தும் மன்னவருக்கு உரிய கனியை உண்ண நேருமோ, மரணத்தை மனம்  உவர்ந்து வரவேற்க யார் முன் வருவா் என்று காவலர்கள் பதில் உரைத்தனர். அப்படியானால் கனி களவாடப்பட்டிருக்கிறது. காப்பவனை விட கள்வனே  பெரியவனாகி விட்டான்.

‘‘சரி, எப்படியானாலும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் கனியை உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுங்கள். ஒரு வீடு விடாமல் தேடுங்கள்.  கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது’’ என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று  எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் நீரோடு கனியும் இருக்க கண்டனர். கனி எடுத்த காவலர்கள்  கன்னியவளை இழுத்து வந்தனர். மன்னன் முன் நிறுத்தினர். காவலர்கள் கூறினர் குடத்தில் நீருக்குள் இருந்தது. அப்போது அவ்விடம் வந்த தேவாதைகள்,  ‘‘கொற்றவனே நாங்கள் உரைப்பதையும் ஒரு கனம் கேளீர், குடத்து நீரில் கனியை இவள் களவாடி சென்றிருக்கவேண்டும்.

அதனால்தான் குரல் வளை காய்ந்து குடிக்க நீரை மன்றாடி கேட்டும், குமரி இவள் மறுத்து போனதன் மர்மம் இப்போது புரிகிறது’’என்றனர். அப்போது அங்கு  வந்த பேச்சியம்மன், ‘‘முதுமையடைந்த பெண்ணாய் வந்து மன்னா, இவள் களவாட வில்லை. கனி தானாக விழுந்தது’’ என்றுரைத்தும் மன்னன் கேளாமல்  மங்கை இவளுக்கு மரண தண்டனையை. உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னி கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். நான் வணங்கும் அய்யனே என்று தனது தெய்வத்தை அழைத்தாள்  கனகமணி. அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ‘‘கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றார் சாஸ்தா.

‘‘வேண்டாம் அப்பனே, இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் நான் எண்ணியது  நிறைவேறும் என்றார் அந்த மாமுனி. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணிக்கு அலைந்து சாபம் பெறக்கூடாது  என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுவாமி, சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல்  வேலியிட்டு தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்’’ என்றார்.‘‘அருமையான சுனையாக மாறும் உன்னை காத்தருள்வேன்  என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்’’என்று அழைக்கப்பட்டார். மன்னன் மதி மயங்கி தவறு இழைத்துவிட்டேன் என  எண்ணி, தனது உயிரை மாய்த்துக்கொண்டான்.

இருபத்தோரு தேவாதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரின. அதன் பின்னர் அவர்களுக்கு தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்து தனது கண்காணிப்பில்  வைத்துக்கொண்டார் அய்யனார். மூலவர் பூர்ண புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன்,  தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சுனையில்  குளித்தால் தீராத பினிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை  வழிபட்டால் அவை மாறிவிடுகிறது.

துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை அருள்கிறார் அருஞ்சுனை காத்த அய்யனார். இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர்  நிர்வகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர்  செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அம்மன்புரத்திலிருந்து  மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.


Thursday 17 August 2017

குலசேகரபட்டினம்


முத்தாரம்மன் கோவில்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி தலமாகும். இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த கோவிலாகும். இந்த தலம் திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர்.

தசரா

மகிசாசூரன் என்ற அசுரனை அன்னை பராசக்தி வதம் செய்து தேவர்களை காத்த நாளினையே தசராவாக கொண்டாடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு மாலை சூடி வேடமணிந்து பரவசமாக ஆடியும் பாடியும் பக்தர்களிடம் காணிக்கை பெறுகின்றனர். பத்தாம் நாளில் சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெருகிறது. அத்துடன் பக்தர்கள் மாலையினை கழற்றி விரதத்தினை முடித்துக்கொள்கின்றனர்.

அமைவிடம்

திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருச்செந்தூரிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

திருச்செந்தூர் ஆலயத்தில் நான்

திருச்செந்தூர் ஆலயத்தில் நான் 1-08-2017 முதல் 14-08-2017