Tuesday, 24 October 2017

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.

1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்

சண்முக கவசம்
பஞ்சாமிருத வண்ணம்
குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
திருப்பா (திட்ப உரை) - 1101
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
செக்கர் வேள் செம்மாப்பு - 198
செக்கர் வேள் இறுமாப்பு - 64
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
குமாரஸ்தவம் 44
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
ஆனந்தக்களிப்பு 30
சமாதான சங்கீதம் 1
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2.

ஆகப் மொத்தம்பாடல்கள் 6666 பாடியுள்ளார்.

No comments:

Post a Comment