Saturday, 28 October 2017

1959 பிப்ரவரி 13

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory"

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழகள் மூட மறந்தன.

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.

"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.

ஐயா,

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட.

காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும்.

அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிஅவாம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர்.

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!

'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நில்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தானு புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.

கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முனூனே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment