Saturday, 8 July 2017

தேவர் பேச்சில் தமிழின் இனிமை கண்டேன்


பசும்பொன் தேவரின் தனிமனித வாழ்க்கை வரலாறு தேசிய இயக்க வரலாறு பெறவேண்டிய இடத்தைப் பெறமுடியாத வகையில் மூடி மறைப்பதில் சில சக்திகள் இதுவரை வெற்றி கண்டு வருகின்றன. ஆனால் இவற்றையும் மீறிக்கொண்டு அவரது தொண்டும் சேவையும் உரிய இடத்தைப் பெறப்போவது உறுதி.

நான் உயர்நிலைப் பள்ளியில் தொடக்கப் படிவங்களில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன்முறையாகத் தேவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆவலோடு கூடியிருந்த பெருந் திரளிடையே நானும் ஒரு துளியாக முண்டியத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில் பெரும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. தேவரோ வந்து சேரவில்லை. எங்களுக்குப் பலத்த ஏமாற்றம். ஆனால் கூட்டம் கலைவதாக இல்லை.

ரொம்ப நேரம் கமித்தே தேவரின் கார் வந்து சேர்ந்தது. ஒலிபெருக்கி இயங்கவில்லை. அதைத் தூக்கி அப்புறமாக வைத்துவிட்டு கொட்டும் மழையில் அவரும் நனைந்து கொண்டே பேசத் தொடங்கினார். இது உசிலம்பட்டியில் நடந்தது.

மழையின் ஒசை காதில் விழவில்லை. சிங்கநாதம் போன்ற மணிக்குரல் முழங்கியது. இடி முழக்கம் விண்ணிலிருந்து வெடிக்கவில்லை. வீரத்தின் சின்னமாய் நின்ற அவரது மீசைக் கடியிலிருந்து ஏதோ ஒரு மந்திர சக்தி முழங்குவது போலக் கேட்டது.

வெள்ளையனை எதிர்த்து முழங்கிய அந்த வீரத் தளபதியின் போர் முழக்கம் எங்கள் இளம் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவர் பேசியதை அவர் பேசியது போலவே பேசிப்பழசி வந்தோம் மாணவர்களிடையே இதில் போட்டி நடக்கும். அதன் பிறகு அவரது கூட்டங்களைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

அவரது பேச்சில் தமிழின் இனிமையையும்,  வன்மையையும் கண்டேன். அவரது தோற்றத்தில் களங்கமற்ற வீரஉருவத்தைக் கண்டேன். அவரது வாழ்க்கையில் அப்பழக்கற்ற தூய்மையைக் கண்டேன்.

கொள்கையில் உறிதி, அரசியலில் தெளிவு, பொது வாழ்வில் நேர்மை, சிறந்த மனிதாபிமானம் இதைக் கண்டதால் அவரைத் தேசியத் தலைவராக மதித்தேன்.

ஆனால் எந்தப் பழிக்கும் சதிக்கும் அஞ்சாத சில பேர்வழிகள் அவரை ஒரு கொள்கைக் கூட்டத் தலைவராகவே சித்தரித்தனர். ஒரு சாதித் தலைவராக, ஒரு தேசியத் தலைவரை சிறுமைப்படுத்தினர்.

கடைசியாக வெள்ளையனை வெளியேற்ற வீரச் சமர்புரிந்த செம்மலுக்கு கொலைக்குற்றம் சுமத்தி சிறைக் கொட்டடியில் தள்ளினர்.

துரோகத்திற்குக்கூட ஒரு எல்லை உண்டு. சதிக்குக்கூட ஒரு வரம்பு உண்டு. அரசியல் சாகசங்களுக்குக்கூட சில நியதிகள் உண்டு.

ஆனால் திரு. தேவர் சம்பந்தப்பட்ட மட்டில் எந்தக் கொடுமையைச் செய்தும் அவரை வீழ்த்த சிலர் முயன்றனர். தற்காலிக வெற்றிகளையும் ஈட்டினர்.

ஒரு இனம் அவரைச் சார்ந்த நம்பி ஆதரித்து தொழுது நின்றது உண்மை ஆனால் அதை மூலதனமாக்கி தனது சொத்ததாக்கி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள முயன்ற முனாந்தர பேர்வழி அல்ல தேவர்.

தா.பாண்டியன். எம்.பி...
பசும்பொன் தேவரைப்பற்றி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கூறியவை."

No comments:

Post a Comment