Thursday 4 July 2024

ஓட்டுக்கும் பணம் வாங்கினால் மகா பாவம் - தேவர்

அரசாங்கம் அநியாயம் செய்தே பழகிவிட்டது. அதனால் அநியாயத்தை அறவே கைவிட்டு, ஒழுங்கு நிலை வகிக்கவும் முடியாது. எப்படி அவர்கள் நிலத்துக்கு உச்சவரம்பு கட்டுகிறார்களோ, அதேபோல அவர்கள் புரிகிற அநியாயத்துக்கும் உச்சவரம்பு, அதாவது குறைந்தபட்ச அநியாயத்தையாவது செய்தால் நாட்டுக்கும் நலம், அவர்களுக்கும் ஷேமம். பதவி ஆசை அதிகரித்து, அதற்காக அதிகபட்ச அநியாயத்தைச் செய்தால் நாடு கெடும். அந்தக் கெட்டுப் போன நாட்டில்தான் அவர்களின் சந்ததிகளும் வாழ வேண்டும். ஆகவே நாட்டுக்காகவோ, இதர மக்களுக்காகவோ அல்லாது போனாலும், அவர்களின் சொந்த சந்ததிகளின் நலனுக்காக வாவது, அதிகபட்ச அநியாயத்தைச் செய்து நாட்டைக் கெடுக்காமல், குறைந்தபட்ச அநியாயத்தையாவது செய்து நாட்டை மிஞ்சவிட வேண்டுகிறேன். ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர் பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் 'முளைக்கொட்டு' என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டு போய் பார்க்கிறீர்கள். 'ஜல்லிக்கட்டு' என்றால் நான்கு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய்ப் பார்த்து வருகிறீர்கள். ஆனால் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர் பார்க்கலாமா? உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமையல்லவா ஓட்டுப் போடுவது? காசுக்காகக் காத்திராமல், நமது சொந்த தேசியத் திருவிழாவுக்கு என்று நினைத்துக் கொண்டு, அவரவர் வசதி, தூரத்துக்குத் தக்கவாறு சொந்தப் பணத்திலிருந்து இரண்டோ. மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப் போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். "எல்லாக் கிராமங்களுக்கும் நான் வருவேன்" என்று எதிர் பார்க்காதீர்கள். என் வருகையை நீங்கள் எவ்வளவு ஆசையோடு விரும்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கும் அந்த ஆசை நிறைய உண்டு. ஆனால் இருதரப்பு ஆசைகளையும் நிறைவேற விடாமல் தடுக்கிறது என் உடல்நிலை. என் உடல்நிலை எனது ஆர்வத்துக்கு இடமளிப்பதாக இருந்தால், நான் கிராமம் கிராமமாக வந்து மக்களை மகிழ்விப்பதில் ஒரு போதும் பின்படமாட்டேன். எனக்கு என்னைவிட மக்கள் முக்கியம். எனவே நான் வந்தால்தான் ஓட்டுப் போடுவோம் என்ற அபிமான நிபந்தனை விதிக்காமல், நம்மால் ஆதரிக்கப்படும் எல்லா அபேட்சகர்களுக்கும் உங்கள் வாக்குகளைப் போட்டு, வெற்றி யடையச் செய்து தேசியத்தைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன். - பசும்பொன் தேவர். ஜெய்ஹிந்த் ( 1962 ஜனவரி 14ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவர் பேசியதின் இறுதி வார்த்தைகள் இவை. இது தான் தேவரின் கடைசி மேடை பேச்சு.) Post : Sadaiyandi Puregold Sms

No comments:

Post a Comment