Tuesday 2 July 2024

மனதை அடக்கினால் சகல நன்மையும் உண்டாகும். - பசும்பொன் தேவர்

மனித வளர்ச்சி மென்மையாக இருக்கும் காலம் பதினாறு ஆண்டுக்கு உட்பட்டதாகும். அக்காலங்களில்தான் ஞாபகசக்தி பூரண வலுவடைந்திருக்கிறது. அதற்குத்தான் “இளமையிற் கல்' என்ற வாசகம் சான்று. அதற்குப் பின் பருவம் காம வளர்ச்சிப் பருவம். அதே பருவந்தான் தெய்வ நுகர்ச்சிப் பருவம், காமத்தை அடக்கிக் கையாண்டவன் தெய்வத்தை அடைகிறான். முடியாதவன் அருமையாகக் கிடைத்த சக்தியை, கேவலம் அற்ப ஆசைக்கு ஆளாக்கி, அதன் பயனாய் பிணி, மூப்பு, சாக்காடு என்பதை அடைகிறான். நோயாளிகளாய் அறிவீனர்களாய் அழிந்து போகாமலிருப்பதற்காக மகான்கள் யோக முறையைக் கண்டார்கள்; சொன்னார்கள். யோகம் எட்டு வகைப்படும். அதைத்தான் "அஷ்டாங்க யோகம்' என்று சொல்வது, அதிலும், அகம், புறம் அனுஷ்டானிக்கப்படுகிறது. அவையாவன: கட யோகம், கர்ம யோகம், தாந்திர யோகம், ராஜயோகம், மந்திர யோகம், பக்தியோகம், லய யோகம், ஞான யோகம் எனப்படும். இவற்றில் கடம், தாந்திரம், மந்திரம், லயம் இவை புறம் கர்மம், ராஜம், பக்தி, ஞானம் இவை அகம். ஒன்று வெளியானுபவம், உறுப்பு இவற்றின் இயக்கங்களைக் கொண்டு மனத்தைக் கட்டுப்படுத்துவது. அழியாத சரீரத்தை அடையப் பாடுபடுவது. மற்றது மனத்தையே மனத்தால் லயிக்கச் செய்து, மனத்தின் உயிர்ப்புச் சக்திகளை மனத்தின் அசைவை, மனத்தின் மாறுதலை மதியின்பாலுண்டாகும் மன நுணுக்கத்தைக் கண்டு, கலந்து, அநுபவித்து, ஆண்டு, அடக்கிக் கையாள்வதாகும். மனம் அடங்கினால் சகல சித்தியும் ஏற்படும் இதைத்தான், "மனமென்னும் மாடடங்கத் தாண்டவக்கோனே மாடெல்லாம் தானடங்கும் தாண்டவக்கோனே" என்றனர் பெரியோர். மற்றொருவர் "மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்" என்கின்றார். மனத்தின் தன்மை அளவிடமுடியாதது. யாரார் எப்படியெப்படி அவரவர்களுடைய கர்மானுஷ்டானங் களுக்குத் தக்கவாறு நடக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் அவரவர்களுக்குச் சகாயமாக நின்று உதவுவது மனத்தின் சுபாவம். எல்லாம் தெரிந்து, எதிலும் இச்சையற்ற, எதுவும் தனக்கு அன்னியமில்லை என்று கண்ட, எல்லாம் தானே என்றுணர்ந்த மகான்கள் இச்சிக்க வேண்டிய அனுபவமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எல்லாம் செய்வார்கள். ஒன்றும் செய்யாமலுமிருப்பார்கள்; அவர்கள் எதையும் இச்சை பற்றிச் செய்வதில்லை. அவர்கள் செய்கை உலக உபகாரம். உலகச் சேமத்திற்காக, தான் கண்ட இன்பம் உலகம் காணவேண்டுமென்பதற்காக உலகத்திற்கு வழி காட்டுகிறார்கள். அவர்கள் செய்கைக்கும் அவர்களுக்கும் எந்தவிதப் பற்றும் கிடையாது. அதைத்தான் கிருஷ்ண பரமாத்தா,"செய்கையில் செய்கை இன்மையும் செய்கை இன்மையிற் செய்கையும் காண்பவன் எவனோ அவனே உத்தமன்" என்கிறார். - பசும்பொன் தேவர். 12.6.1949 ல் மதுரை வெள்ளியம்பலம் மண்டபத்தில் பசும்பொன் தேவர் ஆற்றிய சொற்பொழிவு. நூல்: பொக்கிஷம் - பக்கம்: 192 இணையதள பதிவு : Sadaiyandi puregold sms

No comments:

Post a Comment