Thursday, 4 July 2024
மனித சரீரத்திற்குத் தாயகமாக நிற்பவள் பராசக்தி - தேவர் சொற்பொழிவு
மனித சரீரம் சாதாரணமாக இருந்தபொழுதிலும், அந்தச் சரீரத்திற்குத் தாயகமாக நிற்பவள் பராசக்தி. அந்தப் பராசக்தியின் ரூபம் எப்படியெப்படி இருக்கிறது? என்பதை, நெற்றிக்கண்ணை உபயோகித்துப் பார்த்த மகான்கள் கண்டனர்.
அப்படிக் கண்ட பெரியோர்கள், இந்தச் சரீரமானது நவதுவாரத்தின் வடிவமாக இயங்குகிறது. இந்தச் சரீரத்திற்கு ஆதாரமாக நவக்கிரகங்கள் வேலை செய்கின்றன. இதற்கு மிகப்பெரிய சக்திகளைச் சாதிப்பதற்காக நிற்பது நவகுண்டயாகம் என்பதை எல்லாம் வைத்துதான், நவராத்திரி என்பதை கொண்டாட ஆரம்பித்தனர். அத்தோடும் கூட பராசக்தியின் சொரூபத்தை, அந்த ஞானக்கண் பெற்றுப் பார்த்தவர்கள் அது நவமணியின் லட்சணமாக இருக்கிறதென்பதைக் கண்டு,
“இருகுழை கோமளம் தாழ்புஷ்பராகம்
இரண்டுகண்ணும் குறுமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வைரம்; திருநன்கழுத்து கைவாள் பவளம் சிறந்த வல்லி, மரகத நாமமும் திருமேனியும் பச்சைமாணிக்கமே "
என்று காண்கிறார்கள்.
இதை வைத்துதான் "நவமணி மாலை"யை அணிவது என்றெல்லாம் பெரியோர்கள் வைத்திருக்கின்ற முறையாகும். இந்த நிலைமையிலேயே நிற்கின்ற ஒன்று, அது பஞ்சாக்னி வடிவமாகத் தங்களுடைய காரியத்தைச் செய்து வருகிறது என்பதையும், பெரியோர்கள் கண்டார்கள்.
இதையே பஞ்சாக்னி ஹோமம் என்று வேதியர்கள் ஆலயத்திலே வைத்துப் பரிசீலித்து வருகிறார்கள். இதைத்தான் ஐந்து விதமான நிலையிலே உள்ள சூடத்தட்டை வைத்து, ஐந்து ரூபமாக சூடம் எரிவதற்கு இலக்காக வைத்து, தீபத்தை ஆரத்தி பண்ணிக் காட்டுகிறார்கள். அதன் ரகசியம் என்ன?
ஒரு குழந்தை பிறக்கின்ற காலத்திலே, அது உயிருடன் வாழுமா? வாழாதா? என்ற சந்தேகம் ஏற்பட்டபோது பிறந்த குழந்தை அழவேண்டும் என்று நினைத்தனர் அங்குள்ள தாய்மார்கள். ஏனென்று கேட்டால் உட்சுவாசம், நிஷ்சுவாசம் இல்லாமல் கர்பத்தில் இருக்கிற குழந்தை, பிறந்தவுடனேயே அதற்கு அபானம், பிராணன் இரண்டு வாயுவும் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது. சஞ்சரிக்க ஆரம்பித்தவுடனேயே முதலில் மலத்தை வெளியே தள்ள, தள்ளின மாத்திரத்தில் அதற்குப் பசி ஏற்படும். பசி ஏற்பட்டதின் பலனாக அது அழும். அதுதான் அதனுடைய உயிர் இயங்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகும். இல்லையேல் அந்தக் குழந்தை பிறந்தவுடன் இறந்த குழந்தையாகும்.
அந்தப் பசி என்பது என்ன? அதுதான் "அன்னை இட்ட தீ அடிவயிற்றினில்" என்று சொல்ல, பராசக்தி முதல் முதலில் அந்தக் குழந்தை வாழ்வதற்காக வைக்கும் பசித் தீயாகும். அந்தப் பசி ஏற்பட்ட மாத்திரத்திலேயே அதற்கு ஏற்படுவது என்ன? ஒரு சிறிய கோபம். அதன் வடிவமே அழுகை. பசித் தீ. கோபத் தீ என்றஇரண்டையும் பெற்றே சிறு குழந்தை தன்னுடைய வாழ்க்கையை வளர்த்துக் கொண்டு வருகிறது. அதை வளர்த்து அதற்கு நடுப்பாகம் ஏற்படுகிறபொழுது மற்றொரு தீயையும் பராசக்தி வைக்கிறாள். அந்தத் தீதான் காமத் தீ. இந்த முத்தீயை பெற்றுத்தான் பெரும்பாலான மனித வர்க்கம் வாழ்ந்து, இத்து, செத்துப்போகிறது.
எனினும் அந்த முத்தீக்கு மேல் முடிவு பெறுவதற்காக, இருக்கிற பஞ்சாக்கினியிலே இரண்டு அக்னிகள் காத்து நிற்கின்றன. அவைகள்தான் யோகாக்னி, ஞானாக்னி என்பவைகளாகும். அந்த இரண்டு அக்னியைப் பெறாமல் இந்த மூன்று அக்னியிலேயே பெரும்பாலோர் வாழ்ந்து, செத்துப் போகிறவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பிறவிக்கு ஆளாகி, பலகோடி ஜன்மங்களை அடைந்து, வாழ்வு நடத்திதான் தீரவேண்டுமே தவிர வேறு வழியில்லை. -பசும்பொன் தேவர் .
1959 அக்டோபர் 10நாள் பொள்ளாச்சியில் ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோவில் 12வது நவராத்திரி ஆண்டுவிழாவில் "சக்தி" என்ற தலைப்பில் தெய்வீகத் திருமகன் ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
Post: Sadaiyandi Puregold Sms
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment