Wednesday, 27 December 2017

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோவில் மற்றும்
சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் தரிசனம்.

மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.

#திருக்கூடல்மலை

No comments:

Post a Comment