மதுரை அழகர்மலையில் பல சித்தர்கள், இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கை. மூலிகை நிறைந்த இந்த மலைக்கு சென்று வந்தாலே நோய் விட்டு போகும். நிம்மதி கிடைக்கும். நல்லது நடக்கும் என்றெல்லாம் பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. அற்புதங்கள் நிறைந்த அழகர் மலையில், பதினெட்டு
சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்தார். இவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அழகர்கோவில் மலையில் தவம் இருந்ததாக, சங்கரன்கோவில் அரசர் புலித்தேவர் புராண ஓலையில் குறிப்பு உள்ளது. சதுரகிரி இரட்டை மகாலிங்கம் சந்நிதி எதிரே, ராமதேவர் சித்தர் தவம் செய்த குகை இன்றளவும் வழிபாட்டு ஸ்தலமாக விளங்குகிறது.
ராமதேவர் வரலாறு: பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் சித்தரின் அறிவுரைப்படி, சதுரகிரி மலைக்குச் சென்று, பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்ய சென்றதும், அவரது சீடர்கள் இவர் இனி திரும்ப மாட்டார். பத்தாண்டுகள் சமாதியில் ஆழ்ந்து போகும் ஒருவர் பிழைத்து வருவதாவது' என நினைத்து அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும், அவர் வெளியே வரட்டுமே என குகை வாசலிலேயே காத்திருந்தார். பத்தாண்டுகள் கழித்து சமாதியில் இருந்து வெளி வந்தார். அந்த சீடரிடம், ""நான் மேலும் முப்பதாண்டுகள்
சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.
அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான். முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார்.
மனிதன் வாழும் காலத்தில், அவன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இதனால், இவரைத் தரிசிப்பவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவர். சதுரகிரியில் இருந்து அழகர்மலை வந்த ராமதேவர், அங்கேயே நிரந்தர சமாதியாகி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.
செல்லும் வழி: அழகர்கோவில் மலை உச்சியில், ராமதேவர் ஜீவ சமாதி அடைந்த ஸ்தலம் உள்ளது. இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற இடத்தில் சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான, செங்குத்தான மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல வேண்டும். மேலும், மிருகங்கள் நடமாட்டம் மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து பேர் சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு 7 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு கிடைக்காது. உடலை வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர் சித்தர், வேண்டிய வரம் தந்து காத்தருள்வார்.
No comments:
Post a Comment