Sunday, 31 December 2017

புலிக்கொடி

எமது கொடி
ஏற்றமிகு கொடி
பாதியில் வந்தக் கொடியல்ல
இது ஆதியில் வந்தக்கொடி
தேசத்திற்காக நேசமுடன்
நேதாஜி படைத்தக்கொடி
தேவர் திருமகனாரின்
கரங்களில் தவழ்ந்தக்கொடி
சிவப்பு வண்ண பின்புலத்தில்
சீறிப்பாயும் புலிக்கொடி
அடிமை விலங்கை
உடைத்தக்கொடி
ஆர்ப்பரித்து
எழுந்தக்கொடி
முறுக்கேறிய கரங்கள்
பிடித்தக்கொடி
உழைக்கும் மக்கள்
உயர்த்தியக்கொடி

வரலாறு படைத்த கொடியை மறந்து,
வந்தேறிக்கொடியை பிடித்தோம்!

கொடிகள் அனைத்தும்
பிடித்துவிட்டோம்
எமது குடிகள் இன்றும்
உயரவில்லை?
எவர் கொடியையும்
இனிபிடியோம்
எமது கொடியையே
பிடித்து உயர்த்துவோம்
எமது கொடி
ஏற்றமிகு கொடி
சிவப்பு வண்ண பின்புத்தில்
சீறிப்பாயும் புலிக்கொடி.

ஜெய்ஹிந்த்!

சித்தர் போகர் ஜீவசமாதி

""""""""""""""""""#போகர்_ஜீவசமாதி """""""""
பழனி முருகன் ஆலய நவபாசன சிலையை செய்தவர் சித்தர் போகர். இவரின் ஜீவசமாதி பழனி முருகன் சன்னதி அருகிலேயே உள்ளது.

போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.

பழநி முருகன் சிலை

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுவதி‌ல்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாஷணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.

போகர் நூல்கள்

போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

போகர் 12000
போகர் 7000 (சப்த காண்டம்)
ஜெனன சாகரம் 550
நிகண்டு 1700
வைத்தியம் 1000
சரக்குவைப்பு 800
செனன சாகரம் 550
கற்பம் 360
உபதேசம் 150
இரணவாகமம் 100
ஞானசாராம்சம் 100
கற்ப சூத்திரம் 54
வைத்திய சூத்திரம் 77
முப்பு சூத்திரம் 51
ஞான சூத்திரம் 37
அட்டாங்க யோகம் 24
பூசா விதி 20
ஆகியன.

சித்தர் புலிப்பாணி ஜீவசமாதி

""""""#புலிப்பாணி_சித்தர்_ஜீவசமாதி """"

குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்
     இவர் போகரின் சீடராவார்.
பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது.
போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.
இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது.

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.

Saturday, 30 December 2017

சித்தர் ராமத்தேவர் ஜீவசமாதி

மதுரை அழகர்மலையில் பல சித்தர்கள், இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கை. மூலிகை நிறைந்த இந்த மலைக்கு சென்று வந்தாலே நோய் விட்டு போகும். நிம்மதி கிடைக்கும். நல்லது நடக்கும் என்றெல்லாம் பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. அற்புதங்கள் நிறைந்த அழகர் மலையில், பதினெட்டு 

சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்தார். இவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அழகர்கோவில் மலையில் தவம் இருந்ததாக, சங்கரன்கோவில் அரசர் புலித்தேவர் புராண ஓலையில் குறிப்பு உள்ளது. சதுரகிரி இரட்டை மகாலிங்கம் சந்நிதி எதிரே, ராமதேவர் சித்தர் தவம் செய்த குகை இன்றளவும் வழிபாட்டு ஸ்தலமாக விளங்குகிறது. 

ராமதேவர் வரலாறு:  பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் சித்தரின் அறிவுரைப்படி, சதுரகிரி மலைக்குச் சென்று, பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்ய சென்றதும், அவரது சீடர்கள் இவர் இனி திரும்ப மாட்டார். பத்தாண்டுகள் சமாதியில் ஆழ்ந்து போகும் ஒருவர் பிழைத்து வருவதாவது' என நினைத்து அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும், அவர் வெளியே வரட்டுமே என குகை வாசலிலேயே காத்திருந்தார்.  பத்தாண்டுகள் கழித்து சமாதியில் இருந்து வெளி வந்தார். அந்த சீடரிடம், ""நான் மேலும் முப்பதாண்டுகள் 

சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.

அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான். முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். 

மனிதன் வாழும் காலத்தில், அவன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இதனால், இவரைத் தரிசிப்பவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவர். சதுரகிரியில் இருந்து அழகர்மலை வந்த ராமதேவர், அங்கேயே நிரந்தர சமாதியாகி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

செல்லும் வழி: அழகர்கோவில் மலை உச்சியில், ராமதேவர் ஜீவ சமாதி அடைந்த ஸ்தலம் உள்ளது. இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற இடத்தில் சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான, செங்குத்தான மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல வேண்டும். மேலும், மிருகங்கள் நடமாட்டம் மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து பேர் சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு 7 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு கிடைக்காது. உடலை வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர் சித்தர், வேண்டிய வரம் தந்து காத்தருள்வார்.