Wednesday, 7 January 2026

பாட்டாளி மக்கள் கட்சி தொண்டகள் மீது வழக்கும் இராமநாதபுரம் R.S.மடை கிராமமும்

இராமநாதபுரம் தண்ணீர் இல்லா காட்டில் தவித்த பாட்டாளி சொந்தங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சிக்காக நான்
நடத்திய சட்டப் போராட்டங்கள் - தொடர் 31
                         - வழக்கறிஞர் கே பாலு

விழுப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், மருத்துவர் அய்யா அவர்களுடன் கைது செய்யப்பட்ட ஜி.கே.மணி உள்ளிட்ட 362 பேரும் இராமநாதபுரம் நகரில் தங்கியிருக்க வேண்டும்; அங்குள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று 09.05.2013ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து, 362 பேரும் மே 10, 11 ஆகிய நாள்களில் விடுதலையானார்கள். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மருத்துவர் அய்யா அவர்களும் அதற்குள் பிற வழக்குகளில் பிணை பெற்றதால், மே 11ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வீடு திரும்பிய நாளன்று இரவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர் அய்யா அவர்களின் உடல்நலம் குறித்த கவலையில் பாட்டாளி சொந்தங்கள் ஆழ்ந்திருந்ததால் அவர்களால் உடனடியாக இராமநாதபுரம் செல்ல இயலவில்லை. பிணையில் விடுதலையாகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ், புதுவை மாநில பாமக அமைப்பாளர் அனந்தராமன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் அவர்களின் சொந்த ஊர்களில் இருந்து மே 13ஆம் நாள் புறப்பட்டு, மே 14ஆம் நாள்தான் இராமநாதபுரம் சென்றனர். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் மட்டும் ஒருநாள் முன்னதாகவே இராமநாதபுரம் சென்றார்.

ஆனால், அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...

பாட்டாளி மக்கள் கட்சியினரை பழிவாங்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. பாட்டாளி சொந்தங்களை அதிக நாட்கள் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வகுத்த சதித்திட்டங்களை எல்லாம் மீறி, அவர்கள் விடுதலையாகிவிட்டனர். இத்தகைய சூழலில், அவர்களை இராமநாதபுரத்தில் தங்கியிருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், அங்கு அவர்களுக்கு எந்த வசதியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர்.

362 பேர் ஒரே ஊரில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய சூழலில், அவர்கள் தங்குவதற்கு அறைகளை தயார் செய்வது சாத்தியமல்ல. மாறாக, திருமண அரங்குகளை வாடகைக்கு எடுத்துதான் அவர்களை தங்க வைக்க வேண்டும். இதைத் தெரிந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள், அந்த மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து, பாமகவினர் திருமண மண்டபங்களை வாடகைக்கு கேட்டால் கொடுக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்திருந்தனர். ஆனால், இந்த உண்மை பாட்டாளி மக்கள் கட்சியினர் எவருக்கும் தெரியாது. மே 13ஆம் நாளே இராமநாதபுரம் சென்றுவிட்ட ஜி.கே.மணி, கட்சி நிர்வாகிகள் மூலம் அங்குள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களை அணுகி, பாமகவினர் தங்குவதற்காக மண்டபங்களை வாடகைக்கு தரும்படி கோரினார். ஆனால், சொல்லி வைத்ததைப்போல எவரும் மண்டபங்களை வாடகைக்குத்தர மறுத்துவிட்டனர்.

மே 14ஆம் நாள் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த பாட்டாளி சொந்தங்கள் எவருக்கும் தங்குவதற்கு இடமில்லை. 362 பேரும் வெட்டவெளியில் மரநிழலில் தங்கி இளைப்பாற வேண்டியதாயிற்று. இராமநாதபுரம் நகரில் இருந்து 49 கிலோ மீட்டர் தொலைவில் தொண்டி என்ற நகரம் உள்ளது. அங்கு திருமண மண்டபங்கள் ஏதேனும் வாடகைக்கு கிடைக்குமா? என்று விசாரிப்பதற்காக ஜி.கே.மணியை அங்குள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான தொண்டி ஆனந்தன் என்பவர் அழைத்துச் சென்றார். ஆனால், அங்குள்ள திருமண மண்டப உரிமையாளர்களும் அவற்றை வாடகைக்குத்தர மறுத்துவிட்டனர். அதனால் ஜி.கே.மணி இராமநாதபுரம் திரும்பினார். இதற்கிடையே அப்போதைய செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், சென்னையில் இருந்து திருச்சி சென்று, பிணை விடுதலை குறித்த சில நடைமுறைகளை முடித்துவிட்டு, 14ஆம் நாள் பிற்பகலில் இராமநாதபுரம் சென்றார். அங்கு ஜி.கே.மணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்குவதற்குக் கூட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

மறுஉத்தரவு வரும் வரை பாட்டாளி மக்கள் கட்சியினர் இராமநாதபுரம் நகரில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி, இன்னும் எத்தனைநாள் இராமநாதபுரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்பது கூட தெரியாத நிலையில், தங்குவதற்குக் கூட இடம் இல்லாமல் என்ன செய்யப் போகிறோம்? என்ற  கவலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமாரும், அவருடன் வந்தவர்களும் தங்குவதற்காக அவரது நண்பர் இராமநாதபுரத்தில் இரு அறைகளும் முன்பதிவு செய்து வைத்திருந்தார். அந்த அறைகளில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜும் தங்கிக் கொண்டனர்.

மற்றவர்கள் தங்குவதற்கான இடத்தை எங்கே தேடுவது? என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமாரை அவரது நண்பரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் செல்பேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியிருக்கவில்லை. பா.ம.க.வினர் இராமநாதபுரத்திற்கு சென்றிருப்பதை அறிந்து, கணேஷ்குமாரைத் தொடர்பு கொண்ட நடிகர் கருணாஸ், “என்ன நண்பரே எங்கள் ஊருக்கு சென்றிருக்கிறீர்கள். என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே?” என்று உரிமையுடன் கடிந்துகொண்டார்.

அவரிடம் நிலைமையை விளக்கிய சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்குவதற்காக இடம் தேவைப்படுவதாகவும், எவ்வளவோ முயற்சி செய்தும் திருமண மண்டபங்களை வாடகைக்கு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். அதைக்கேட்ட நடிகர் கருணாஸ், பாமகவினர் தங்குவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரது கட்சி நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்ட நடிகர் கருணாஸ், பாட்டாளி சொந்தங்கள் தங்குவதற்காக திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துத்தர உதவும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, நடிகர் கருணாசின் கட்சியைச் சேர்ந்தவர்களும் கணேஷ்குமார் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் மீண்டும் திருமண மண்டபங்களுக்கு படையெடுத்தனர். அப்போதுதான் திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்குவதற்கு திருமண மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தனர். அப்போதுதான் பாட்டாளி சொந்தங்களுக்கு எதிரான ஆளுங்கட்சியின் சதித்திட்டம் தெரிந்தது. ஆனாலும், பாமகவினரை இரவில் வெட்டவெளியில் தங்க வைக்க முடியாது என்பதால், தங்கும் இடம் தேடி வேட்டை தொடங்கியது.

இராமநாதபுரம் நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆர்.எஸ்.மடை என்ற கிராமம் இருந்தது. அந்த சிற்றூரின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக கருணாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் அவர் மூலம் அங்குள்ள சமூகநலக் கூடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்ற எண்ணத்துடன் கருணாஸ் கட்சியினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் ஆர்.எஸ்.மடைக்குச் சென்றனர்.

ஆர்.எஸ்.மடை கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சமூகநலக் கூடம் ஒன்று இருந்தது. ஆனால், அதில் அந்த ஊராட்சி மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருந்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மண்டபத்தில் ஒரு சிலர் கூட தங்குவதற்கு இடம் இல்லை. பாட்டாளி சொந்தங்கள் தங்குவதற்கு எப்படியாவது இடவசதி செய்து தரவேண்டும் என்று நினைத்த கருணாஸ் கட்சியினர், சமூகநலக் கூடத்தில் இருந்த இலவச பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் பாதுகாப்பாக வைத்தனர். அதன்பின் சமூகநலக் கூடத்தை சுத்தம் செய்து, பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே பகல் முழுவதும் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாட்டாளி சொந்தங்கள், மாலையில் ஆர்.எஸ்.மடை கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சமூகநலக் கூடத்திற்கு தங்கவைக்கப்பட்டனர்.

(இந்தக் கொடுமை எத்தனை நாள் நீடித்தது? அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்...)

வழக்கறிஞர் பாலு. 

No comments:

Post a Comment