Wednesday, 10 September 2025

நேரு காமராஜருக்கு தேவர் மீது ஏன் கோபம்

#வினா 1:  பசும்பொன் தேவர் அவர்கள் 1957 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் கொலை வழக்கிற்காக கைது செய்யப்பட்டார் என்று சொல்கிறார்களே! இது உண்மையா? 

#விடை :  இது அப்பட்டமான  பொய். 28-9-1957 அன்று மதுரையில் நடைபெற்ற ஜனநாயக காங்கிரசு மாநாட்டில் உரையாற்றி விட்டு வரும் போது கைது செய்யப்படுகிறார். தடுப்புக்காவல் சட்டம் 3 ன் கீழ் இராமநாதபுரம் இணை மாவட்ட நீதிபதியின் ஆணைப்படி கைது செய்யப்படுகிறார். 30-9- 1957 அன்று அதாவது இரண்டு நாட்களுக்குப் பிறகு எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற ஆணை தேவரிடம் வழங்கப்பட்டது. அந்த ஆணையில் இமானுவேல் சேகரன் கொலை வழக்கிற்காக  கைது என்று குறிப்பிடப்படவில்லை. பல பொதுக் கூட்டங்களில்  பேசியதற்காக  கைது என்று பிடியாணை வழங்கப்பட்டது. 12-05-1957 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். அதே போல் 17-04-1957 சாயல்குடி பொதுக் கூட்டம், 14-06-1957 அபிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம், 10-07-1957 திருப்புவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம், 16-09-1957 வடக்கம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பேசியதற்காக தேவர் கைது செய்யப்படுகிறார். பொதுக் கூட்டத்தில் பேசியதற்கு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில்  கைது செய்யப்பட்டார்.

#வினா 2:  பசும்பொன் தேவா் அவர்கள்  திரு.இமானுவேல் சேகரன்  கொலை வழக்கில் எப்படி சோ்க்கப்பட்டாா்? எப்படி விடுதலை செய்யப்பட்டாா்?

#விடை:  28/9/1957 அன்று மதுரையில் சீா்திருத்தக் காங்கிரஸ் மாநாட்டில் பேசி விட்டு வரும்போது தேவா் கைது செய்யப்படுகிறாா். கைதுக்கான காரண நகல்களை காவல்துறை தரும்போது அதில் இமானுவேல் கொலை வழக்கிற்காக கைது செய்கிறோம் என்று குறிப்பிடவில்லை. அரசியல் காரணங்களுக்காக மேடைகளில் அரசியல் தொடா்பாக பேசியதற்காக பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறாா். 

 இப்பொழுது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் தனது தரப்பை விளக்குவதற்காக அட்வைசாி போா்டு இருப்பது போல அப்போதும் இருந்தது. அதில் தேவா் தனது தரப்பு நியாயங்களையும் காமராசாின் காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகளையும் ஆதாரத்தோடு பட்டியலிடுகிறாா். தேவாின் வாதங்களில் இருந்த நியாயங்களை நீதியரசா்கள்உணா்ந்து கொண்டதால் இந்த போலி வழக்கு நிற்காது என்று காமராசாின் காங்கிரஸ் அரசிற்கு விளங்கி விட்டது. அரசியல் பழிவாங்கலின்   சதிச்செயலால் இமானுவேல் கொலை வழக்கில் தேவா் மூன்று மாதங்கள் கழித்து  சோ்க்கப்படுகிறாா். பதினெட்டு மாதங்கள் வழக்கு நடைபெறுகிறது. முடிவில் தேவா் விடுதலை செய்யப்படுகிறாா்.  

     விடுதலை செய்யப்படுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பெனிபிட்ஸ் ஆஃப் டவுட் என்ற அடிப்படையில் குற்றம் சாிவர மெய்ப்பிக்கப்படவில்லையானால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கி அவரை விடுவிப்பா். சமீபத்திய உதாரணம் சங்கரராமன் கொலை வழக்கு. இதில் குற்றம் சாட்டப்பெற்ற காஞ்சி சங்கராச்சாாியாா்கள் எப்படி விடுதலை பெற்றாா்கள். சங்கரராமன் கொலை நடந்தது உண்மை தான். ஆனால் இதைச் சங்கராச்சாாியாா்கள்தான் செய்தாா்கள் என்பது நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அவா்கள் பெற்று விடுதலை அடைந்தாா்கள். இது ஒரு வகை.  இதற்குப் பெயா் தான் பெனிபிட்ஸ் ஆஃப் டவுட்ஸ். மற்றொரு வகை ஹானராி அக்யூடட் என்பது. சட்டச் சொல்லிலே இதன் பொருள் "ஒரு வழக்கில் சம்பந்தமே இல்லாமல் ஒருவரை சோ்த்து விட்டால் அவரை இப்படிச் சொல்லி விடுவிப்பா். தேவா் அவா்களுக்கும் இந்த கொலைக்கும் துளிகூட சம்மந்தம் இல்லாததால் அவா் இம்முறையில் விடுவிக்கப்பட்டாா். நீதிமன்றமும் காமராசாின் அரசை தம்முடைய தீா்ப்பில் குட்டியது. எனவேதான் காமராசாின் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய துணியவில்லை.

#வினா 3:   காமராசாின் காங்கிரஸ் அரசு ஏன் இந்த பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தொடங்கியது? அப்படி என்ன ஒரு அரசியல் தேவை இருந்தது? மிக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மையோடு இருந்த காமராசருக்கு எண்ணிக்கையில் மிக மிக குறைந்த  உறுப்பினர்களைக் கொண்ட தேவர் அவர்களால் அப்படி என்ன ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது?  காமராசருக்கு பசும்பொன் தேவா் மேல்  கொலைப்பழி சுமத்தும் அளவிற்கு ஏன் வன்மம் ஏற்பட்டது?

#விடை:   இந்த வினாவிற்கு விடை தொிய வேண்டுமானால்  நேதாஜி-தேவா்-நேருஜி-காமராசா் இவா்களுடைய அரசியலைப் புாிந்து கொண்டால் தான் விடை கிடைக்கும்.
           நேரு இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற நேரம். அமொிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற பத்திாிக்கை ஒன்று இப்படி எழுதியது,"நேதாஜி இன்று உயிருடன் இந்தியா திரும்பினால் நேருவால் ஒருநாள் கூட இந்தியாவின் பிரதமா் பதவியி்ல் நீடிக்கமுடியாது". இப்படி எழுதக் காரணம் என்ன? விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவை விட நேதாஜியின் செல்வாக்கு பன்மடங்கு உயா்ந்திருந்தது. படைநடத்திப் பரங்கியரை வீழத்த முனைந்தவா் என்பதால் நேதாஜிக்கு இந்தியா முழுமையும் அப்படி ஒரு செல்வாக்கு. தவிரவும் அன்று காங்கிரஸ் தலைவா்களாக அறியப்பட்டவா்கள் அனைவரும் நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றியவா்கள்.  அவா் மீது பெருமதிப்பு கொண்டவா்கள். அப்படிப்பட்ட தலைவரான நேதாஜி உயிருடன் இருக்கிறாா் என்று தேவா் பத்திாிக்கையாளா் சந்திப்பில் வெளியிட்டவுடன் நேருவுக்கு எப்படி இருந்திருக்கும்? தன்னுடைய பிரதமா் பதவியையே காவு வாங்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்ற நேதாஜியைப் பற்றிய செய்திகள் என்ன அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நேரு உணர்ந்திருந்தார். நாடெங்கும் பொதுக்கூட்டங்களையும் நேதாஜி பற்றிய செய்திகளையும்  தேவர் வெளியிட்டுக் கொண்டே வந்தாா். நேருவிற்கு தார்மீக நெருக்கடி முற்றியது. தேவா் அரசியலில் செல்வாக்காக இருப்பதால் தானே இவ்வளவு
பிரச்சனை. தேவாின் செல்வாக்கைச் சிதைத்துவிட ஆளும் வர்க்கத்தால்   திட்டம் தீட்டப்பட்டது.  1957 தோ்தல் ஆரம்பமாயிற்று. தோ்தலில் தேவா் வழக்கம் போல் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறாா். நாடாளுமன்றத்திற்கு தேவா் வந்து விட்டால் நேதாஜி விஷயத்தைக் கிளப்புவாா். எனவே தேவா் நாடாளுமன்றத்தோ்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்று காங்கிரஸ் முடிவெடுக்கிறது. எனவே தேவா் போட்டியிடும் தொகுதியின் எல்லையை விாிவாக்குகிறது. எப்படி? 57களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது  ஐந்து சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. இப்பொழுதுதான் ஆறு தொகுதிகளாக மாறிவிட்டது. தேவரை வீழ்த்துவதற்காக அவா் போட்டியிட்ட தொகுதியை மட்டும் மாற்றி பத்து சட்டமன்றங்களை உள்ளடக்கிய பெருந்தொகுதியாக மாற்றிவிட்டனா் காங்கிரசாா். கா்ம வீராின் புண்ணிய காாியம் இது. அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியையும் திருவில்லிபுத்தூா் தொகுதியையும் இணைத்து ஒரே தொகுதியாக்கிவிட்டனா். இதிலும் ஒரு சூழ்ச்சியை காமராசா் செய்தாா். அதாவது நாடாா்கள் அதிகளவு வசிக்கக்கூடிய தொகுதிகளை இணைத்துத்தான் புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. ஆனால் தேவா் சாதிகளுக்கு அப்பாற்பட்ட தலைவா் என்பதால் அனைத்து சமுக மக்களும் வாக்களித்து பெருவெற்றி அடையச் செய்தனா். நேருவின் திட்டம் தோற்றது. இனி நாடாளுமன்றத்தில் தேவா் நேதாஜி பிரச்சனையைக் கிளப்புவாா். எனவே தேவாின் மேல் நேருவிற்கு அளவிலாத பகைஉணா்வும் வன்மமும் ஏற்பட்டு விட்டது.  நேரு அவா்கள் தேவாின் மேல் கோபம் கொள்ள காரணம் இருக்கிறது. நமது கா்மவீரா் காமராசருக்கு ஏன் தேவா் மேல் பகை ஏற்பட்டது?  

அரசியல் காரணம் தவிர  வேறென்ன இருக்க முடியும்? பசும்பொன் தேவா் அவா்களின் பாா்வா்ட் பிளாக் கட்சி அப்படி ஒன்றும் காங்கிரஸை வீழ்த்தக்கூடிய அளவிற்கு அரசியல் வலிமை பெற்ற இயக்கம் அல்ல. ஆனால் காங்கிரஸை விட ஆயிரம் மடங்கு  அறவலிமை கொண்டது தேவாின் சோசலிச அரசியல்.  1957 தோ்தலுக்கு முன்பு வரை பாா்வா்ட் பிளாக் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவுதான். ஆனால்  1957 தோ்தலில் காமராசா் விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு தோ்தலில் வாய்ப்பு வழங்காமல் பணக்காரா்களுக்கும் பஸ் முதலாளிகளுக்கும் பண்ணையாா்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கினாா். இது குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்குக் கடிதங்களில் எழுதியிருப்பார்.  காமராசாின் இந்த நடவடிக்கையால்  கட்சிகளிலிருந்து பலா் வெளியேறினா். அவா்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினாா் தேவா். அதுதான் சீா்திருத்தக் காங்கிரஸ். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 57 பொதுத்தோ்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திலே பிரதான எதிா்கட்சியாக மாறியது. இதற்கு முக்கியக் காரணம் தேவா்  அவா்களே!  நேற்று வரை மிகக் குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட தேவா் இனறு மாநிலத்தின் பிரதான எதிா்கட்சியை உருவாக்கி இயக்கவும் செய்கிறாரே! இவா்களும் தியாகிகள் தான். வெள்ளையனிடம் அடிஉதைகள் மற்றும் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவா்கள் என்பதால் நாளை மக்கள் மன்றத்திலே இன்னும் கூடுதல் வலிமை பெற்றுவிடாமல் தடுக்க வேண்டிய அரசியல் நிர்பந்தம் காமராசருக்கு ஏற்பட்டது.   இதற்கெல்லாம் மூலகாரணம் தேவா்தானே! எனவே இயல்பாகவே தேவா் மேல் காமராசருக்கு வன்மம் ஏற்படுகிறது.
     அதுமட்டுமல்ல!  உழவா்கள்தான் விவசாயப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்; வியாபாாிகள் செய்யக்கூடாது என்று தேவா் தொடா்ச்சியாக இயக்கங்களை நடத்தினாா். தேவாின் இந்தப் போராட்டத்தினால் வணிகத்தை ஏகபோகமாக வைத்துள்ள தன்னுடைய சொந்த சாதியினாின் வாழ்வுாிமை பாதிக்கப்படுமே என்ற சாதிய உணா்வினாலும் காமராசருக்கு தேவா் மேல் பகை உண்டாயிற்று. 

    நேருவிற்கு தன்னுடைய  பதவிக்கு நேதாஜி மூலமாக சிக்கல் வந்துவிடக்கூடாதுஎன்ற  எண்ணமும், தமிழ்நாட்டில் தனக்கெதிராக தேவாின் தலைமையில் மாற்று சக்தி வளா்ந்து தன்னுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது எனற காமராசாின் அதிகார அரசியலும், விவசாயிகள் அழிந்தாலும் பரவாயில்லை தன்னுடைய சாதிக்காரா்களின் தொழில் கெட்டுவிடக்கூடாது என்ற காமராசாின் சாதியப் பற்றும் இன்ன பிற இவைகள் எல்லாம் சோ்ந்துதான் தேவரை இமானுவேல் கொலைச்சதியில் சிக்க வைத்தது.

#வினா 4:  காமராசா்  கள்ளநோட்டுகார்களுக்கும் பிளாக் மாா்க்கெட் போ்வழிகளுக்கும் அனுசரணையாக இருந்ததை தேவா் மேடைதோறும் பேசியதும், இமானுவேல் சேகரன் கொலைவழக்கில் தேவரை சோ்ப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்ததா? காமராசா் அப்படி நடந்து கொண்டாா் என்பதற்கு சான்று உள்ளதா? 

#விடை: ஆம் நண்பா்களே! காமராசா் ஆட்சிக் காலத்தில்தான் கள்ளநோட்டு போ்வழிகளும் பிளாக் மாா்க்கெட் வியாபாாிகளும் தைாியமாக உலா வந்தனா். அந்தக்காலத்தில் கள்ள நோட்டு கிருஷ்ணன், அய்யன் நாடாா் வகையறாக்கள் உட்பட பலரும் ஈடுபட்ட செய்திகளைப் பெரும்பாலோா் அறிந்திருக்கலாம்.  விருதுநகா் வியாபாாி நாராயணசாமி நாடாா் நான்கு இலட்ச ரூபாய் கள்ள நோட்டுடன் பிடிபடுகிறாா். இவரையும் காமராசா் சிபாாிசு செய்து காப்பாற்றி விடுகிறாா்.  காமராசா் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கள்ள நோட்டுப்போ்வழிகளையும் பிளாக் மாா்க்கெட் வியாபாாிகளையும் காப்பாற்றியதை தேவா் மேடைகளில் ஆதாரத்தோடு தொடா்ந்து பேசியதால்  தேவரை அரசியலில் வீழ்த்துவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்குதான் இமானுவேல் சேகரன் கொலை வழக்கு. 

#வினா 5: இதைப்பற்றி சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் விவாதங்கள் நடைபெற்றனவா? 

#விடை : ஆம்! விாிவாக நடைபெற்றன.
இது குறித்து சட்டமன்றத்திலே நல்ல சிவன் MLA வினா எழுப்புகிறார்.இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 29-10-1957    அன்று சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்,

#நல்லசிவன்MLA:
“ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராசர் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!

குறிப்பாக….
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.

அதற்கு காமராசரின் சட்டமன்றத்தில் கூறிய பதில்…

#திரு_காமராஜ்(தமிழக முதல்வர்):
 நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

#திரு_நல்லசிவம்(எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் (தேவர்)  அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் " என்று சட்டமன்றத்திலே கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு காமராசர் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

 பசும்பொன் தேவர், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராசர் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் வியாபாரி நாராயணசாமி நாடார் கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராசர் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார். (அந்தக் காலத்திலேயே 4 இலட்சம் ரூபாய்)

அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராசருக்குப் பதிலாக அமைச்சர் #திரு_சி_சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.

“இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். 

காமராசர் மந்திரி சபையில் ஊழல் பெருத்து விட்டது என்ற குற்றச்சாட்டையும் தேவர் முன் வைத்தார். இதே குற்றச்சாட்டை கம்யூனிஸ்டுகளும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முன்வைத்தனர்.   காமராசரின்  மந்திரி சபையில் மந்திரிகள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் தேவர் குற்றம் சாட்டிப் பேசினார். காமராசர் மந்திரி சபையில் ,  மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அந்த அமைச்சர் பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.

#வினா 6: முதுகுளத்தூர் கலவரம் பற்றி  நூலை எழுதியதால் நூலாசிரியர் தினகரன் தேவர் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்று சிலர் கூறுகிறார்களே' இது  உண்மையா?

#விடை : பச்சைப் பொய். என்ன நடந்தது?  தினகரனுக்கு இரண்டு மனைவிகள். தம்முடைய குடும்ப சொத்தில் மூத்த மனைவிக்கும் அவரது மகனுக்கும் பங்கு  தர தினகரன்  மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்தச் சூழலில் மூத்த மனைவியும் அவரது மகனும் கொலை செய்யப்படுகின்றனர். இதற்குக் காரணம் தினகரன் தான் என்று எண்ணி  கோபமடைந்த மூத்த மனைவியின் இரத்த சொந்தங்கள் தினகரனை கொலை செய்து விடுகின்றனர். இது பற்றி காவல் துறை பலரை கைது செய்து விசாரித்தது.  நீதிமன்றத்திலும் இக்கொலை தொடர்பாக வழக்கு நடந்தது. அன்றைய காமராசரின் ஆட்சி இந்தக் கொலை வழக்கிலும் தேவரைச் சேர்க்க முயன்று  பிறகு பின் வாங்கியது. ஆனால் எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல்  தேவர் மீது இந்தக் குற்றச்சாட்டைப் போகிற போக்கில் கூறி விட்டுச் செல்கிறார்கள்.  இதுவரை யாரும் எந்த ஆதாரப்பூர்வமான தரவுகளை வைத்து இப்படிக் கூறுவதில்லை. அரசியல் வக்கிரத்தோடு அவதூறு செய்யும் நோக்கமன்றி வேறெதுவும் இல்லை.  இதைப் போல் எழுதுபவர்களிடமும் பேசுபவர்களிடம் ஆதாரம் கேட்டால் அவர்கள் வாய் திறப்பதில்லை.  

#வினா 7:முதுகுளத்தூர் பயங்கரம் என்ற நூலை சொக்கலிங்கம் ஏன் எழுதினார்? இதை எழுதுவதற்கான தேவை என்ன? 

#விடை :  திரு. சொக்கலிங்கம் அவர்கள்  தினமணி நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். காங்கிரஸ் அபிமானி. தினமணி நாளிதழின் அதிபர் திரு .இராம்நாத்  கோயங்கா காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர். 1952 முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டவர். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாணிக்கவேல் நாயகரின் காமன் வீல் பார்ட்டியைச் சார்ந்த  திருக்குறளார் முனுசாமி ஆவார். இதே கோயங்கா அவர்கள் 1956ல் ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை நடத்த பெரும் பொருட்செலவு செய்தவர். இதைப் பற்றி பழம்பெரும் தியாகி சர்வோதயா சங்கத் தலைவர் கோவை அய்யா முத்து அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார்.  இதை எதற்காகச் சுட்டுகிறேன் என்றால் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினராக இருந்த திரு.கோயங்காவின் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றிய சொக்கலிங்கம் அவர்கள்  காங்கிரசுக்கும் காமராசருக்கும் ஆதரவாக இந்த நூலை எழுதியதன் நோக்கத்தை எளிதல் புரிந்து கொள்ள முடியும்.  அரசியல் காரணமன்றி  வேறொன்றுமில்லை. ஆனால் திரு. சொக்கலிங்கம் அவர்கள் ஆட்சியாளர்களால் எப்படியெல்லாம்  நிர்பந்திக்கப்பட்டார்  என்று இந்த நூலைத் தொகுத்த திரு.மயிலைநாதன் அவர்கள் பிற்காலத்தில் மனம் வருந்தி எழுதியுள்ளார். காமராசரின் கட்டாயத்தால் தான் நாங்கள் இதைச் செய்தோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் போல் பதிவு செய்துள்ளார். பசும்பொன் தேவர் அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத காமராசர், தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பல வகைகளிலும் பயன்படுத்தினார். திரு. சொக்கலிங்கம் உண்மைக்கு மாறாக ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த எழுதிய இந்த நூலை அன்றைய காங்கிரசார்  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தும் வட இந்தியத் தலைவர்களுக்கு வழங்கினார்கள் என்றால் பசும்பொன் தேவர் அவர்கள் மீது காங்கிரசும் காமராசரும் எவ்வளவு பகையுணர்வோடு இருந்தார்கள் என்பது புரியும். இந்த நூலை ஆதார நூலாகக் கொண்டு தான் திரு.தினகரன் அவர்களும் முதுகுளத்துார்  கலவரம் என்ற நூலை எழுதினார். 

 பல்வேறு அரசியல் சமூகக் காரணங்களால் தேவர் அவர்கள் இமானுவேல் கொலை வழக்க சேர்க்கப்படுகிறார். 18 மாதங்கள் வழக்கு நடைபெறுகிறது. தேவருக்கு எதிராக வாதாட பிரபல வழக்குரைஞரும், நடிகர் கமலஹாசனின் தந்தையுமான  பரமக்குடி சீனிவாச ஐயங்காரை அரசு அணுகுகிறது. அவர் காங்கிரஸ்காரராக இருந்தும் தேவருக்கு எதிராக வழக்காட மறுத்து விடுகிறார். கட்சியில் இருந்து அவரை நீக்கம் செய்தனர். பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் முதலியார் அவர்களின்  ஜூனியரும்  பிற்காலத்தில் நீதியரசராக இருந்த   கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆஜராகி னார். வழக்கில் தேவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி விடுதலை செய்யப்படுகிறார்.

இம்மானுவேல் கொலை வழக்கு -       தீர்ப்பின் பகுதி :

.
41. நான் இப்போது எதிரி - 1 (முத்துராமலிங்கத்  தேவர்) பற்றிய வழக்கினை, அதன் தகுதிப்பாட்டின்  அடிப்படையில் தனியாக பரிசீலிக்க இருக்கிறேன். 

42. இதில் தீர்மானிக்கப்பட வேண்டிய வினா கீழ்வருமாறு:-

1. விசாரணையின் போது கூறப்பட்ட சாட்சியத்தின்  அடிப்படையில் ; அரசு மற்றும் காவல் துறை; முதலமைச்சர்.திரு.காமராஜ் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.பக்தவச்சலம் மற்றும் பிறர் ; எப்படியாவது எதிரி - 1 ஐ இந்த வழக்கில் சிக்க வைத்திட வேண்டுமென்று அரசியல் பகைமையின் காரணத்தினால் எண்ணம் கொண்டிருந்தார்களா எனக் கருதிட அடிப்படைக் காரணம் அல்லது அதற்குரிய அநேகமாக நிகழக்கூடிய நிலை இருந்ததா? இயற்கையாகவே,  இத்தகைய அனுமானத்தை நியாயப்படுத்தும் அடிப்படை ஆதாரங்கள்  இருப்பின்; அது எதிரி - 1 ன் வழக்கினைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அரசுத் தரப்பு வழக்கு முழுவதையுமே பாதித்து விடும். இந்த வழக்கில் சீரான கண்டுபிடிப்பு மற்றும் புலனாய்வு ஆகியவை, தவறாகப் பயன்படுத்தப்பட்டால் - உயர் பதவியில் இருப்பவர்கட்கு ஆதரவாக - அல்லது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எந்த ஒரு நீதிமன்றமும் புலனாய்வு, சாட்சிகளின் சாட்சியம் இவற்றினை நம்ப முடியாமல் போய் விடுவதுடன் நீதியும் நிலைநாட்டப்படாது போய்விடும்.

2. சமாதான மாநாட்டில் இம்மானுவேல் மீது சீற்றம் கொள்ளும் அளவில் நிகழ்வுகள் நடந்து, அதன் காரணமாக எ த ரி-1 அவர் மீது காழ்ப்புணர்ச்சியை கொண்டிருந்தாரா?  மற்றும்  இத்தகைய உணர்ச்சிகளைத் தன் மனதில் தேக்கி வைத்திருந்தாரா? 

3. ஆத்மநாதபிள்ளையின் வீட்டுத் திண்ணையில் இருந்து எதிரி - 1 அன்னாரின் ஆதரவாளர்களுக்கு (தேவர்கள் ) தூண்டி விடுவதாகக் கூறப்படும் சொற்களைக் கொண்ட பேச்சைப் பேசினாரா? 

4. அத்தகைய சொற்கள் பேசப்பட்டிருக்குமானால், அவை கொலை செய்வதற்குத்  தூண்டப்பட்டதாக, இத்தகைய குற்றமுறு செயலைச் செய்திட (பிரிவு 107 இ.த.ச.) -ன் அமைந்து விடுமா? அத்தகையச் சொற்கள் வேறு பொருளைக் கொண்ட சொற்களாகக்  கருதப்படுமா? 

 43. புலனாய்வுப் பதிவுருக்களைக் கூராய்வு செய்து, அவற்றில் உள்ள தவறுகள், திருத்தங்கள் - பிழைகள் இருந்திட்ட போதிலும் அவை காவல் துறை அலுவலர்களால்  புனைந்து கட்டப்பட்டவையாகவோ, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவோ காணப்படவில்லை.  அதாவது, அ.சா. - 30 மற்றும் 32 , 33 பின்னர் காணப்படும் நிலைகளில் இந் பதிவுருக்களில்  காணப்படும் உள் சாட்சியங்கள், அவை உண்மைத் தன்மை உடையவை என்று காட்டுவதோடு, அவை சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்டவை என்பதையும் காட்டுகின்றன. அநேகமாக நிகழக்கூடியவையும், இத்தகைய தற்காலிக ஆதாரமாகக் கொள்ளப்படும்  கருத்துக்கு எதிரானவை. எதிரி - 1 ஆல், இன்றைய அரசைக் குறித்து சாட்டுரைகள் கூறப்பட்டபடியால், இவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்து, நியாயமான மற்றும் நடுநிலையாக நான் இயன்ற அளவு ஆராய்ந்து உள்ளேன். 

எதிரி - 1 (முத்துராமலிங்கத் தேவர் ) அவரது பகுதியில் முக்கியமான சக்தி கொண்டவர் என்பதை நான் ஒப்புக் கொண்டிட  சம்மதிக்கிறேன். அவர், தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களில் சில பிரிவுகளின்  மீதும் செல்வாக்கு பெற்றவர் என்பதை மறுத்திட முடியாது. பல தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் அவர் வெற்றி அடைந்துள்ளது இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர்களும் அன்னாரின் எதிர்ப்பினை ஒரு தொந்தரவாகவே உணர்ந்து, அன்னாரை அரசியல் எதிரியாகவே நடத்தினர் என்பதையும் நான் ஒப்புக் கொள்வதற்கு இசைகிறேன். உண்மையாகவே அப்படித்தான். திரு. காமராஜ் மற்றும் திரு.பக்தவச்சலம் போன்ற அரசியல் முதிர்வும் அனுபவமும் உடைய தலைவர்கள், அரசியல் வாழ்க்கையிலும் அல்லது தேர்தல் பிரச்சாரங்களின்  போதும் எதிரி 1 ஐப் போன்றவர்களால் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்படும்  என்றும்,  மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கூட சொல் அம்புகள் வீசப்படும் என்பனவற்றை முற்றிலும் உணரவில்லை என்பதை, நான் கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினமாக ஒன்றாகவே எனக்குத் தோன்நுகிறது. அரசியல் வாழ்க்கையில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்; அதிகமான மன உணர்வு கொண்டவர்களுக்கு அரசியல் போராட்டம் என்பது அவர்கட்குரிய இடமல்ல. இத்தகைய காரணங்களுக்காக அரசியல் எதிரி மீது மனத் தாங்கல்களை வைத்துக் கொண்டு இருப்பது அரசியல் ரீதியாகப் பக்குவமற்றதாகும். இதன் காரணமாக அரசு அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவது என்பது குற்றமுறு செயலுமாகும்.   எதிரி - 1 சட்டமன்றக் கூட்டங்களில் பேசிய சிலப் பேச்சுக்கள், மோதல் மற்றும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார்  என்பதை வைத்துக் கொண்டு அரசு அதிகாரத்தைப்  பயன்படுத்துவது குற்றச் செயல். திரு. காமராஜ் அல்லது திரு.பக்தவச்சலம் ஆகியோர் அந்தத் தொகுதித் தேர்தல் முடிவு காங்கிரஸ் கண்ணோட்டத்தில் ஏமாற்றம் தருவதாக அமைந்திருந்தாலும்  அரசின் தலையெழுத்தோ அல்லது காங்கிரஸ் போன்ற பெரிய அரசியல் கட்சிக்கோ ஒரே தொகுதியில் அடையும் வெற்றியை நம்பி இருக்கின்ற நிலை இல்லை என்பதை உணராதிருப்பது என்பது என்னால் சிந்தித்துக்கூடப்  பார்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. 

காவல்துறையைப் பொறுத்தமட்டில் வழக்கு வலுவாக உள்ளதென்று அவர்கள் சொன்னாலும்; எதிரி - 1 காவல் துறையினர் மீது அவதூறாக; அரிசனங்கள் மற்றும் நாடார்களுடன் இரகசியமாகச்  சதி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டு அரிசனங்களுக்குத் துப்பாக்கிகளை வழங்கிடும் அளவுக்குச் சென்றுள்ளனர் என்று எதிர்தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது நம்பும்படியாக இல்லை. கீழத்தூவல் துப்பாக்கிச் சூடு இம்மானுவேல் இறப்பிற்குப் பிறகு நடைபெற்றுள்ளது. அதன் பிறகு நடை இனக்கலவரச் சூழ்நிலையால்  ஏற்பட்டதாகும். உண்மையாகவே, இந்த நிகழ்ச்சி திரு.வெங்கடடேசுவரன் ஐ.சி.எஸ் என்பவரால் பரமக்குடியில்  விசாரணை நடத்தப்பட்டு அது பதிவுருவில் இடம் பெற்றுள்ளது.  எனவே இந்த வழக்கில் எதிரி - 1 துப்பாக்கி சூடு நடைபெற்றதற்கு நீதி விசாரணை வேண்டுமென கிளர்ந்து எழுந்ததால் இவ்வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற வாதத்தினை பின்பற்றுவது  கடினமாகவே உள்ளது. 

திரு. ஹோல்ம்ஸ் (அ.சா-22) ன் சாட்சியம், அலுவலர் என்ற முறையில் எதிரி - 1 விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்ள இணக்கமாக இருப்பது என் மனதில் பட்டது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில், காவல் துறையின் ஒரு பகுதியினரோ அல்லது அதிகாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காவல் துறை அலுவலரோ ; எதிரி - 1 ன் மீது பழி தீர்த்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார்கள் எனக் காட்டுவதை நியாயப்படுத்தும்  வகையில் எவ்வித ஆதாரமும் இல்லை. 

44. எனவே இந்த அம்சத்தை பொறுத்து எனது முடிவினை பதிவு செய்திட விரும்புவது யாதெனில் காவல் துறைப் புலனாய்வு அமைப்பு இவ்வழக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கும், அது அரசின் தலைவர்களால்  செய்யப்பட்டுள்ளது என்பதற்கும் அல்லது அவர்களை திருப்திப்படுத்துவதற்காகச்  செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டுவதற்கும்  எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதாகும். 

45. மாநாட்டைப் பொறுத்த வரையில்  அதன் குறிக்கோள்கள்  வழக்கினுக்கு  உரித்தானவை அல்ல. எ த்ரி-1 ன் கற்றறிந்த வழக்குரைஞரின் வாதம் யாதெனில், அ.சா-21 மற்றும் அசா - 22 ஆகியோர் கருத்துப்படி, இம்மானுவேல், ஏனையோர்களை விட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. இது தவறாகவும் இருக்கக் கூடும். 

பொருண்மைகளை கருத்தில் கொண்டு நோக்கும்போது, சாதரணமாக எவர் ஒருவரின் பொருமையையும் சகிப்புத்தன்மையையும் சோதிக்கும் அளவில் எதுவும் அங்கு நடந்ததாகக் கூற முடியாது. ஆனால் இங்கு நான் குறிப்பிட வேண்டி இருப்பது மனப்பாங்கு. முக்கியமான அம்சம் இதில் எனக்குத் தோன்றுவது யாதெனில் எதிரி - 1 நிலபிரபுத்துவ அமைப்பினரின் தலைவர் போன்ற நிலையில் இருந்தவராகவும், மரியாதைக்குரியவராகவும் காணப்பட்டார். ஒரு புதிய தலைமுறையின்  சார்பாக பேசும் இம்மானுவேல் சாதாரண மரியாதைக்கு அதிகமாக கொடுத்திடாது கண்டு அவர் கோபம் கொள்ளுமளவிற்கு ஆளானவராக காணப்பட்டார் என மதிப்பிடல் கடினமான ஒன்றாக காணப்பட்டது. அதன் பின்னர் எதிரி - 1 கர்ணத்தின் வீட்டில் பேசிய பேச்சின் உண்மைத்தன்மையினைப் பொறுத்து மட்டும் இந்த வினா எழும். இங்கு நான் மீண்டும் கூறுவது என்னவெனில் நேரடிச் சாட்சியம்  உண்மையாக இருக்கும் நிலையில் எதிரி - 2 கூறியதாகச் சொல்லப்படும் சொற்கள் , இம்மானுவேல் மாநாட்டில் எதிரி - 1க்கு எதிராக நடந்து கொண்ட முறை, கொலைக்கு காரணமாக இருந்தது என்பதும் எதிரி - 1 இதைத் தூண்டினார் எனும் குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியமாக அமைந்திடவில்லை. 

46. வார்த்தைகளைப்  பொறுத்தமட்டில்  கவனமான பரிசீலனைக்குப்பின், அ.சா - 18 மற்றும் அ.சா - 20 ஆகியோர்களுடைய மற்றும் குறிப்பாக பெருமாள் பீட்டரின் (அ.சா-20) சாட்சியத்தை ஏற்றுக் கொள்கிறேன். இந்த முதியவர் என் மனதில் பதியக் கூடியவராக இருக்கிறார். அவர் எதிரி - 1 ன் மீது பெரிதும் மரியாதை கொண்டவராகக் காணப்படுகிறார்.  அவர் அளித்த சாட்சியம் இயல்பாகவும்,  இயற்கையாகவும், பிறரால் சொல்லிக் கொடுத்திடாததாகவும், பொய்மை இல்லாததாகவும்  உள்ளது. மிகவும் திறமை வாய்ந்த குறுக்கு விசாரணையிலும் கூட அவரை அசைக்க முடியவில்லை. பெருமாள் நாயுடு (அ.சா-19) விருப்பு வெறுப்பற்ற சாட்சி. அவருக்கு பொய் சொல்ல வேண்டியத் தேவை இல்லை. ஏனெனில் இரு குழுக்களிடையே உள்ள இனப்பதற்றம் குறித்து அவருக்குத் தொடர்பு இல்லை. இதற்கு மாறாக திரு.இராமசாமி  செட்டியார்  (எ.சா-19) திரு.சுப்பிரமணிய ராஜா (எ.சா -2) இவர்களது உண்மைத்தன்மை வெகுதூரம் கொண்டு செல்லவில்லை.  சாதகமில்லாத ஓர் உண்மையைச் சொல்ல நேரிடும் போது இவர்கள் தமது ஞாபகச் சக்தியின் மீது சார்ந்து நிற்கின்றனர். மற்றும் எதிரி - 1 ன் மீது தமது விருப்பத்தை ஒப்புக் கொள்கின்றனர். இந்த இரண்டு சாட்சியங்களும்  கர்ணத்தின் வீட்டிற்கு எதிரி - 1 செல்லும் முன்பு சென்றிருக்கக் கூடும், மற்றும் 30 அல்லது 40 ஆட்கள் முக்கியமாகத் தேவர்களை கொண்ட கும்பல் தொடர்ந்து வருதலைக் கவனித்திருக்க முடியாது இருக்கலாம்.  தாலுகா அலுவலகத்தில்  பெருங்கூட்டம். இத்தகைய கூட்டம் எதிரி - 1 ஐ தொடர்ந்து செல்வது என்பது இயல்பான ஒன்று தான். திரு.ராஜா (எ.சா - 2) சிறிது தொலைவில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து சென்றதென்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். எனவே, எதிரி - 1 அவரால் பேசப்பட்டதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை, அவரது மன உணர்வுகள் 
புண்பட்டுவிட்டதால், மாநாட்டில் இறந்துபட்டவர் நடந்து கொண்ட விதத்தினால், பேசியுள்ளாரென்று நான் முடிவு செய்ய வேண்டி உள்ளது. 

47. ஆனால் இந்தச் சொற்கள், கொலைக் குற்றச் செயலைத் தூண்டி விட்ட குற்றமாக சட்டத்தில் எப்படி கருத முடியும் என்பது பற்றி அனுமானம் செய்திட, கடினமாக, ஏறத்தாழ இயலாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தச் சொல் உண்மையிலேயே ஒரு தெளிவான குறிப்பாக அவர் தம்மை பின்பற்றுபவர்கள் எடுத்துக் கொண்டு, இம்மானுவேலை தீர்த்துக் கட்ட வேண்டுமெனக் கருதியிருந்தால், அந்தச் சந்தர்பத்தில் அவற்றை அந்தக் கூட்டனத்தினருக்குப் பேசி இருக்க முடியாது. இராமனாதன் (அ.சா-18), பெருமாள் நாயுடு (அ.சா-19) மற்றும் பெருமாள் பீட்டர் (அ.சா-20) ஆகிய தேவர் அல்லாதவர்களை எதிரி - 1 தன் முன்னர்  தெளிவாகப் பார்க்க இயலும். அந்தச் சொந்கள், கோபத்தின் காரணமாக அந்த வேளையில் பேசப்பட்டிருக்கும். அந்தச் சொற்கள் வெளிப்படையாகவோ,  உள்ளிடையாகவோ 
இம்மானுவேலை தீர்த்துக் கட்டப்பட வேண்டும் எனும் பொருளில் பேசப்பட்டவை அல்ல. ஆனால் அவர் மேற்கோளிட்டுக் காட்டியது அவமதிப்பிற்குரியவை. இதற்கு மாறாக, அவற்றுக்கு மாசற்ற து என விளக்கம் கூறவும் இயலும். எதிரி - 1 அவர்தம் பின்பற்றுனர்கள் 
இம்மானுவேல் தானும் அரிசனங்களின் பிரதி ரிதி என்று உரிமை கொண்டாட முடியுமென தைரியமாகக் கூறியதால் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். இந்த வழக்கில் அநேகமாக நிகழ்ந்திருக்க கூடியது என்னவெனில், எதிரி - 1 ஐ பின்பற்றுபவர்கள், இத்தகைய வெறுப்பினையும், வெட்கத்தையும், அவர் (எதிரி - 1) பேச்சு ஏற்படுத்தி இம்மானுவேலின் இறப்பிற்கு காரணமாக அமைந்து விட்டது. ஆனால் எதிரி - 1 இத்தகைய செயல் நடைபெற வேண்டுமென கருதிடவில்லை மற்றும் இத்தகைய குற்றமுறு செயலைச் செய்திட தூண்டிடவும் இல்லை. 

இந்த வார்த்தைகள் ஆங்கில வரலாற்றில் ஓர் அரசர் தனது பேராயரின் தனித்தன்மை வாய்ந்த சுபாவத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், "இந்த கொந்தளிப்பான பாதிரியாரை என்னிடமிருந்து நீக்குவதற்கு யாருமில்லையா" என்பதன் அர்த்தத்தில் பார்க்கின்ற பொழுது அந்த வார்த்தைகளின் கருத்துக்கள் மிகவும் பலமற்றவைகளாகும். ஆனால் அந்தக் கவனக்குறைவான பேச்சு ஒரு துறவியான மதகுரு கொலை செய்யப்பட காரணமானது. பின்னர் அந்த அரசர் அதற்குரிய பிராயச்சித்தங்களை எல்லாம் செய்தார். இருந்த போதிலும் அவர் ஆங்கிலச் சட்டத்தின்படி உண்மைக்கு முன அவர் ஒரு குற்றத் துணைவர்  என்பதை எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் வற்புறுத்தவில்லை. இந்தியாவில் இந்த முக்கிய விஷயம் வெளிப்படையான சட்ட ஆதாரமாகத் தோன்றுகிறது. இதன் தொடர்பாக கற்றறிந்த அரசு வழக்குரைஞரோ அல்லது 1வது எதிரியின் கற்றறிந்த வழக்குரைஞரோ எந்த தீர்ப்பையும் என் முன் கொணரவில்லை. ஆனால் கிளான்வில்லே வில்லியம்ஸின்  "கிளாசிக்கல்  டிரிட்டீஸ் ஆன் கிரிமினல் லா (Classical Treaties on Criminal Law) 1953 பதிப்பு ). அதில் பிரிவு 57 - ன் கீழ், இந்த முக்கிய விஷயம் குறித்த விவாதத்தில் பெரும் புகழ் வாய்ந்த சட்ட மேதை ஸ்டீபன் அவர்களின் மேற்கோள் ஒன்று இருப்பதை நான் காண்கிறேன்."

ஒருவேளை, உதாரணமாக "ஏ" என்பவன் " பி" என்பவனிடம் சொன்ன உண்மைகள் "பி" என்பவன் "சி" என்பவனைக்  கொலை செய்வதற்கான முன்விரோதமாகச் செயல்பட்டது. இதனால் "ஏ" என்பவன் "சி" என்பவனைக் கொன்றான் என்பது மொழியின் அவதூறு என்று சொல்லலாம். ஏனெனில் "சி"யின் மரணத்திற்கு சிறு காரணமுடையவனாக இருந்திருக்கிறான்  என்பதில்  சந்தேகம்  இல்லை. ஒத்தல்லோ வழக்கில் டெஸ்டி மோனோ கொலை வழக்கின்  முன்புள்ள விவரங்களின் படி,  குற்றத்துக்கு துணை போனவர் என்ற வகையில், 'விஷத்தை வைத்து இதைச் செய்யாதே, அவளது படுக்கையில் வைத்து கழுத்தை நெறி" என்ற சொல்லிற்காக 
இயாகோவை தண்டித்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். 

இந்த வழக்கில் 1 - வது எதிரியின் வார்த்தைகள் அவரது பின்பற்றுனர்களை அந்த வகையான வெறுப்பினாலும், அவமானம் போன்ற உணர்ச்சியாலும் தூண்டப்பட்டு இருக்கலாம். அதுவே இம்மானுவேல் இறந்ததற்கு வழியாக இருந்திருக்கலாம் என்பது சரியாக இருக்கக் கூடியதாக இருந்தாலும், 1-வது எதிரியானவர் அத்தகைய செயலை தாமே எண்ணி அந்த வார்த்தையைக்  கூற வில்லை. மேலும் அவர் அது மாதிரியான குற்றத்திற்கு தூண்டுதலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவும்  இல்லை. 

48. பல பத்தாண்டு காலமாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பொதுக்கருத்தும் ,  சட்டம் அனைவரின் பாதுகாப்பிற்காக அமைந்திருக்கிறது எனும் குற்றவியல் சட்ட இயல், நமது அடிப்படை உரிமைகளாக அரசமைப்பில் பாதுகாக்கப்படுகிறது.  இந்தப் பொதுக்கருத்தில் அடங்கி இருப்பதாவது,  எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், எவ்வளவு அதிகாரம் உடையவராக இருந்தாலும் சரி, மக்களின் தலைவனாக இருந்தாலும், குற்றவியல் சட்டத்தை மீறினால் நாட்டின் நீதிமன்றத்தால் தண்டிக்கப் படுவதற்கு உரியவராகிறார். சட்டம் எந்த ஒரு மனிதனையும் மதிப்பது அல்ல. இதுவே சட்டத்தின் மாட்சிமையாகும். சட்டச் சாட்சியம் சட்டத்திற்கு தெரியும்  வகையில் முன்னிலைப்பட்டு, குறுக்கு விசாரணையின் மூலம் சோதிக்கப்படும் என்பதே இப்பொதுக்கருத்தின் நோக்கம் ஆகும். சந்தேகம், எந்த அடிப்படையும்  இல்லாத கருத்து, யூகம் இவை சட்டரீதியான நிரூபணம் ஆகாது. 

49. எனவே, எதிரி - 1 ன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வர எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.  எதிரி - 1 குற்ற விடுதலை பெற உரிமையுடையவர் ஆகிறார். 

1957 முதுகுளத்தூர் கலவரம் - யார் காரணம்  - க.பூபதிராஜா
நூலில் இருந்து.

தோழமையுடன்

மருதுபாண்டியன்
சோசலிச மையம்
7550256060

#sharedpost

No comments:

Post a Comment