புலவா் புலமைப்பித்தன் அவா்கள் பசும்பொன் தேவா் திருமகனாரைப் பற்றி எழுதிய கவிதை!
"குடிக்கின்ற குண்டுகட்கு மார்பு காட்டும்
வீரத்தின் பெயர்முத்து ராம லிங்கம்!
துடிக்கின்ற தமிழவீரம் அவரின் பேச்சில்
துப்பாக்கிக் குண்டுகளைச் சாம்பல் ஆக்கும்!
நடிக்கின்ற தலைவருக்குள் சொன்ன பாதை
நடக்கின்ற கால்களுக்குச் சொந்தக் காரன்!
முடிக்கின்ற காலத்தின் முடிவில் கூட
முடியாத வரலாற்றுப் புகழின் கோமான்!
சேதுபதி அரசாண்ட வீர மண்ணில்
செங்குருதி தனைப் பாய்ச்சி வெள்ளை யோரை ஊதிவிட எழுந்துவந்த சூறை! தேவர்
உறுமலுக்குப் புலி கூட நடுங்கும்! இந்தத்
தேதி வரை அவனைப்போல் நிமிர்ந்து நின்ற
திறல்மறவன் பிறக்கவில்லை! முந்தை நாளில் நாதியற்றுக் கிடந்தவனை எல்லாம் கூட நாடறியப் பெருந்தலைவர் ஆக்கி வைத்தோன்!
எக்குலத்தோர் என்றாலும் சமமே என்னும்
இனியதொரு பண்பாளன்! என்ற போதும்
முக்குலத்தோர் படைவீரம் காட்ட வந்த
முத்திரையாய் நின்றிருந்தான்! எதிர்த்து வெல்ல தக்கவரோ இருந்ததில்லை! தேர்தல் வெற்றிச் சாசனங்கள் சான்றுரைக்கும் முதுக ளத்தூர் செக்கர்நிற வானம்போல் பொழிந்த ரத்தம் சேற்றினிடை சிங்கம் போல் சிறைக்குள் சென்றோன்!
பசும்பொன்னென் றூருக்குப் பெயரா? மாற்றுப் பத்தரையாய் ஒளிர்ந்து நின்று காலமெல்லாம் திசைமாறா தோடந்த கொள்கை வெற்றித் தீரனவன் மனம்தானா? மண்ணுக்குள்ளே பசும்பொன்னைத் தோண்டுகிறோம்! ஆனால் இந்தப் பசும்பொன்னை நிலத்துக்குள் மூடி வைத்து வசமிழந்து போயிற்றே நாடு! நாளை
வரலாற்றில் பசும்பொன்னின் எழுத்தாய் நிற்பான்!
மனக்கண்ணில் அவனுருவம்! அதிலே பாண்டி மன்னனவன் தலையாலங் கானம் வென்று தனக்கென்று தனிச் சரிதம் படைத்த பெருமான் தனதுருவம் தெரிகிறது! பறந்த சிம்புள் இனப்பறவை இன்றில்லை! என்ற போதும் இவன்வளர்த்த பெருவீரம் மானம் எல்லாம் இனியுள்ள காலங்கள் கோடி யாக
எந்நாளும் தொடர்ந்து வரும் சாவ தில்லை!"
"தமிழ் வளா்த்த பரம்பரை நீ! விடுதலைப் போா்த் தளபதி நீ! வெள்ளையரை எதிா்த்து நின்ற சமயத்தில் அழியாத புறநா னூற்றுச்
சாசனத்தை வடித்தவன் நீ! வங்கா ளத்தில்
இமயம்போல் ஓங்கிநின்ற சுபாஷ்சிங் கத்தின்
இணைகரங்கள் உன்கரங்கள்! புரட்சி வாசம்
கமழ்பசும்பொன் விட்டெழுந்து வந்த தென்றற்
காற்றே உன் மலரடிக்கு வணக்கம் சொல்வேன்!
சேதுபதி அரசாண்ட வீர மண்ணின்
சிரஞ்சீவிச் சாித்திரம் நீ! விடியும் காலைப்
பாதிமலா் போல்குற்றம் சாட்டப்பட்ட
பரம்பரைக்குப் புதுவாழ்வு மலரச் செய்ய
நீதிவழி சென்றதனால் திரும்பி மீளா
நெடியவழி சென்றவன்நீ! அன்றோா் நாளில்
வீதிவழி போனதனை எல்லாம், நல்ல
விருதுவழி தேடிவரச் செய்த வன் நீ!
எச்சவினை இல்லாமல் உனது வாழ்வில்
எடுத்தவினை அத்தனையும் பிறா்பா ராட்டி
மெச்சுவினை முற்றுவினை யாகச் செய்த
மேதைநீ! தாழ்ந்திருந்த ஏழை மக்கள்
அச்சவினை தீா்த்தவன் நீ! வேற்றுமைகள்
அல்வழியில் சமுதாயம் நடக்கத் தீய
நச்சுவினை மாற்றிவைத்த மறவா! உன் றன்
நல்ல வினை ஒருநாளும் மறைவ தில்லை!