விவசாயி to சிறைவாசி -- 8
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை..!
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.!!
வீடு தான் ஒரு மனிதனின் முதல் பள்ளி., பள்ளி அவனின் இரண்டாம் வீடு என்று கூறுவார்கள். அதற்கு காரணம் ஒரு தாயும் தந்தையும் தம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியாத ஒழுக்கத்தை., நேர்மையை., சகமனிதனின் மேல் காட்டும் கரிசனத்தை., உலகின் எந்த பல்கலைக்கழகமும் கற்றுத்தர முடியாது.
தலைவர் வைகோ அவர்களை நான் நேசிக்க., மதிக்க பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது தன்னை ஈன்ற தாயையும் தந்தையையும் வாழும் காலத்திலேயே தெய்வமாக போற்றியவர் என்பதும் ஒன்று.
என்னுடைய ஐந்து பிள்ளைகளுக்கும் தலைவர் வைகோ அவர்கள்தான் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். தலைவர் கலந்துகொள்ளும் அனைத்து திருமணங்களிலுமே தாலி கட்டி முடித்ததும் மணமகன் பெற்றோறையும் மற்றும் மணமகள் பெற்றோறையும் மணமக்களுக்கு ஆசி வழங்க சொல்லிவிட்டுத் தான் அவர் ஆசீர்வதிப்பார். நாம் கண்ணால் காணக்கூடிய தெய்வங்கள் பெற்றோர் தான், அவர்களுக்கு பிறகுதான் மற்ற எல்லோருமே என்று கூறுவார் தலைவர். அன்னை மாரியம்மாள் அவர்கள் உயிரோடு இருந்தவரை கலிங்கப்பட்டி இல்லம் சென்று அங்கிருந்து எங்கு கிளம்பினாலும் தம் அன்னையின் கால்களில் விழுந்து வணங்காமல் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் தலைவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்ற வரிக்கு முன்னுதாரணமாக வாழ்பவர் தலைவர் வைகோ.
நான் பெரும்பாலும் திரைப்படங்கள் பார்ப்பதில்லை அதற்கான சூழலும் அமைவதில்லை. எப்போதாவது தொலைக்காட்சியில் ஏதாவது நல்ல திரைப்படங்கள் போடப்பட்டால் பார்ப்பது உண்டு..
அப்படி நான் பார்த்த படங்களில் தேவர் மகன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒரு மாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது பேசிக்கொள்ளும் காட்சி ஒன்று உண்டு. அதில் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார் " நீ ஊர் எல்லாம் சுத்தி வரும்போது ஐயா போய்ட்டாருன்னா என்ன பண்ணுவீங்க..? " என்று கேட்பார்..
உங்கள விட்டுட்டு போகல ஐயா பிசினஸ் எல்லாம் சரி ஆனதும் நான் உங்கள கூட்டிட்டு போய்டுவேன் என்று கமல் சொல்லும்போது. "இந்த கட்டை இங்கேயே எரிந்து வெந்து சாம்பலாகி இந்த மண்ணுக்கே உரமாகுமே தவிர வேறு எங்கும் வராது என்று சிவாஜி அவர்கள் கூறுவார்கள்..!!
இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் நிறைய பேருக்கு தங்களுடைய தந்தை ஞாபகத்துக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்றுதான்..
மிகவும் துணிச்சல்காரர் என் தந்தை. யாருக்கும் எதற்கும் அஞ்சி நாங்கள் பார்த்தது இல்லை. எதிரில் இருப்பது யாராக இருந்தாலும் சரி மனதில் என்ன படுகிறதோ அதைதான் சொல்வார். தலையே போய்விடும் என்றாலும் பிறழ் பேச்சு பேசுவதோ., பணிந்து போவதோ அவரிடம் நடக்கவே நடக்காது.
நாங்கள் அனைவரும் மதுரையில் வந்து குடியேறிய பிறகு எங்கள் தந்தையாரையும் மதுரைக்கு அழைத்தும் அவர் அவ்வப்போது வந்து எங்களை பார்த்து விட்டு செல்வதோடு சரி அரியமங்கலத்தை விட்டு வரவே இல்லை..
அப்படி ஒரு நாள் மதுரை வந்திருந்த போதுஅவருக்கு லேசாக இருமல் இருந்தது.. இப்போதும் மதுரையின் பிரபலமான காது மூக்கு தொண்டை மருத்துவரான திரு கண்ணப்பன் அவர்களிடம் என்னுடைய தந்தையை அழைத்துச் சென்றபோது என்னங்க ஐயா என்ன செய்து என்று மருத்துவர் கேட்டபோது அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஐயா லேசா ரெண்டு இருமல் தான் அதுக்கு போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்துட்டான் என்று கூறிய என் தந்தையிடம் வைத்தியம் பாத்து சரி பண்ண தான் நாங்க இருக்கோம் என்று மருத்துவர் கூறிய போது, ஐயா..! பூமிநாதன் கூப்பிட்டான் என்பதற்காக தான் வந்தேன் நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரை வரப்போற சாவ வராத என்று சொல்ல போகுதா...,? அவன் அவன் வந்த வேலை முடிஞ்சா விடு வண்டிய என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதாங்கய்யா..!!
என்று என் தந்தை கூறியதை இப்போது என்னை பார்த்தாலும் மருத்துவர் கண்ணப்பன் அவர்கள் நினைவுப்படுத்திக் கொண்டிருப்பார்..
ஒரு சமயம் நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது நேரத்தில் என் தந்தை உடல்நிலை சற்று சரியில்லாமல் இருக்கிறார் என்று அறிந்தவுடன், என் அண்ணன் பாண்டியை அழைத்து ஒரு காரை எடுத்துக் கொண்டு சென்று அப்பாவை மதுரைக்கு அழைத்து வந்துவிடு என்று கூறினேன், அவர் அரியமங்கலம் சென்றார். என் அண்ணன் பாண்டியும் சித்தப்பா திரு.கிருஷ்ணன் அவர்களும் நீண்ட நேரம் வற்புறுத்திய பிறகு மதுரைக்கு வர சம்மதித்து ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து அணியப் போனபோது அப்படியே சரிந்து சித்தப்பு கிருஷ்ணன் அவர்கள் மடியில் சரிந்த என் தந்தையின் உயிர் பிரிந்தது..!!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலின் கடைசி அத்தியாயத்தில் இறுதிவரை இந்த மண்ணை விட்டு போக மாட்டேன் என்று விடாப்பிடியான வைராக்கியத்தோடு இருந்த பேயத்தேவரை, வைகை அணையில் நீர் ஏற ஏற ஊருக்குள் புகுந்த வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து இறுதியில் வீட்டின் மண் சுவர் இடிந்து அவர் மீது விழுந்து,இறுதிவரை பிறந்த மண்ணை விட்டு அகல மாட்டேன் என்று இருந்த அந்த மாமனிதனை இறுதியில் அந்த மண் விடவில்லை " என்று முடித்திருப்பார்..
அதேபோலத்தான் தான் பிறந்த அரியமங்கலம் எனும் சிற்றுரை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் காலம் வரை அங்கு தான் என்ற வைராக்கியத்தோடு இருந்த என் தந்தையை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் இந்த மண் அவரை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டது..!!
தந்தை முனியாண்டித்தேவர் காலமான பிறகும் ஊரிலேயே வசித்து வந்த எங்கள் தாயார் மூக்கைம்மாள் அவர்களை மதுரைக்கு வந்து இருக்கும்படி அழைத்த போது எங்கள் ஊரில் இருந்த தேவேந்திர குல மக்கள் ஆத்தா இங்கேயே இருக்க வேண்டும் என்று விட மாட்டேன் என்றார்கள்.. எங்கள் ஊரில் சரிபாதி இருந்த தேவேந்திர இன மக்கள் இன்றுவரை எங்கள் வீட்டோடு மிகுந்த பாசத்தோடும் அன்போடும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு எங்கள் அன்னையும் தந்தையும் அவர்களோடு பழகிய விதம் தான் காரணம்..!!
ஒரே ஒரு நிபாந்தனையுடன் மதுரையில் வசிக்க சம்மதித்தார் என் தாயார்.. பூமிநாதா உன் வீட்டாருகில் வசிக்கிறேன், ஆனால் தனியாகத்தான் இருப்பேன். இறுதிவரை என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு நானே சமைத்து தான் உண்பேன் என்பது தான் அந்த நிபந்தனை..!
நான்கு மகன்களை பெற்றிருந்தாலும் நான் எல்லோருக்கும் இளைய மகன் என்பதாலோ என்னவோ தெரியவில்லை என் அன்னைக்கு என் மீது அப்படி ஒரு பாசம். தன்னுடைய கடைசி காலம் வரை என்னை அய்யா., அல்லது சாமி என்று தான் அழைப்பார். எனக்கு மகனாக பிறந்ததாலோ அல்லது பேரன் என்ற பிரியத்தாலோ தெரியாது என் மகன் மணிகண்டனை எப்போது பார்த்தாலும் சரி எந்த இடத்தில் பார்த்தாலும் சரி தன் காலணிகளை கழட்டிவிட்டு கைகள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி கண்களை மூடி என் மகனும் பேரனும் மலை மேல் வைத்த விளக்கா இருக்கணும் சாமி என்று வணங்குவார். இதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு கிளம்பும் முன்பு தாய் தந்தையரின் படங்களை வாங்கும் போதெல்லாம் என் தாய் எங்களை வாழ்த்திய வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றது.
அப்படிபட்ட அன்னை தன் தள்ளாத வயதில் பெற்ற மகனை சிறைக்கு வந்து பார்க்க நேர்ந்தால் என்னாவது...?
அந்த நாளும் வந்தது.
வழக்கம் போல பார்வையாளர்களை பார்க்க சென்ற எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்வு. காரணம் கம்பிகளுக்கு அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த என் தாயை பார்த்ததும்.
ஆத்தா நீ ஏன் இங்க வந்த..? அதுவும் இவ்வளவு தூரம்.. என்று நான் கேட்டபோது " நீயும் இப்போ வெளிய வந்துருவ அப்போ வந்துருவ னு பாத்தேன் சாமி வர்றாப்புல தெரியல அதான் நான் வந்துட்டேன். எம்புட்டு நாள் தான் என் புள்ளய பாக்காம இருக்குறது அதான் ராமரை வம்படியா கூட்டி போக சொல்லி வந்துட்டேன்" என்று சொல்லி முடித்தார்.
சரி ஆத்தா நீ உடம்ப பாத்துக்கோ..! நா சீக்கிரமா வந்துடுவேன்., நீ கவலை படாத என்று நான் கூறிய போது நான் ஏன் கவலை படப்போறேன்..? என் மகன் என்ன தப்பு பண்ணிட்டா ஜெயிலுக்கு போய் இருக்கான் நா கவலை படுறதுக்கு..! நீ ஒன்னும் கவலை படாத சாமி மண்ணுல கிடந்தாலும் தங்கம் தங்கம் தான்., என் மகனும் அப்படித்தான். நாம சாமியா கும்பிடுற முத்துராமலிங்க தேவரே செய்யாத குத்ததுக்கு ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவருதான் என்று எனக்கு தைரியம் சொல்லி விடைபெற்றார் என் அன்னை.
நாங்கள் சிறையில் இருந்து வந்த பிறகு 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் வைகோ அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தார். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவராக நான் தலைவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தேன், என் அன்னை தலைவரை வணங்கிய போது என் மன்னிச்சுக்கோங்கம்மா என்னால உங்க மகன் சிறையில இருக்க வேண்டி வந்துவிட்டது என்று கூறிய போது, சிறையில் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை தலைவரிடமும் கூறி., இவ்வளவு பெரிய மனுஷன் நீங்க என் மகனை எம்புட்டு நம்புறீங்க உங்களுக்காக ஜெயிலுக்கு போறது என்னய்யா அதுக்கும் மேல சிராமம்னாலும் என் மகன் ஏத்துக்குவான். உங்களோட இருக்கப்போய் தான் என் மகனுக்கு இந்த பேரு பெருமை எல்லாம் வந்திருக்குயா என்று கூறினார். இதை பல மேடைகளில் தலைவரே பதிவு செய்திருக்கிறார்.
வரலாறு முழுவதும் தேடிப்பார்த்தால் ஒரே ஒரு உண்மை புலப்படும். அது என்னவென்றால் எளிமையான மனிதர்கள் தான் வலிமையான மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். மிகப்பெரும் நீதிகளையும் போதனைகளையும் போகிறபோக்கில் அவர்களால் கூறிவிட முடிகிறது.
படித்தவர்கள் சட்டத்தின் படி நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள், படிக்காதவர்கள் நியாயத்தின் படியும் தருமத்தின் படியும் வாழ முனைகிறார்கள். அதனால் தான் படித்தவர்கள் தவறிழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்கு வழி தேடுகிறார்கள், படிக்காதவர்கள் பழி பாவங்களுக்கு அஞ்சுகிறார்கள்.
படித்தவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையிலும் கோவிலிலும் தான் தெய்வம் குடிகொண்டு இருக்கிறது என்று நினைத்து மற்ற இடங்களில் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். படிக்காதவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் இறைவன் இருக்கிறான் என்று நம்புகிறார்கள்.
நம்மோடு இருப்பவர்கள் எப்போதுமே நம்முடனேயே இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து நாம் ஏமாந்து விடுகிறோம். நம் தாய் தந்தையர் தானே, வீட்டில் தானே இருக்கப்போகிறார்கள் வேலையை முடித்துவிட்டு பேசிக்கொள்வோம், நம் உறவினர்கள் தானே எங்கே போய்விட போகிறார்கள். நம் குடும்பத்தினர் தானே பிறகு பார்த்துக்கொள்வோம் என்று காலம் தாழ்த்திக்கொண்டு சென்றுவிடுகிறோம். பணிச்சுமை, பொருளாதாரம்., அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. காலம் மிகவும் பொல்லாதது என்று.
இந்த நொடி இருப்பவரை அடுத்த நொடி நம்மிடமிருந்து இல்லாமல் செய்து விடும் காலம்.அப்படித்தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஆறு மாதங்களில், 2004 ஜூலை மாதம் எப்போதும் போல இயல்பாக புலர்ந்த காலைப்பொழுது ஒன்று என் அன்னை காலமாகிவிட்டார் என்ற செய்தியை சுமந்து வந்தது.
நாம் கஷ்டப்படும் போதெல்லாம் நம்மோடு துணை நின்றவர்கள், என்றாவது ஒருநாள் நாள் வென்றுவிடுவோம் என்று முழுதாக நம்பியவர்கள், நாம் நன்றாக வாழ்வதை பார்ப்பது ஒன்று தான் தங்கள் வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்கள், நாம் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது இல்லாமல் போவதென்பது மிகவும் கொடுமையான விஷயம்.
ராமநாதபுரத்தின் மாவட்டத்தின் வறண்ட கரிசல் காடுகளில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தம் மகன் அழகர் மலை அடிவாரத்தில் முல்லை பெரியாறு பாசனத்தில் இரண்டு போகம் விவசாயம் செய்வதை பார்த்திருந்தால் என் தந்தை முனியாண்டித்தேவர் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்...?
கல்லைக்கண்டாலும் தம் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் கடவுளாக நினைத்து வணங்கிய என் தாய் மூக்கம்மாள் இருந்திருந்தால் தன் மகன் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும் தம் கொள்ளுப்பேரப்பிள்ளைகள் மருத்துவர்கள் ஆனதற்கும் எப்படி உணர்ந்திருப்பார்..?
பெற்றவர்கள் செய்த தருமங்களும் அவர்களுடைய ஆசிகளும் பிள்ளைகளை பெரும் பெரும் ஆபத்துகளில் இருந்துகூட காக்கும் கவசங்களாக திகழ்வதை பல இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
என் தந்தை அடிக்கடி கூறிய இரண்டு விஷயங்கள் எப்போதுமே என் காதுகளில் அசரீரி வாக்கு போல் ஒலித்துக்கொண்டே இருக்கும். "பூமிநாதா துரும்பளவு உதவி செய்தவரைக்கூட உயிருள்ளவரை மறக்காதே..!! உன்னால் முடிந்தால் பிறருக்கு உதவி செய், முடியாவிட்டால் ஒதுங்கிக்கொள். தப்பித்தவறிக் கூட யாருக்கும் கெடுதல் செய்துவிடாதே..!!
ஒருமனிதன் தன் குடும்பத்தால் எப்போது மறக்கப்படுகிறானோ அப்போது தான் உண்மையில் மரிக்கிறான். அந்த வகையில் முனியாண்டித்தேவரும் மூக்கம்மாளும் எந்நாளும் எங்களோடு இருப்பார்கள்..!!
#மதுரை_தெற்கு_தொகுதி #துரைவைகோ #மதிமுக #MDMK #வைகோ #ஸ்டாலின் Vaiko Durai Vaiko M. K. Stalin தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் Senthilathipan @top fans
No comments:
Post a Comment