Tuesday, 2 May 2017

தமிழ் நாட்டில் எல்லைப் போராட்டம் தேவரின் சொற்ப்பொழிவு

தமிழ் நாட்டில் எல்லைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது பசும்பொன் தேவர் அவர்கள் அப்போராட்டத்தை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல்     ம. பொ. சி.அவர்களின் அழைப்பை ஏற்று மாநாட்டிலும் பங்கு கொண்டு உரையாற்றினார். (7-6-1956)  அந்த பதிவுகளை பதிவு செய்கிறேன் தோழர்களே!.

"தமிழ் நாடு - தமிழுக்கும் தமிழ் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைகழிக்கப்பட்டு வருகிறது. அந்த அலைக்கழிவு, முடிவில் 'தமிழ் மாகாண'மென்று கூடச் சொல்ல இயலாது - 'எஞ்சிய சென்னை' என்பதன் பெயராலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது. இந்நிலையில், சென்னையையொட்டி, ஜனத் தொகையிலும் சர்வ முறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது. இதற்கென  ஒரு போராட்டம் வர வேண்டிய அளவுக்கு காங்கிரசின் மந்தப் புத்தி,காலத்தை வீணாக்கிப் போராட்டம் வந்த பிறகும், ஆங்கிலேயன் முறையைப் பின்பற்றி அடக்கு முறையைக் கையாள நினக்கிறதே தவிர அறிவு வந்ததாக இல்லை – மந்திரி சபைக்கு! அறிவு வராது. ஏனென்றால்,காங்கிரசில் கை தூக்கிகள் மலிந்து விட்டதாலும், மானத்தை விட பதவியும் பணமும் பெரியதெனக் கருதுகிற நபர்கள் அதை ஒட்டிக் கொண்டிருப்பதாலுமே!
         எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரி சபை வழக்கம் போல் அசட்டுத் தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிபார்க்க நேரும். அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ் நாட்டில் தயாரிக்கும். அப்பொழுது, மந்திரி சபை மிகப் பெரிய – வேண்டாத பொறுப்புகளுக்கு இலக்காகி மரியாதையையும் பதவியையும் ஒருங்கே கைவிட வேண்டி வரும். எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால் நல்லது என்று மீண்டும் கேட்டுக் கொண்டு, தமிழ் எல்லைப் போராடத்திற்கு ஆசி கூறுகிறேன். சிறை செல்லும் தியாகிகளுக்கு என் வணக்கம் உரித்தாகுக! போராட்டம் நீடித்தால் உங்களோடு பங்கு கொள்ளும் காலமும் சமீபிக்கும்.”
ம.பொ.சி. அழைப்பை ஏற்று, பசும்பொன் தேவர் அவர்கள் குமரி முனையில் னடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில் கலந்து கொண்டு சிம்ம கர்ஜனை செய்தார். “ தமிழரசு காணவும்,தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும், தமிழை அரசு மொழியாக்கவும் பாடுபடுவதற்காக சரியான நேரத்தில் தமிழரசு கழகம் முன் வந்திருக்கிறது. அதனாற்றான் என் மதிப்பிற்குரிய ம.பொ.சி. அவர்களின் அழைப்பை ஏற்று இந்த மேடையில் நான் பேச முடிகிறது” என்ற முன்னுரையுடன் தமது சொற்பொழிவைத் தொடங்கினார். “ உண்மையில் எவருக்கும் தலைவணங்காத மாவீரரான பசும்பொன் தேவர் அவர்கள் எனது அழைப்பை ஏற்று தமிழரசு கழக மேடையில் நின்று சொற்பொழிவாற்றியது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது” என ம.பொ.சி.குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment