அம்பேத்கர் ஒரு தேசபக்தர்!
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எழுதிய கட்டுரை
மத்திய அரசாங்க சட்ட மந்திரி கனம் அம்பேத்கர் ஒரு காலத்தில், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராக இருந்தார் எனச் சொல்கிறார்கள்.
தேச விடுதலைக்காக உழைத்தவர்கள் என்று மார்தட்டும் வீரப் புலிகளின் யோக்யதையை, அந்தரங்க எண்ணத்தை ஆதியிலிருந்து இன்று வரை அலசிப் பார்ப்போமானால், அம்பேத்கர் அவர்கள் மற்றெல்லோரையும் விட தேச பக்த்தியில் சிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தகுதியற்றவர்களும், திறமையற்றவர்களும், திரை மறைவுச் சதிவேலை போலி வீரர்களும் விடுதலை இயக்கத்தைக் கைபற்றிக்கொண்டு கொட்டம் அடித்திராவிட்டால் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள்!
சார்.சி.பி. இராமசாமி அய்யர் வகையறாக்கள் அனுபவிக்கும் அதிகார போகத்தை தாமும் அடைந்தாக வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் செயலாட்ட்ரத் தொடங்கியோர் கையில் காங்கிரசு இயக்கம் சிக்கியிராவிட்டால் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள் விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகியிருக்க மாட்டார்கள்.
வெறும் அலங்காரத்திற்காகவும், புகழுக்காகவும் சாதிகள் ஒழியவேண்டுமென்று மேடை மீது நின்று கர்ஜித்து, நடைமுறையில் கடைந்தெடுத்த சாதி வெறியர்களாக இருக்கும் கயவர் கும்பல் காங்கிரசில் பெருத்திருக்காவிட்டால், அம்பேத்கர் காங்கிரசுக்கு விரோதியாகி இருக்கமாட்டார்.
சுருக்கமாக சொல்லுமிடத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்கூட்டம் காங்கிரசில் வலுத்துப் போனதால்தான், அம்பேத்கர் போன்றவர்களுக்கும் அதில் இடமில்லாது போய்விட்டது.
கடந்த 26 ஆம் தேதியன்று நமது வருங்கால அரசியல் திட்டம் அரசியல் நிர்ணய சபையில் கைஎழுத்தாகுமுன் அவர் நிகழ்த்திய அர்ப்புதப் ப்றேசங்கத்தைக் கூர்ந்து கவனிப்போருக்கும் மேல உள்ள உண்மைகள் தெளிவாய்ப் புலனாகும்.
மகாத்மா காந்தியடிகள் பலரும் புகழ்வதுபோல் தலை சிறந்த அவதாரப் புருஷராய் இருக்கலாம்; தேச விடுதலைக்கு அவர் பட்ட சிரமமும் ஈடுயினையற்றதாய் இருக்கலாம். ஆனால், அவரின் ஆதிக்கம் காங்கிரசில் தலை காட்ட ஆரம்பித்த நாள் முதல் சனநாயகம் என்ற வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்பதை யாருமே மறுக்க முடியாது. சிரித்து கழுத்தருப்பவர் என்று சொல்கிறார்களே அதைப் போல் சொல்லொன்று, செயலொன்று என்ற தன்மையில் காந்தியக் காங்கரசு செயல்படத் தொடங்கியிராவிட்டால்,
லோகமான்ய பாலகங்காதரத் திலகரும்,
தேசபந்து சித்திரஞ்சன் தாசும்,
சிங்கநெஞ்சன் வ.உ. சிதம்பரனாரும்,
நேதாஜி சுபாஷ்சந்திர போசும்,
காங்கிரசை விட்டு வெளியேறியோ, ஒதுங்கியோ நின்றிருப்பார்களா?
இக்கருத்தை மனதிலிருத்தித்தான் இனிமேலாவது ஒழுங்காகநடந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்துடன் டாக்டர் அம்பேத்கர் இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் புத்திமதி சொல்வதுபோல், பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"இந்நாட்டில் நீண்டகாலமாக ஒரு சிறு கூட்டம்தான் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவித்து வருகிறது. மக்களில் பெரும்பாலோரை இந்தச் சிறுபான்மையினர் வேலை வாங்குவதுடன், இரையாகவும் விழுங்கி வருகின்றனர் . ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்துவிட்டனர். அவர்களுடைய எழுச்சியானது வர்க்கப் போராட்டமாக மாறாதபடி தவிர்க்க வேண்டும். இல்லையேல் நாசம் தான் ஏற்படும்".
"இடையில் வெகு காலமாகஇந்தியாவில் ஜனநாயகம் அமலில் இருக்கவில்லை. அதனால் ஜனநாயகம் புதுச்சரக்ககக்கூடத் தோன்றலாம். இந்தக் காரணத்தினால் ஜனநாயகத்திற்குப் பதில் சர்வாதிகார முறை எழுந்து விடக்கூடிய அபாயம் உண்டு. இந்தப் புதிய ஜனநாயகம் தனது வெளித்தோற்றத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு உள்ளூர் சர்வாதிகாரமாக மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு".
"இந்திய சமுதாயத்தில் சமத்துவம் என்ற வாசனையே இல்லை. பல்வேறு படிகளைக்கொண்ட அசமத்துவ முறைதான் நமது சமூகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது சமூகத்தில் சில கூட்டத்தார் உயர்ந்த அந்தஸ்த்தையும்,வேறு சில கூட்டத்தார் தாழ்ந்த அந்தஸ்தையும் வகிக்கிறார்கள்".
"ஜனவரி 26-ஆம் தேதி நாம் பெறப்போகும் புது வாழ்க்கையில் முரண்பாடுகள் நிறைந்திருக்கும். அதாவது அரசியல் துறையில் சமத்துவம் பெறப்போகிறோம். ஆனால், பொருளாதார சமூகத் துறைகளில் அசமத்துவம் நிலவும். இந்த முரண்பாட்டை வெகு சீக்கிரமாக அகற்ற வேண்டும், இல்லையேல் அசமத்துவத்தால் தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களால் இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் சிரமப்பட்டு நிர்மாணித்த அரசியல் - ஜனநாயகம் சிதறிப்போயவிடும். ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்கள் தங்களை 'ஜன சமுதயம்' என்று எப்படிக் கருத முடியும்? இந்த ஜாதிகள் தேசத்தின் சத்ருக்குக்களாகும். ஏனெனில் சமுதாய வாழ்வை இந்த சாதிகள் பிளவுபடுத்துகின்றன. அதோடு பல்வேறு ஜாதிகளிடையே துவேசத்தையும்,பொறாமையையும் ஜாதிமுறை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையிலேயே ஒரு ஜன சமுதாயமாக ஒன்றுபட வேண்டுமானால் இத்தீமைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். ஜன சமுதாயமாக ஒன்றுபட்டு சகோதரத்துவம் நிலைத்தாலன்றி சுதந்திரம் வேரூன்றாது".
மேலேயுள்ள வேத வாக்கெனத் தகும் அறிவுரையைக் கூறிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தேச விடுதலைக்கு எதிராக செயலாற்றியிருக்கலாம். ஆனால் உள்ளத்திலிருந்து வெளிவந்துள்ள கருத்துக்களை உற்று நோக்கும் அறிஞர்கள், காந்தியக் காங்கிரசிற்கு இவர் எதிராளியாக இருந்ததைக் குறித்து ஆத்திரமடைய மாட்டார்கள். காந்திய காங்கிரசின் சர்வாதிகாரத்தால் ஏற்பட்ட விளைவு என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டும் குற்றங்கள் அனைத்தும் உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய காங்கிரசில் ஜனநாயகத்திற்கும், உண்மை ஊழியர்களுக்கும் இடமில்லை. ருத்திராட்ச பூனை வேஷம் போடத் தெரிந்தாலன்றி காங்கிரசில் செல்வாக்கும் பெற முடியாது. இதே நிலை மேலும் நீடிக்குமானால், இவர்கள் அடைந்துள்ள சுதந்திரமும்,தயாரித்துள்ள திட்டமும் வெகு விரைவில் சுக்கு நூறாகும் என்பது திண்ணம்.
இதை நேருஜி போன்றோர் காலாகாலத்தில் உணர்ந்து, தக்க பரிகாரம் செய்ய முற்படுவாரானால்,நாட்டிற்கு நன்மை உண்டு. அவர் சித்தம் எப்படியோ?யார் கண்டது?
மிகச் சிறப்பு... வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ReplyDeleteநல்ல கருத்து... வாழ்த்துகள். இந்த கட்டுரைக்கான ஆதாரம் ஏதாவது உள்ளதா
ReplyDelete