தெய்வ வாக்கு
1 - விவேகமில்லாத ஒருவன் காமத்தைக் கடக்க முடியாது .
வீரமில்லாத ஒருவன் யம பயத்தைத் தாண்ட முடியாது .
யம பயத்தைத் தாண்டியவரும் , காமத்தைக் கடந்தவரும் தான் ஞானி .
2 - இல்லறம் இல்லையேல் உத்தமர்கள் பிறக்க வழியில்லை. துறவறம் இல்லையேல் மனநெறியை சாதிக்கும் மகாயோகிகள் தோன்ற வழியில்லை.
ஆகவே இல்லறமும், துறவறமும் வெவ்வேறல்ல. அது அவரவர் மனப்போக்கிற்கும் பிராணத்துவ தர்மத்திற்கும் தக்கவாறு உண்டாக்கப்பட்ட காரியமாகும். -
3 - தெய்வீகமற்ற தேசத்தில் நீசத்தன்மைதான் பெருகும். நீசத்தன்மை பெருகிய தேசத்தில் நல்லவர்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள்.
4 - நல்லவைகளையும் நல்லவர்களையும் உண்டாக்கி தேசியத்திற்கு விநியோகிக்கும் சக்திதான் தெய்வீகம். இந்த தெய்வீக சக்தியை வேண்டாத தேசியம், தேசியம் ஆகாது. -
5 - மதம் இல்லாத தேசம் வேர் இல்லாத மரம் போல. எந்த காற்றிலும் விழுந்து விடும். மதமிருந்து ஒழுக்கம் இருந்து அதன் பெயரால் காரியங்கள் செவ்வனே நடைபெற்றால் தான் தேசம் உருப்படியாக இருக்கும்.
6 - எவ்வளவுதான் ஞானம் உள்ளவனாக திறமைசாலியாக இருந்தாலும் சொந்த வாழ்வில் ஒழுங்கீனம் புரிந்தவனை தலைவனாகவோ, தொண்டனாகவோ ஏற்றுக் கொள்வது பெருங் கேடாய் முடியும்.
7 - மனிதன் ஆசையில் ஆபாசமானது பெண்ணாசை, அபாயமானது அதிகார ஆசை. அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவன் எந்த அக்ரமங்களையும் புரிய தன் மனதைப் பழக்கிக் கொண்டுவிடுகிறான்.
8 - ஒன்றும் தெரியாத நிலையிலேயே சிலர் வாழ்கிறார்கள். ஒன்றும் தெரியாத நிலையிலே இருந்தும், எல்லாம் தெரியும் என்று சிலபேர் வாழ்கின்றார்கள். எதில் வாழ்ந்தாலும் சரி, அடுத்தவனுடைய பணத்திற்கு ஆசைப்படாமல், அதிகக் காமுகனாக இல்லாமல், எவன் பதிவிரத பக்குவத்தோடு வாழ்கிறானோ அவன் தெய்வத்தை வணங்காமல் வாழ்ந்தாலும், அவன் பரிசுத்தமானவன் தான்.
9 - பாம்பின் வாய்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்க பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே, மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்துகொண்டே இருக்கிறது.
10 - மனிதன் எண்ணங்கள் பேச்சின் மூலம் வெளிப்படுகின்றன. அதற்காகத் தான் "மரம் காய்த்த பின் பார்" - மனிதனை பேசவிட்டு பார் என்றார்கள்.
11 - நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.
12 - பணத்தைப் பெற்று நல்ல குணத்தை இழந்து விடாதே!
குணத்தைப் பெற்று நல்ல மனத்துடன் வாழ்வதே
மானுட வாழ்க்கையின் ஆக்கமான நோக்கமாகும்.
13 - பதவி ஆசை பிடித்தவனுக்கு அவனுடைய கை, கால்களும் கூட எதிரியாய் மாறும்!. மடையர்கள் ஆட்சியில் மக்களுக்கும் ஆளுகின்றவனுகும் நீங்காது பகை இருக்கும்.
14 - தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன் பொதுவாழ்வில் ஒழுக்கத்துடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.
15 - மனச்சாட்சியுள்ள ஒருவன் மனிதனாகிறான்; மனசாட்சி இல்லாத மனிதன் மிருகமாகிறான்.
16 - உயர்குடி, தாழ்ந்த குடி என்று மனிதனை பிரித்தாலும் அவனவன் மனநிலையைப் பொறுத்தே உயர்ந்த மனிதனாகிறான்.
17 - பொதுவாக மண், பெண், பொன், பதவி ஆகியவற்றில் ஆசையற்ற எவனுக்கும் உலகில் எதிரிகளே இல்லை. அதில் ஆசைப்பட்டவனுக்கு உலகம் மட்டுமல்ல, அவனுக்கு அவனே எதிரிதான்.
18 - எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல.
19 - அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்கே உரிமையான குணமாகும்.
20 - ஒருவர் உதவியின்றி ஒருவர் வாழ முடியாது" என்ற நடைமுறை உண்மையை எல்லாரும் உணர்ந்தால் உலகில் பஞ்சமும், பற்றாக்குறையும், பகையும் வரவே வராது.
21 - மனிதனை ஒழுக்கத்தின் பெயரால்
தான் உயர்ந்தவர் என மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல.
22 - புறங்காலை வீங்கவிட்ட மனிதன் எப்படி இறந்து அழிந்து போவானோ, அதைப் போல் விவசாயிகளை கஷ்டப்படுத்தும் அரசும் அழிந்தே போகும்.
23 - சுத்த சைதன்யமென்பது பிறப்பும் இறப்பும் அற்றநிலை. ஆதியிலிருந்து அந்தம் வரை சென்று பின்னர் தன்னிலை அடையும். வான மேகம் சமுத்திர நீரையுண்டு பின்னர் மழை பொழியும்போது நீர் எவ்வாறு தானிருந்த சமுத்திரத்தையே மீண்டும் அடைகிறதோ அதேபோல ஆன்மாவும் தான் விடுபட்ட இடத்தையே மீண்டும் அடைகின்றது.
24 - ஒழுக்கத்திற்கென வைத்த
கட்டுப்பாடுகள் வயிற்றுப்
பிழைப்பிற்கென கைவிடப்பட்டன.
அதிகப் பணம் திரட்டும் ஆசையில்
ஒழுக்கம் அழித்ததுவிட்டது.
25 - தமிழ் வாழ வேண்டும் வளர வேண்டும் எனில் தமிழர்கள் தெய்வ பக்தியுடையவர்களாக இருக்க வேண்டும்.
26 - மனிதனுடைய ஆசை மேலோங்கிவிட்டால்,
அவன் ஆண்டவனையே ஏமாற்ற துணிகிறான்.
27 - மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லது அல்ல.
28 - அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி விட்டார்கள்.
29 - வரி கொடுக்க வசதியுள்ளவனிடம் வரியை வாங்க இந்த அரசுக்கு தைரியம் இல்லை.
30 - சோற்றில் கிடக்கும் கல்லை எடுத்துப் போடத் திறமை இல்லாதவன், சொக்கநாதர் கோவில் வரிக்கல்லைப் பிடுங்கக் கிளம்பியது போல் உள்ளது ஐநா சபை செயல்பாடு.
31 - நான் எவரையும் எதிரியாக கருதுபவன் அல்ல, தவறுகளை கண்டிக்கின்ற என்னை யாரேனும் எதிரியாக பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
32 - தேசப் பிரச்சனைகள் யாவும், அரசியல் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழிலாக மாறிவிட்ட மோசமான காலமாவிட்டது.
33 - கடவுளை தொழ வேண்டிய விதம், தொழ நினைப்பவனுடையப் பக்குவத்திற்குத் தக்கவாறு பலவகைப்படும்.
34 - பாக்கிஸ்தானுக்கு ஒத்துக்கொண்டால் அது பசுவை இரண்டாக வெட்டியதற்கு சமம் என சொன்ன காந்தி தான் பாக்கிஸ்தான் உருவாக ஒத்துக்கொண்டார்.
35 - இன்றைக்கு இந்தியாவை அரசாளும் தலைவர்கள் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டால், அவர்களும் வாழலாம்; நாடும் வாழும்.
36 - எழை விவசாயிகளின் அரசு என்று தன்னை அழைத்து கொள்ளும் சர்க்கார், ஆங்கிலேயர்களை விட அதிக அளவில் வரி வசூல் செய்கிறது.
37 - முகக்கண் கொண்டு எழுதியது சரித்திரம். முக்கண் கொண்டு எழுதியது சாஸ்த்திரம். அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது.
38 - இன்றைய உலக நாட்டு மக்கள் தமது தேசத்தைக் காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகி, துணிவுடன் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் நமது தேசத்தில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தங்கள் சுயநலனைப் பணத்தின் மூலம் உயத்தி, பலம்படுத்திக் கொள்ள வேலைசெய்வது சகிக்க முடியாதொரு துர்பாக்கியம்.
39 - கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்து பார் என்றுதான் சொல்லமுடியும்.
40 - ஜெயித்த ஒருவனைத் தன் ஆளாக மாற்றிக் கொள்வதும், அபாயம் நேரிட்டால் அறுத்துக் கொள்வதும் வெள்ளையர்களின் ராஜதந்திரம்.
41 - அடுத்த தேர்தலை சிந்திப்பவன் அரசியல்வாதி.
அடுத்த தலைமுறையை சிந்திப்பவன் தேசியவாதி.
42 - பதவியை ஒரு சேவையாக கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் கனவு தான்.
43 - நாத்திகன் திருந்த மாட்டான். அவனுக்கு எல்லாம் வல்ல தெய்வ சக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் நினைத்தையெல்லாம் செய்வான். அதுவே அவனை அழித்து விடும். நாடும் கெடும்.
44 - கடனாளிகளையும் யோக்கியமற்றவர்களையும் திருடர்களையும் தற்கொலை செய்வோரையும் உருவாக்குவதே "தேவைகளைத் தவிர்க்கவும், குறைக்கவும் முடியாத பரிதாப நிலைதான் "
45 - இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற் கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலைநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.
46 - இன்று அதிகாரப் பலத்தால் உங்கள் கட்சியின் சக்தி இப்போதைக்கு பெரிதாய்ப் படலாம். ஆனால் அது இற்றுவிடும். இற்றுவிட்ட நிலையில் மானங்கெட்ட ஒரு கட்சிக்கு அடையாளச் சின்னமாகத் தான் அக்கட்சி இருக்கும்.
47 - இலங்கையிலிருந்து வரும் அகதிகளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. ஆனால் திபேத்திலிருந்து வரும் கலகக்காரர்களுக்கு பாலும், தேனும், பல்லாக்கும், பட்டு மெத்தையும் கொடுக்கிறார்கள். என்ன விந்தை! இது சிந்திக்க வேண்டிய விசயம்.
48 - அதிகாரம் மக்களுடையது, அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறது. நாம் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய மனோபாவம் மந்திரிகளுக்கு இருக்க வேண்டும்.
49 - எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள்.
வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது”.
50 - எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது.
51 - விவசாயிகளை முறுக்கிப் பிழிந்து அவர்கள் உடல் ரத்தத்தை எல்லாம் வரியாக உறிச்சுகிறது அரசாங்கம்.
52 - கடந்த காலங்களில் பல்வேறு நாட்டினரையும் இந்தியா வரவேற்று இருக்கிறது. இனியும் தொடர்ந்து எங்கள் தலையில் ஏறி மிதிக்கவிடும் ஈனர்கள் அல்ல நாங்கள்.
53 - நான் குற்றம் புரிந்தவனுமல்ல;
புரிபவனும் அல்ல.
54 - பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிருத்தவ வளாகத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் சரீரத்தின் இருட்டை போக்க எழுப்பவேண்டிய ஞானவிளக்கின் சொருபமாக காண்பான்.
55 - ஆஸ்தீகவாதிகள் அத்தனை பேரும் யோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களிடமும் தவறு இருக்கலாம். அதற்காக தெய்வ நிலையை குறை பேசக்கூடாது.
56 - ஒழுக்கத்தின் பெயரால் அறிவால் தியாகத்தால் பதவிக்கு வருபவர்களைத்தான் மதிக்க முடியும். சந்தர்பத்தால் வந்தவர்களை அல்ல.
57 - வேஷம் போடத் தெரிந்தாலன்றி செல்வாக்கு பெற முடியாது. இதே நிலை மேலும் நீடிக்குமானால், இவர்கள் அடைந்துள்ள சுதந்திரமும்,தயாரித்துள்ள திட்டமும் வெகு விரைவில் சுக்கு நூறாகும் என்பது திண்ணம்.
58 - உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.
59 - நாகரிகம் என்ற நாஸ்தீகத்தை பரப்பி. Lஅநாகரிகமான வழியில் சென்று அழிந்து விடக்கூடாது.
60 - சுருக்கமாக சொல்லுமிடத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்கூட்டம் காங்கிரசில் வலுத்துப் போனதால்தான், அம்பேத்கர் போன்றவர்களுக்கும் அதில் இடமில்லாது போய்விட்டது.
No comments:
Post a Comment