Thursday, 20 November 2025

சேதுபதி மன்னர் குடும்பமும், முத்துராமலிங்க தேவரும்

சேதுபதி மன்னரை எதிர்த்து முத்துராமலிங்க தேவர் போட்டியிட்டார் என பேசப்பட்டாலும் அவர்கள் குடும்பத்திற்குள் இருந்த உறவு எல்லையற்றது. 1937ல் சென்னை மாகாண சட்ட சபை தேர்தலுக்கு ராமநாதபுரம் தொகுதிக்கு அப்போதைய சேதுபதி மன்னரான நாகநாதசேதுபதி வேட்பாளராக நிறுத்தியது செல்வாக்குடன் இருந்த நீதிக்கட்சி. மன்னரை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வராதால் அவரை எதிர்த்து போட்டியிடுமாறு முத்து ராமலிங்கதேவரை வற்புறுத்தியது காங்.,கட்சி. தலைவர்களின் வற்புறுத்தலால் சேதுபதி மன்னரை எதிர்த்து போட்டியிட்டு தேவர் வெற்றி பெற்றார். ஒரே சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த இருவர் போட்டியிட்ட நிகழ்வு இன்று வரை பேசும் பொருளாக இருந்தாலும் கூட அவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் இருந்த உறவு நட்பு இன்று வரை தொடர்கிறது.தேவர் மதுரை பசுமலையில் படித்த போது சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதியின் இரண்டாவது மகன் ராஜராம் பாண்டியன் இல்லத்தில் தங்கி படித்தார்.அதன் பிறகு 1962ல் இந்திய குடியரசுக்கு மூன்றாவது பொதுத்தேர்தல் நடந்த போது மக்களவைக்கும், சட்ட சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. அப்போது அவர் அருப்புக்கோட்டை மக்களவை தொகுதி வேட்பாளராக தேவர் இருந்தார். அங்கு பிரசாரம் செய்த போது உறவினரான பாளையம்பட்டி ஜமீன் தசரத்துரை வீட்டிற்கு சென்றார். தசரத்துரையின் மனைவி ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ராஜா சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் சகோதரி ஆவார்.வீட்டின் விருந்து உபசாரத்தின் போது தசரத்துரை மகள் இந்திரா தேவிக்கு திருமணம் தள்ளிப்போவதை அறிந்த தேவர், தசரத்துரையின் மைத்துனர் சேதுபதி மன்னர் மகனிடம் பேசுவதாக கூறி சென்றார். அதன்படி ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்ற தேவர் யாழ்பாணத்தில் படிப்பை முடித்து இருந்த ராஜா ராமநாத சேதுபதிக்கு இந்திரா தேவியை திருமணம் செய்து வைத்தார்.இந்த தம்பதியினரின் வழித்தோன்றல்கள் தான் இன்றைய ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மகாராணி, சமஸ்தானம் அறக்காவலர் பிரம்ம கிருஷ்ண ராஜ ராஜேஸ்வரி நாச்சியார் குடும்பத்தினர். இவரின் சகோதரரும், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தக்காராகவும் இருந்து சமீபத்தில் மறைந்த ராஜா குமரன் சேதுபதி, ஆண்டுதோறும் பசும்பொன்னிற்கு வந்து தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவர் மறைவிற்கு பிறகு நேற்று முன்தினம் அவரது மகன் ராஜா பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி மரியாதை செலுத்தினார். அன்றைய தவறான பிம்பத்தை உடைத்தெறிந்து தொன்று தொட்டு தொடர்கிறது இருவர் குடும்பத்திற்கான உறவு.-

கரு.முத்துராமலிங்கம், தேவர் வரலாற்று நுால் ஆசிரியர், கடலாடி.

நன்றி : தினமலர் 
சேதுபதி மன்னர் குடும்பமும், முத்துராமலிங்க தேவரும் https://share.google/WrnwhdhwOYSaNB1NE

No comments:

Post a Comment