Friday 13 September 2024

முதுகுளத்தூரில் நடந்தது என்ன?

முதுகுளத்தூரில் நடந்தது என்ன?
கனம் தலைவர் அவர்களே, கனம் கலியாணசுந்தரம் அவர்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தையொட்டி நான் பேச முன் வந்திருக்கிறேன். இதற்குமுன் பேசிய பலர் அதிலும் குறிப்பாகக் கனம் பாரதியார் (சிதம்பரபாரதி) அவர்கள் பேசும்போது தேவர் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் என்றும், முதுகுளத்தூர் மக்கள் தனக்கு சொந்தக்காரர்கள் என்றும் குறிப்பிட்டார். அப்படிச் சொல்லிக்கொண்டு தனக்கு அரசியல் பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்லிக் கொள்கிறார். அந்தப் பக்கத்திலுள்ள மக்கள் திருந்த வேண்டுமென்று குற்ற பரம்பரைச் சட்டம் போட்டிருந்தும் கூட அங்குள்ள வர்களுக்கு நல்லமுறையில் வாழவேண்டும் என்று வாய்ப்புக் கொடுத்திருந்தும் அவர்கள் அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருந்தும் காட்டு மிராண்டிகளைப்போல் இருந்தார்கள் என்றும், அவர்களுக்குத் தலைவராக தேவர் அவர்கள் இருந்தார் என்றும் சொன்னார். அப்படி அவர் சொன்னது அவருக்கு மிகவும் அழகாக இருந்தது. அப்படிப்பட்ட மக்களும் அவர்கட்கு ஒரு தலைவரும் அந்தப் பக்கத்தில் இவ்வளவு காலம் இருந்திருக்கிறார் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. அது எதைக் காட்டுகிறது என்றால் இதுவரை யிலும் அங்கே அரசாங்கம் நடைபெறவில்லை என்றுதான் காட்டுகிறது என்ற அந்தத் தொனியில் அவர் பேசினார். அந்தப் பகுதி இந்த நாட்டில்தானிருந்ததா? அல்லது வேறெங்குமிருந்ததா? அதே பிற்பட்ட பகுதியைச் சேர்ந்தவரும், அரசாங்கத்தை நடத்தத் தெரிந்தவரும் இராமனாதபுரம் ஜில்லாவாசியும், ஆதி தியாகியாகவும் தலைவராகவும் இருக்கும் முதல் மந்திரி காமராஜ் அவர்கள் வந்த பிறகும் அங்கு ஏன் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துக் கொள்ளவில்லை? என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தும் ஏன் அதைப் புறக்கணித்தார்கள்? இந்தக் குற்றம் யாரைச் சார்ந்தது? நாட்டு மக்களோடு மக்களாகக் கருதாமல் அவர்களைக் குற்றபரம்பரைச் சட்டத்தில் வைத்து இருந்தார்கள் வெள்ளைக்காரர்கள். வெள்ளைக்காரர்களுக்குத்தான் தேவர்களும் பள்ளர்களும் வேண்டாதவர்களாக இருந்தார்கள் என்று சரித்திரம் சொல்லும். அந்தப் பகுதி வெள்ளைக்காரர்கள் காலத்தில் தான் புறக்கணிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் கஷ்டப் பட்டார்கள். உசிலம்பட்டி பிராந்தியத்திலே குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்களைளை 20பேருக்கு மேல் சுட்டு எரித்தார்கள். அன்று வெள்ளை அரசாங்கம் அப்படிச் செய்தது. வெள்ளைக்காரர்கள்தான் செய்தார்கள் என்றால், இந்தக் காலத்திலும் அந்தப் பகுதியைப் புறக்கணிப்பதும், இந்தணிக்கப்பட்டதற்குக் காரணம் தேவர் தலைவர் என்று சொல்வதும் சரியில்லை. மக்களுக்கு அவர் நன்மை செய்ய வில்லையானால் அரசாங்கம் நடத்தும் இவர்கள் ஏன் அந்த மக்களுக்கு நன்மை செய்யவில்லை? இவர்கள் பேசுகிற பேச்சு எப்படியிருக்கிறதென்றால், வெள்ளைக்காரர் அன்றைக்குப் பேசிவந்ததைப்போல இருக்கிறது. அவர்களைப் பின்பற்றி இவர்களுடைய பேச்சும் இருக்கிறது. காமன்வெல்தில் இந்தியா இருப்பதைக் குற்றமாகச் சொல்லி தேவர் அவர்கள் போராட்டத்தைச் செய்து சதித் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காகத்தான் அவரைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்று அதில் ஒரு கலகத்தை மூட்டி தேவர் மீது கொலை குற்றம் சொல் கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? அன்றிருந்த வெள்ளைக்கார மனப்பான்மையைக் காட்டுகிறது. அவர் ஒரு காட்டுமிராண்டி, ஒரு கொலைகாரர், ஜாதி விரோதத்தைத் தூண்டிவிட்டார் என்று குற்றத்தைச் சாட்டி, வெள்ளைக்காரர்கள் வழியில் இவர்களும் போகிறார்களே யொழிய, இந்த நாட்டு மக்களிடமிருந்து வரி வாங்குகிறோமே, அவர்கள் பேரால் ஆளுகிறோமே, ஆகவே, அவர்களுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டாமா? என்று அவர்கள் சிந்திக்கவில்லை. தேவர் அவர்கள் இன்று வேண்டாதவர்களாக இருக்க லாம். அந்தப் பகுதியிலுள்ள மக்களிடமிருந்து பரம்பரை யாக வரிப் பணம் வாங்குகிறார்களே, அதற்காகவாவது அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று ஏதாவது சிந்தனை செய்து பார்த்தார்களா? இல்லை. கனம் அங்கத்தினர் பாரதி அவர்கள் அந்தப் பகுதியினருக்குச் சொந்தக்காரராக இருந்தும், அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கிறது. அப்படிச் சித்தரித்ததோடு அவர்களுக்கு தேவர் உடந்தையாக இருந்தார் என்று சொன்னார்கள். 1936, 1937-ம் வருஷங்களில் தேவர் இல்லையென்றால் அந்தப் பிராந்தியத்தில் காங்கிரஸ் இல்லை என்பதை அவர்களே உணருவார்கள். மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அன்று காங்கிரஸ் காப்பாற்றப் பட்டிருந்ததற்குக் காரணம், தேவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். சரித்திரம் சொல்லும். காட்டு மிராண்டி என்று இன்றைக்குச் சித்தரிக்கப்படும் தேவர் அன்றைக்கு காங்கிரசுக்குத் தேவையாக இருந்தது. SRI R. CHIDAMBARA BHARATHI: कण एवं சொல்வதை நான் மறுக்கிறேன். நான் ஒப்புக்கொள்ள வில்லை. MR. SPEAKER: அது 'Point of order' இல்லை. SRI. P.K.MOOKIAH THEVAR : நீங்கள் மறுக்கலாம், சரித்திரம் மறக்காது. பாரதி போன்றவர்களை அன்றைக்கு பாம் கேஸிலே சம்பந்தப்படுத்தி தண்டிக்கவேண்டுமென்று முயற்சி செய்த காலத்தில், காங்கிரஸ்காரர்கள் பலரும் விரோதமாக இருந்த காலத்தில் இவரை அதே தேவரும், சசிவர்ணத் தேவரும் காப்பாற்றினார்கள் என்பது இந்தச் சபைக்குத் தெரியாது சரித்திரம் சொல்லும். இன்றைக்கு மறைக்கப்பட்டிருந்தாலுங்கூட மானம், மரியாதையை நல்ல முறையில் காப்பாற்றி, காங்கிரசைக் காப்பாற்றி, பலமுறை சிறை சென்றார் தேவர் என்பது நாளை தெரிந்துவிடும். ராஜாஜி மந்திரி சபையில்கூட அவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். அன்றைக்கு விவசாயப் போராட்டத் திற்கு, தொழிலாளர் போராட்டத்திற்காக 1937-ல் சிறை சென்றார். ராஜாஜி காங்கிரஸ்காரராக இருந்தாலுங்கூட, அன்று ராஜாஜி அவர்களுக்கும் சத்தியமூர்த்தி அவர்களுக்கும் போட்டி இருந்தது. சத்தியமூர்த்தி அவர்களுக்கு நமது காமராஜ் சிஷ்யராக பாமரர் என்று இப்பொழுது பாமரர்களுக்குத் தலைவர் என்னும் மூர்ததுக்கு உம் தலைவர் தேவர் அவர்கள், அன்று சத்தியமூர்த்திக்கு உடந்தையாக இருந்தார். விளங்கினார்கள். சொல்லப்படும், 1946-லே ராஜாஜி அவர்களை எதிர்த்து தேவர் அவரது தலைமையை மாற்றினார். காரணம் அதற்கு முன்னால் நடந்த 1942-ம் வருஷத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாது, கலந்தவர்களைக் காலிகள், கூலிகள் என்று ராஜாஜி சொன்னதுதான். தேவர்தான் பீடத்தில் இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை அமர்த்தினார்கள் என்பதை மறுக்க முடியாது. இது சரித்திரம். இப்படி இருக்கும்போது, தேவரைத் தனிப்பட்ட முறையில், கொலைக் குற்றம் செய்தார் என்றோ, அக்கிரமக்காரர் அநியாயக்காரர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், அந்தப் பகுதி மக்களுடைய சொந்தக்காரர், என்று சொல்கிற பாரதி போன்றவர்கள் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சித்தரிக்கிறது வேடிக்கையாக இருந்தாலும் மனதைப் புண்படுத்துகிறது என்று நான் சொல்லிக்கொள்கிறேன். முதுகுளத்தூரில் நடந்தது என்ன? எல்லோரும் குறிப்பிட்டார்கள். குறிப்பாக ஹரிஜன அங்கத்தினர்கள் நொந்துகொண்டார்கள். அந்தப் பகுதி மக்களுக்குள்ள ஜாதி வெறி காரணமாக, பொருளாதாரத் துறையில் முன்னேறவேண்டுமென்று ஒரு சாரார் விரும்பியதன் காரணமாக, வளர்ச்சித் திட்டங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்று சொல்லி, அவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்ததன் காரணமாக அங்கு நடந்துவிட்டது. கலவரம். கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றோம். வருந்துகிறோம். நாம் பொறுப்புள்ள அங்கத்தினர்களாக வந்திருக்கிறோம். அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது. 1930 - 1932-ம் வருஷத்திலிருந்து வளர்த்துக்கொண்டே வந்தார்களே, இவ்வளவு காலமாக அவர்கள் வேடிக்கையா பார்த்தார்கள்? ஜாதிச் சண்டை நாட்டிலே ஏற்பட்டு கொண்டிருக்கிறதென்றால் அது வளரட்டும் என்று 1957-ம் ஆண்டு வரை ஏன் சும்மா இருக்கவேண்டும். அதற்குப் பின்னால் முடிவு கட்டவேண்டும் என்று இருந்தார்களா? இப்படிச் சுட்டுத்தள்ளி, அரசியல் கட்சிக்குப் பலம் தேடிக்கொள்ளலாம், அதற்கு வாய்ப்பு வரும் என்று இவ்வளவு நாளாக விட்டுக்கொண்டு வந்தீர்களா? அந்தத் திட்டம் போட்டு வேலை செய்தீர்களா? காலாகாலத்தில் ஏன் முடிவு செய்யவில்லை? எத்தனை கேஸ் போட்டீர்கள்? எத்தனை பிரச்சாரம் செய்தீர்கள்? தீண்டாமைப் பிரச்சாரம் நடந்ததா? அந்தப் பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதி என்று தத்தார் அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இப்படி புறக்கணிக்கப்பட்டு வந்திருக்க, இப்பொழுது என்ன திடீரென்று அக்கறை வந்துவிட்டது? துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை என்ன வந்துவிட்டது? அங்குள்ள பள்ளர்களும் தேவர்களும் தாய்-பிள்ளை உறவு கொண்டு இருக்கிறார்கள். இதைக் கெடுக்கப் பார்க்கிறீர்கள்; இனி இது முடியாது. கனம் அங்கத்தினர் ஸ்ரீ ராமசாமி நாயுடு அவர்கள் குறிப்பிட்டார்கள், 1893-ம் வருஷத்தில் சிவகாசியில் கொள்ளை அடித்தார்கள் நாயுடுக்கள், பள்ளர்கள், தேவர்கள். நாடார்கள் வியாபாரத் துறையில் முன்னேறி இருக்கிறார்கள் என்று அவர்கள் மீது போர் தொடுத் தார்கள். நாடாருக்கு விரோதமாக அப்பொழுது பள்ளர்கள் சண்டை போட்டார்கள் என்ற காரணத்திற்காக இன்று பதவிக்கு வந்துவிட்டோம். ஆகவே, அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற நோக்கங்கொண்டுதான் இப்படிச் செய்தீர்கள் என்று நான் காமராஜ் அவர்களைப் பற்றி ஏன் சந்தேகம் கொள்ளக்கூடாது? அதனால்தான் முதுகுளத்தூர் கலவரத்தை பள்ளர்-தேவர் சண்டை என்று சித்தரிக்கிறார்களா? என்று கேட்கிறேன். இதைச் சொல்ல எனக்கு உரிமை இல்லையா? அவர்கள் சொல்லிக் கொள்வது போல் எனக்கும் அந்த உரிமை இருக்கிறது. அன்றிலிருந்து சக்கிலியர்கள், பறையர்கள், பள்ளர்கள் இவர்களிடையே வேற்றுமை இருந்து வருகிறது. பறையர் களுக்கும் மற்ற ஜாதி இந்துக்களுக்கும் உள்ள வேற்றுமை யைக் காட்டிலும், பள்ளர்களுக்கும் பறையர் களுக்கும் இடையே வேற்றுமை அதிகமாக இருக்கிறது. பள்ளர்களுக் கும் பறையர்களுக்கும் போட்டாபோட்டி இருக்கிறது. ஸ்ரீ கக்கன் அவர்களைக் கேட்கிறேன்-இதுவரை பள்ளர் யாராவது மந்திரியாக வந்தார்களா? தென் ஜில்லாவில் பள்ளர்கள் இதைச் சொல்லி பிரசாரம் பண்ணுகின்றார்கள். ஹரிஜனங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களுடைய கொள்கையை எடுத்துச் சொன்னதால், இந்த நிலைமை உண்டாகி யிருக்கிறது என்று நான் சொல்ல உரிமை இல்லையா? பிரச்னையைச் சிக்கல் செய்ததால் என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது? பள்ளர் பறையர் நிலைமையை வைத்து, கக்கன் அவர்கள் மந்திரியான உடன் பள்ளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சதி செய்யப்பட்டது என்று சொல்ல எங்களுக்கு அந்த உரிமை இல்லையா? எல்லா இடத்திலும் வித்தியாசம் இருக்கிறது. வித்தியாசத்தைப் பெரிதுபடுத்தி சமூகத்திலுள்ள அமைதியைப் பாதிக்கக்கூடிய முறையில் நடந்துகொள்ளக் கூடாது என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். SRI. M.C.MUTHUKUMARASWAMY : அவர்களே கனம் அங்கத்தினர் அவர்கள், பேசும்போது, பள்ளர் யாரும் மந்திரியாக வர முடியாது, அதற்கு வசதி இல்லை என்று சொல்கிறார்கள். திரு.எம்.பி.பெரியசாமி அவர்கள் சட்டசபை ஆரம்பித்த முதலே அங்கத்தினராக அருந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி சர்க்கார். அவர்களுக்காக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, இம்மாதிரி குற்றம் சாட்டுவது சரியல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். SRI. P.K.MOOKIAH THEVAR : அங்கத்தினராக இருக்கலாம் அமைச்சராக இல்லையே. அம்மாதிரி சமஉரிமை கொடுக்கப்பட்டால் அதை நான் வரவேற்கிறேன். நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். சகல நன்மையையும் செய்யவேண்டும், ஆத்திரம் கொள்ளக் கூடாது என்று சொல்லுகிறார்கள். மூவேந்தர்கள், ஆண்டவர் பரம்பரை, இன்று மனிதர்களாகப் பிறந்திருக் கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அது சரியல்ல. நீண்ட காலமாக ஹரிஜனங்களுக்குள்ளே அந்த வித்தியாசம் இருந்து வந்திருக்கிறது. அதைப் போக்க வேண்டுமென்ற நிலைமையில்தான் இதைப் பேசுகின்றேனே யொழிய வேறொன்றுமில்லை. தேவர் அவர்கள் ஹரிஜனங்களுக்குப் பாடுபட்டது, அவர்கள் செய்த தொண்டு மற்றவர்கள் யாரும் செய்திருக்க முடியாது, அந்தப் பகுதி சம்பந்தப்பட்டவரை. தேவர் அவர்கள் காந்திஜீயையே மதுரையில் ஒரு தடவை கண்டித்துப் பேசியிருக்கிறார், காந்திக்கே இந்தக் கதியென்றால் ஹரிஜனங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று பாரதி சொன்னார்கள் அதே கூட்டத்தில் சட்ட நிபுணர் அம்பேத்காரைப் படிக்க வைத்த பெருமை திலகரைச் சாரும் அந்தப் பரம்பரையில் வந்தவன் நான் என்று தேவர் பேசினதை பாரதி ஏன் குறிப்பிடவில்லை. சிறு வித்தியாசங்களைப் பெரிதாக்கி, அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தினால் யார் பாதுகாக்கப்பட வெண்டுமென்று சொல்றோமோ அவர்கள் பாதுகாக்கப்பட முடியாமல் போகும். ஜாதிச் சண்டை ஜாதிச் சண்டை என்று பேசிக்கொண்டிருப்பது நாட்டில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தாது. தலைமை தாங்கக்கூடியவர்கள் எவரோ அவர்களைப் பின்பற்றித்தான் நாடு போகிறது. அவர்களைப் பின்பற்றித் தான் நாடு வாழுகிறது. ஜாதிச் சண்டை, ஜாதிச் சண்டை என்ற நிலைமை நீடித்தால், வருங்கால சரித்திரத்தில் நாட்டில் முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கவும் முடியாது. முதுகுளத்தூர் சண்டை ஜாதிச் சண்டை ஆக்கப்பட்டு விட்டது. நியூயார்க் டைம்ஸ் என்னும் பத்திரிகையும், பி.பி.ஸி. ரேடியோவும் இதைப்பற்றி குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்தியாவில் ஜாதிப் பூரல் இருக்கிறது. உள் நாட்டுக் குழப்பமிருக்கிறது. அதனால், அயல் நாட்டிலிருந்த நாங்கள் கடன் கொடுக்க முடியாது. அவர்களை நம்பி நாங்கள் எப்படிக் கடன் கொடுப்போம் என்ற முறையில் வெளிநாட்டுப் பத்திரிகையில் எழுதுகிறார்கள். முதுகுளத்தூர் கலவரத்தால் ஐந்தாண்டுத் திட்டமே பாதிக்கப்பட்டிருக்கிறது. டைம்ஸ் பத்திரிகை என்ன சொல்கிறது? "கவர்ன்மென்ட் சுட்டது தவறு, என்குவைரி போடவில்லை, ஜட்ஜைப் போட்டு விசாரிக்காமல் இருக்கிறது” என்று எழுதுகிறது. இதிலிருந்து வருகிற அவமானம் நாட்டில் பிறந்த எல்லோருக்கும்தான். வரி கொடுக்கிற மக்கள் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய அவமானம் இது. அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய அவமானம் எங்களையும் சார்ந்ததே. அதைக் கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா? என்று நான் கேட்கிறேன். இந்த நிலையில் ஜாதி வித்தியாசத்தை யாரும் விரும்பவில்லை. மனிதனாகப் பிறந்தவர்கள், நாகரிகம் உள்ளவர்கள் யாரும் விரும்பமாட்டார்கள். நாங்கள் ஹரிஜனங்களுக்கு விரோதி அல்ல. ஹரிஜனங்கள் ஆயிரம் அடி அடித்தாலும் நாங்கள் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அங்குள்ள விவசாய நிலைமையையும் நிலத்தின் நிலைமையையும் பெரிதாக்கவேண்டாம். நாங்களும் விவசாயி, அவர்களும் விவசாயி. ஒரே வாய்க்காலில் படுக்கிறோம், ஒரே வரப்பில் படுக்கிறோம் அந்தநேரத்தில் சிறு சண்டைகள் நேரிடலாம். ஒருவர் 'பண்டை' மற்றொருவர் ஆண்டிருக்கலாம். இந்தச் சண்டைகளையெல்லாம் பெரிதாக்கி வியாபாரம் செய்து அரசியல் விவகாரமாகச் செய்வது மிகவும் அவமானகர மாகும். நாடு விளங்காது. அதற்காக துப்பாக்கி கொண்டா தாக்கவேண்டும்? அதற்கு சட்டம் இருக்கிறது. கோர்ட்டுகள் இருக்கின்றன. நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஆட்சேபணை இல்லை. முத்துராமலிங்கத் தேவருக்கு நீங்கள் நன்மை செய்தால் தேவர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம். துப்பாக்கி மூலமாகவா ஹரிஜனங்களுக்கு சேவை செய்யவேண்டும்? உங்கள் காந்தீயக் கொள்கை என்ன ஆயிற்று? அஹிம்சை என்ன ஆயிற்று? பஞ்சசீலக் கொள்கை என்ன ஆயிற்று? துப்பாக்கி கொண்டு சுடவேண்டிய அவசியம் ஏற்பட்டதா? துப்பாக்கி கொண்டு சுடுவதற்கு முன்னால் தடிகொண்டு அடிப்பது வழக்கமில்லையா? உங்களிடம் டியர் கேஸ் இல்லையா? அதை ஏன் உபயோகப்படுத்தக்கூடாது? உங்களிடம் போலீஸ் படை இல்லையா? 1930-வது வருஷத்திலிருந்து யோசித்துக் கொண்டிருக் கிறீர்களே? 1932-வது வருஷத்திலிருந்து யோசித்து திட்டம் போட்டிருக்கிறீர்களே? ஏன் கலகம் வராமல் தடுப்பதற்கு ஏராளமான போலீஸ் படையை பாதுகாக்கும் முறையில் வைத்திருக்கக்கூடாதா? கேஸ்கள் போடக்கூடாதா? அரசாங்கமே அரசியல் சண்டையை ஜாதிச் சண்டையாக்க அத்தனை முயற்சியும் எடுத்திருக்கிறது மிகவும் மோசமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. உலக சரித்திரத் திலேயே ஒரு மோசமான நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. காமராஜ் அவர்களுக்கும் ஸ்ரீ தேவர் அவர்களுக்கும் பல காரணங்களைக்கொண்டு அரசியல் ரீதியில் பல விரோதங்கள் இருக்கலாம். ஒரு கட்சிக்குள்ளேயே இருப்பவர்களிடம் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். போட்டிகள் ஏற்படலாம், அதற்காக வாய்ப்பு வந்தவுடன் தலைவர்களைப் பின்பற்றிய ஜனங்களைப் பழிவாங்குவது மிகவும் அவமானம். அதே ஜில்லாவில் புயல் வெள்ளம் ஏற்பட்ட பொழுது முழங்கால் தண்ணீரிலே இறங்கி உழைத்தார் காமராஜ் அவர்கள். அப்படியிருக்கும்பொழுது அங்கு ரத்த ஆறு ஓடும்பொழுது 20 வருஷ விரோதம் கலகத்துக்கு காரணம் என்று அவர் வாயாலேயே சொன்னார். நால்வர் கமிட்டி போட்டு தேவரைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்களா? என்று கேட்டால், தேவர் வந்தால் அமைதி ஏற்படுத்திவிடுவார் என்ற பொறாமை யினால் அவர் மறுத்துவிட்டார். இதெல்லாம் அரசியல் ஆகாதா? தேவர் துப்பாக்கியைச் சோளத்தட்டை என்று சொன்னதற்காகவா ஐந்து துப்பாக்கி கொண்டு சுட்டீர்கள்? ஜாதிச் சண்டை அங்கு இல்லை. வருஷக்கணக்கில் ஹரிஜனங்களும் நாங்களும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இந்த அவமானம் எங்களைச் சார்ந்தது அல்ல, மக்களைச் சார்ந்தது அல்ல, உங்களைத்தான் சாரும். ஹரிஜனங்கள் எங்களோடு நிலத்தில் இருக்கிறார்கள். எங்களையும் அவர்களையும் பிரிக்க முடியாது. நாங்கள் மனிதனைச் சுரண்டிப் பிழைக்கவில்லை. நிலத்தைச் சுரண்டிப்23 பிழைக்கிறோம். நாங்கள் மழையை நம்பிப் பிழைக்கிறோம். தயவுசெய்து எங்கள் மனதைப் புண்படுத்த வேண்டாம். நாங்கள் ஹரிஜனங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சபையில் உள்ளவர்கள் கட்சி பிரதி கட்சி இல்லாமல் ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடத்தட்டும். நாங்கள் குற்றம் செய்திருந்தால் பிறகு தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். பல கட்சிக்காரர்கள் பலவிதமாக புகார்கள் செய்கிறார்கள். எத்தனை பயங்கரமாகப் பேசுகிறார்கள்? உங்கள் அஹிம்ஸை தத்துவம் எங்கே போயிற்று? ஊழியர்களாக இருந்து, தலைவர்கள் ஆகி மந்திரிகள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் நாட்டிற்கே, மனித வர்க்கத்திற்கே அவமானமான காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் ராஜிநாமா செய்துவிட்டு அந்தப் பாவத்தை கழுவ கழுவ வேண்டும் என்று சொல்லிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன். - மூக்கையாத்தேவர். ********* ********** *********** ******* இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரச் சூழ்நிலையையும், பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டதையும் கண்டித்து, தமிழக சட்டப் பேரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் அப்போதைய காமராஜ் ஆட்சி மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து 1957 அக்டோபர் 30 அன்று மூக்கையாத்தேவர் பேசியது. நூல்: சட்டசபையில் மூக்கையாத்தேவர் ஆசிரியர் : கே.ஜீவபாரதி முகநூல் பதிவு : Sadaiyandi Puregold Sms

No comments:

Post a Comment