இற்றைய உலகம் உண்மையினின்றும் மாறுபட்ட நீசத்தனத்தின் உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. அரசியல் சூதுகள் மலிந்த திறமையில்லாதோரைத் "தீரர்கள்' எனப் பறையடிக்கும் மாய்மாலப் பத்திரிகைகள் நிறைந்த காலம் இது.
அரசியலில் பங்கு பெறுபவர் எவருக்குப் பதிலாக வந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையே கருத்தில் கொண்டு, தனக்கு வேண்டியவரும் அரசியல் ஞானசூன்யனான ஒருவரை வானளாவத் தூக்கிப்பாடும் பத்திரிகைகளும், சினிமா நடிகரொருவர் தன் குலத்தவர், தனக்கு வேண்டியவர் என்பதற்காக நடிப்புத் திறமையற்ற அவரைப் புகழ்ந்து பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிகைகளும், வேதாந்தம் ஆத்மார்த்திகம் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்களை மகரிஷிகள் என்றும் புகழ்பாடும் மாய்மாலப் பத்திரிகைகளும் பெருத்துப்போன காலம் இது.
சன்மார்க்க நோக்கமின்மையும், ஆத்மார்த்திகத் துறையில் உண்மைக்குப் புறம்பான, போலிச் செயல்களும் மலிந்து போனதன் பயனாக இத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
உதாரணமாகப் பணம் படைத்த செல்வனொருவனிடம் சென்று "நீங்கள் எப்படிப் பணக்காரரானீர்கள்?" என்று கேட்டால் "நான்பட்ட பிரயாசை சொற்பமா? அதன் பயனாகவே கிடைத்தது” என்று கூறுவான். ஆனால் பணத்தை இழந்து தரித்திர நிலையடைந்த போது போய்,"நீர் எவ்வாறு தரித்திரரானீர்?" என்று கேட்டால், "நான் குடித்தேன்; விபச்சாரம் செய்தேன்; கேளிக்கையில் செலவு செய்தேன்; இதனால் தரித்திரனானேன்" என்று ஒப்புக் கொள்வானா? ஒரு போதும் மாட்டான். "கடவுள் என்னைக் கெடுத்து விட்டார்" என்றே கூறுவான்.
வாழும் காலத்தில் ஏற்பட்ட பிராபல்யத்திற்கும், தரித்திரகால அழிவிற்கும் தானே பொறுப்பு என்பதை மனிதன் ஒப்புக் கொள்வதில்லை. இதே நிலைதான் இற்றைய உலகில் ஏற்பட்டுள்ளது.
இற்றைய நிலையில் மதத்தின் பேரால் பல குறைகள் கூறப்படுகின்றன. குறைகளில்லாத மதமே கிடையாது. மார்க்கம் ஒன்று வந்தது. பின்னர் முறையே ஞானியும், யோகியும், கர்ம வீரனும், பக்தனும் தோன்றி தத்தம் வழியில் வழிபாடு செய்தனர். இந்த நால்வகையான முடிவும் ஒன்றேதான். நதிகள் பல. ஆனால் சங்கமமாகும் கடல் ஒன்று.
இற்றைய சீர்திருத்தவாதிகளை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் சமமான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாகக் காணோம். இஸ்லாம் மதத்தைக் குறைகூறினால் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாகக் கூடி இவர்களைத் தாக்க வருவார்கள். கிருஸ்துவ அரசாங்கம் ஆட்சி பீடத்திலிருக்கும் போது அதைப்பற்றி குறை கூறினால் பேசாமல் உள்ளே தள்ளி விடுவார்கள். இதனால்தான் சீர்திருத்தவாதிகள் அவைகளை விட்டு விட்டு இந்துமதத்தை ஏகப்பொதுச் சொத்தாக எடுத்துக் கையாண்டு வருகின்றனர். சீர்திருத்தவாதிகள் இவ்வாறில்லாது சமநோக்கோடு தங்களுடைய காரியங்களைச் செய்ய வேண்டும். - பசும்பொன் தேவர்
(பசும்பொன் தேவர் ஐயா 1949ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மதுரை வெள்ளியம்பலம் மண்டபத்தில் ஆற்றிய ஆன்மீக உரையின் ஒரு பகுதி. )
இணைய பதிவு : Sadaiyandi Puregold Sms
நூல்: பொக்கிஷம் ( ஆசிரியர் க.பூபதிராஜா)
பக்கம் : 189 &190