Friday, 25 April 2025

பாராளுமன்றத்தில் பசும்பொன் தேவர் காஷ்மீர் பற்றி பேச்சு

அன்றே காஷ்மீரை பற்றி கணித்து சொன்ன தேசிய தெய்வீகத்தேவர் திருமகனார் !

எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் நடத்துகின்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் சின்னஞ்சிறிய சம்பவமாகத்தான் தெரியும். ஆனால், ஒரு பெரிய ஆபத்தான மொத்தச் சம்பவத்தைப் பாகிஸ்தானிகள் இவ்விதச் சிறுசம்பவங்களால் உருவாக்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை! சிறிய ஆபத்து பெரிதாக வளரும் மோசமான கட்டத்தில் நாம் நிற்கிறோம்.

காஷ்மீர் விவகாரம் எப்படி ஆகிவிட்டிருக்கிறது தெரியுமா?

பாகிஸ்தானை காஷ்மீருக்குள் அனுமதித்துவிட்டு நாம் ஜம்முவில் இருக்கிறோம். இதன் பயனாய் பாகிஸ்தான் ஒன்று மட்டுமல்ல - இந்தியாவிற்குள் ஒரு பாகிஸ்தான் என்ற கதியை அடைந்துவிட்டது பிரச்சனை! 

இந்த எல்லைப் பிரச்சனை, என்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை - நித்தியப் பிரச்சனையாகி வருகிறது. பெரியவர்களின் வாய்களிலிருந்து இம்மாதிரி பதில்கள் வருவதற்கு வேதனைப்படுகிறேன். பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா?

ஒரு தனிப்பட்ட சிறு குடும்பத்தினர் கூட பாகப்பிரிவினை செய்து கொண்டுவிட்டால், அவரவர் பாகத்திற்கான பகுதியை சிறு சுவர் எழுப்புவதன் மூலம் பிரித்துக் கொள்கிறார்கள். சுவர் எழுப்பாது போனாலும் தமது பகுதியைப் பிரத்துக் காட்டிக்கொள்ள ஒரு கோடாவது கிழித்துக் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். சொத்து சுகங்களையும் முறைப்படி பிரத்தே தீருவார்கள்.

ஆனால் ஒரு நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 வருடங்களாகியும் எல்லை நிர்ணயங்கூட இன்னும் சரிவரச் செயல்படவில்லை என்பது அதிசயத்திலும் அதிசயம்! இந்த அலட்சிய நிலை பல ஆபத்துகளை பலவித முறைகளில் உற்பத்தி செய்து கொண்டே போகிறது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதுபற்றிக் கேள்வி எழும்போது இன்னும் எல்லைக்கோடு கிழித்தாகவில்லை - அதனால் எதுவும் சொல்வதற்கில்லை - அச்சம்பவங்களை எம்.பி.கள் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.

நமது அரசியல் நிர்ணயத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்பது தெரிந்தும், பாகிஸ்தான் பிரதமரும் நமது பிரதமரும் பேச்சு நடத்திப் பகுதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். இந்தப் பகுதிமாற்ற விவகாரம் அ.நி. சட்டத்தின் 3வது பிரிவுப்படி தவறு என்று கேள்விகள் எழுப்பப்பட்டால், "இல்லை இல்லை அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருப்பதால் 3வது சட்டப்பிரிவு அதற்குக் குறுக்கிடாது - எனவே அதைப்பற்றி எந்த சர்ச்சையும் வேண்டாம்" என்று ஒரேடியாக மொத்தத்தில் பதில் சொல்லப்பட்டு விடுகிறது! உண்மையில் அப்பகுதி விவாதத்திற்குரியதாக இருந்தால் அதன் பரிகாரத்துக்குச் சட்டமில்லையா?

எதையும் சட்ட முறைப்படி செய்தால் என்ன? சர்க்கார் தரப்பில் செய்யப்படும் எதையும் முறைப்படி செய்வதற்காகவே சட்டம் வகுக்கப்படுகிறது. சட்ட சம்மதமின்றி சுயநோக்கத்துக்கு எதையும் செய்வதாக இருந்தால் சட்டம்தான் எதற்கு?

லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா? என்று கேட்கிறேன். #பசும்பொன்_தேவர்.

1959 பிப்ரவரி 16ம் தேதி மாலை 4.45, மணிக்கு பாராளுமன்த்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்ற தொகுதி MP ஆக இருந்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி.

Monday, 21 April 2025

திருஉத்திரகோசமங்கை திருக்கோவிலில் கோவை இடிகரை கிராமிய குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம்

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திருஉத்திரகோசமங்கை திருக்கோவிலில் கோவை இடிகரை கிராமிய குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம். புகைப்பட தொகுப்பு