Friday, 3 July 2015

பேரரசர் முத்துவடுகநாததேவர் திருவிழா

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர்

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்திய சுதந்திர வரலாற்றில் முதன்முதலில்
போரில் வீரமரணம் அடைந்தவர் அதே போல் போரில் தோற்கடிக்கப்படாத இந்திய மன்னரும்
இவரே வெற்றி அல்லது வீரமரணம் என்று வாழ்ந்தவர்தான் வீரப்பேரரசர்
முத்துவடுகநாதத் தேவர்

பிறப்பு

சிவகங்கை சீமையை உருவாக்கி முதல் மன்னராக முடிசூட்டப்பட்ட வீரப்பேரரசர்
சசிவர்ணத் தேவருக்கும் ராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கும் 1727ஆம் ஆண்டு
மகனாக பிறந்தார் முத்துவடுகநாதத் தேவர்

இளமை

முத்துவடுகநாதத் தேவர் அரண்மனையில் பண்டிதர்கள் மூலம் கல்வி கற்றார், தமிழ்
இலக்கண , இலக்கிய நூல்களை கற்றார் தமிழ் மீது தீரா பற்றோடு இருந்தார்.
அத்துடன் தற்காப்பு கலைகளான வாள் வீசுதல்,ஈட்டி எறிதல்,குதிரை
ஏற்றம்,மல்யுத்தம்,வளரி வீசுதல் போன்ற கலைகளை கற்று வீரத்துடன் சிறந்து
விளங்கினார். தந்தையின் ஆட்சியில் மக்கள் செழிப்போடு வாழ்ந்தனர்
முத்துவடுகநாதத் தேவரும் தந்தையை போலவே மக்களின் குறைகளை கேட்டு அறிந்து
மக்கள் நலம் காத்தார்.

திருமணம்

மன்னர் சசிவர்ணத் தேவர் அவர்கள் சேது சீமை மன்னர் செல்லமுத்து சேதுபதியின்
மகள் வரலாறு புகழும் வீரமங்கை வேலுநாச்சியாரை தம் மகன் முத்துவடுகநாதத்
தேவருக்கு திருமணம் செய்ய நிச்சயித்தார். 1746ஆம் ஆண்டு பெரிய மறவர் நாடும்
சின்ன மறவர் நாடும் மகிழ திருவிழா போல நடந்தது முத்துவடுகநாதத் தேவர் ,
வேலுநாச்சியார் திருமணம்.

தந்தை மரணம்

மன்னர் சசிவர்ணத் தேவர் 1750ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இளைய மன்னர்
முத்துவடுகநாதத் தேவர் மீளா துயரமானார்.வேலுநாச்சியார் ஆறுதல் சொல்ல
வார்த்தையில்லாமல் தவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்றார்

1750ஆம் ஆண்டு முத்துவடுகநாதத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்டார். மாமன்னர்
முத்துவடுகநாதத் தேவர் ஆட்சியில் சிவகங்கை சீமையில் ஊர்கள் தோறும் ஆலயங்கள்
எழுப்பினார். வானை முத்தமிடும் வண்ணக்கோபுரங்கள் அமைத்தார்.காசி முதல்
இராமேசுவரம் வரை அறச்சாலைகள்,அன்னச்சாலைகள் ,அன்னச்சத்திரங்கள்
தோற்றுவித்தார். திருவாரூர் தியாகராசப் பெருமானுக்கு வழிபாடு நாளும் நடக்க
வளமிக்க இரு ஊர்களை தானமாக தந்தார். வேதங்கள் வளர ஆகமங்கள் ஓங்க,அறியாமை நீங்க
இலவசப்பள்ளிகள் எண்ணில்லாதவை அமைத்தார். சாலைகள் ஊர் தோறும் அமைத்தார். நிழல்
தரும் மரங்களை நாட்டினார். நீர் வேட்கை தணிக்க கிணறுகள் தோண்டினார். ஆடு
மாடுகள் உலவ காடுகள்! அவை உண்ணக் கழனிகள். நீர் அருந்த அகன்ற குளங்கள் உவந்து
அமைத்தார். காடு திருத்தி கழனிகளை உருவாக்கினார். செந்நெல், கரும்பை,வாழையை
விளைவித்தார். கல்விச்சாலைகள் கண்டார் கலை வளர்த்தார். அறங்கள் பல செய்தார்.
ஆன்றோர் தம் திறங்களைப் பெருக்கினார். அருந்தமிழ் வளர்த்தார் பெருந்தமிழ்
புலவர் பெருமக்களுக்கு அள்ளி அள்ளித் தந்தார். ஊர்களை தானமாக தந்து
மகிழ்ந்தார். தன்னாட்டு மக்களை தன் உயிரினும் மேலாக கருதினார். அவர் தம் இன்ப
துன்பத்தில் நாளும் பங்கு பெற்றார்.

தமிழிலே எழுந்த முதல் உரைநூல்

மாமன்னர் முத்துவடுகநாதத் தேவரின் வீரம், தீரம்,ஈரம் புலவர் பெருமக்களுக்கு
வாரி வழங்கும் வள்ளல் தன்மை, மன்னர் கொண்டாடும் மகாசிவராத்திரி மகிமை, அதில்
மக்கள் பங்கேற்று மகிழ்வுறும் மகிழ்ச்சி, பிற மன்னர்களின் பங்கேற்ப்பு, அரசர்
அரசர் அவரவர் தகுதிக்கேற்ப வாரி வழங்கும் பரிசை, அரசரது அறச்செயல்கள்,
அருந்திறல் போன்றவற்றை விளக்கி அதிமதுரத்தமிழில் போற்றி உரைநடையிலே
வசனசம்பிரதாயக் கவிதை என்ற புதுவகை நூலை பிரான்மலை தமிழ் சக்கிரவர்த்தி
முத்துக்குட்டி புலவர் யாத்தினார். அதுதான் தமிழிலே எழுதப்பட்ட முதல் உரைநூல்.
அது பர்மா நாட்டில் இரங்கூன் நகரில் அச்சேரியது. அதற்கு அன்பளிப்பாக சாத்தசேரி
என்ற ஊரையே தந்தார்.

"தைக்கோடிப்பிறைப்போலத் தமிழ்க்கோடிப்புலவர் வந்தால் திக்கோடியலையாமல்
தினங்கோடி பொன்னும் பொருளும் கொடை கொடுக்கும்"

என்று தன்னைப் பாடிய பிரான்மலை குழந்தை கவிராயருக்கு பொன்னும் பொருளும்
அள்ளித் தந்தார். அவர் மன்னரின் அருளிலே களித்து கண்ணுடைய அம்மன் பள்ளு என்ற
அழகிய சிற்றிலக்கியத்தையும் படைத்து அம்மண்ணின் மாண்பை போற்றி பாடியுள்ளார்.

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர்

சிவகங்கை அரசர் முத்துவடுகநாதத் தேவர் பிறவியிலே வீரஞ்செரிந்தவர். நல்ல
போர்ப்பயிற்சி பெற்றவர். போர் நுணுக்கங்களை நன்கு தெரிந்தவர். போர் என்று
கூறியவுடன் தானே தலைமை தாங்கி போர் புரியும் பேராண்மை படைத்தவர்.

1752ஆம் ஆண்டில் மதுரை மண்டலத்தை கைப்பற்றிய மாவீரர் கோப் துரையுடன்
போரிட்டார். கோப் துரை வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவருக்கு
தாக்குப்பிடிக்க முடியாமல் போர்களத்தை விட்டே தப்பி ஓடினான்.

1762 ஆம் ஆண்டு கவர்னர் "லார்ட்பிகாட்" சிவகங்கை சீமைக்கு 50 ஆயிரம் வரிகட்டச்
சொன்னார். திறை செலுத்துவது எங்கள் பரம்பரையிலே இல்லை. நாங்கள் இந்நாட்டின்
முடிமன்னர்கள் ஒரு காசும் வரிசெலுத்த முடியாது என்று கூறி விரட்டி அடித்தார்
கவர்னர் லார்ட்பிகாட் தலை தப்பினால் போதும் என்று வெகுண்டு ஓடினார்.

1764 ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பின் நிர்வாகியாக, மதுரை நிர்வாகம் செய்த
கம்மந்தான் கான்காசிப் சிவகங்கைக்கு வரி கேட்டு வந்தார். அவருடன் வீரப்பேரரசர்
முத்துவடுகநாதத் தேவர் மோதி அவரை சிக்கந்தர் சாவடி புளிய மரத்தில்
தூக்கிலிட்டு கொன்றார்

மகள் பிறப்பு

1770 ஆம் ஆண்டு வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் வேலுநாச்சியார்
அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் தவப்புதல்வியாக பிறக்கிறார் . வீரப்பேரரசர்
முத்துவடுகநாதத் தேவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மறவர் சீமை மக்களுக்கு விருந்து
படைத்து இன்பமுற்றார்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் 1772 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரசர் ரிபேல்
முத்துராமலிங்க சேதுபதியிடம் வரி கேட்டனர். அவர் வயதோ பதிமூண்று! மிக மிக
சிறியவர். அவர் அப்போதே திறை செலுத்துவது எங்கள் நாட்டுக்கு நாங்கள் செய்யும்
துரோகம் என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் உள்ளவரை வரிகட்ட மாட்டேன் என்று
ஒரேயடியாக மறுத்தார். அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர்! சென்னை செயின்ட் சார்ஜ்
கோட்டையில் அடைத்தனர். அதை கேட்டும் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதத் தேவர்
அடங்கவில்லை. சிறிதும் அஞ்சவில்லை வாருங்கள் பார்ப்போம், சந்திப்போம்
போர்களத்தில் என்று ஆங்கிலேயர்களை நோக்கி அறைக்கூவல் விடுத்தார்.

ஆங்கிலேயர் சூழ்ச்சி

சிவகங்கை சீமையை போரில் வெல்ல முடியாது. அங்கே வீரமிக்க மறவர்கள் மிகுந்து
இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் முதிர்ந்த அமைச்சர் தாண்டவராயன்
பிள்ளை இருக்கிறார். எனவே முத்துவடுகநாதத் தேவரை எளிதில் வெல்ல முடியாது என்று
எண்ணினர். சூழ்ச்சியிலே, சூதினாலே வெல்ல திட்டமிட்டனர்.

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் நாள்தோறும் வணங்கும் தன் இஷ்ட தெய்வமான
காளையார்கோவில் சோமேஸ்சுவரரை அதிகாலையில் வணங்குவார். அவரை வழிபட்டே தன்
அன்றாடக் கடமைகளை செய்வார். அப்போது அவர் போர்க்கருவிகள் ஏதும் இன்றி உண்மை
அடியாராக வழிபட செல்வார். அந்த நேரத்தில் வெள்ளைச் சிப்பாய்களைக் கொண்டு
கோயிலை முற்றுகை இடச்செய்தனர். கோயிலை சுற்றிலும் பீரங்கிகளை நிறுத்தினர்.
துப்பாக்கியால் சுட்டனர் தோட்டாக்கள் கோயில் மதிலைத் துளைத்தனர்.

வீரப்பேரரசர் சூளுரை

ஏ சொர்ணக் காளிசுவரா வரங்கொடு ! எங்கள் சொக்கத் தங்கமே ! எங்கள் அங்கமே ! நீ
அருள் புரி செல்கிறேன் போர்களத்திற்க்கு! என் மக்கள் சுதந்திரப் புருசர்களாகத்
திரிய விடுதலைச் சிட்டுக்களாய் வானத்தை வட்டமிட எனை ஈன்ற தியாக பூமியாம்
சிவகங்கை சீமை செகஜோதியாய் விளங்க செல்கிறேன் போர்க்களம் என்று சூழுரைத்தார்
மதயானை எனப் போர்க்களம் புகுந்தார்.

"ஒன்று நான், இன்று இந்தப் புனிதப்போரில், என் தாயின் தன்மானம் காக்கும்
வீரப்போரில் வெற்றி பெற்றால் உனக்கு நவசக்தி கோபுரம் அமைப்பேன்! அன்றேல்
வீரசொர்க்கம் புகுவேன்! என் வீரபத்தினி ஏக வீரப்பேரரசி வேலுநாச்சியார். என்
பணியை தொடர்வாள்! இந்நாட்டை காப்பாள்! இன்ப வீட்டை காப்பாள்! "

என்று கர்சித்தார் வெள்ளையர்களின் தலைகளை பந்தாடினார் தன் கைவளரி கொண்டு
சிந்துபாடினார்.

முடிவுரை

வெள்ளைச் சிப்பாய்களின் துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் பரந்தன
பரங்கியரின் பீரங்கி தோட்டாக்களை வீரப்பேரரசர் தன் நெஞ்சில் தாங்கினார் !
தாயகம் வாழ்க! என் சிவகங்கை சீமை வாழ்க! என்று வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்
தேவர் முழங்கினார். விடுதலை வேங்கை வீழ்ந்தது வீரம் சரிந்தது செங்குருதி
பாய்ந்தது. சிவகங்கை மண் சிவப்பாக காட்சி தருகிறது!

25-06-1772 வீர சொர்க்கம் அடைந்தார் வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்தேவர்

243ஆம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் காளையார்கோவில் நினைவாலயத்தில் வீரப்பேரரசரை வணங்குவோம் அனைவரும் வாரீர்

         - சிவகங்கை சமஸ்தான வரலாறு